Monday, 29 April 2019

நீலநதி




                                       
  லக்ஷ்மி சரவணகுமார்..

Image result for devdasi dance paintings

சுழித்தோடும் இந்நதியின் நீர்ப்பரப்பினூடாய் கசியும் வாசத்தில் பசபசப்பான குறுமணல்கள் கொண்டிருக்கும் நித்சலனம். மூன்று தினங்களாய்ப் பெய்தோய்ந்த பெருமழைக்குப் பின்பாக தளிர்த்திருக்கும் கரையோர நாணல்களின் பச்சையினூடாய் சகதிக்கால் நகர்த்தி வந்துகொண்டிருக்கிறானவன். மாதங்களுக்கு முன்பாய் நீர்வரத்தற்றப்போய் ஆள்நடமாட்டமின்றி நாதியற்ற இக்கரையில் ஓடுகளாய் எஞ்சிய நண்டுகளையும் சிப்பிகளையும் பொறுக்கி சகதிநீர் ஊறும் சிறு சிறு நீர்பரப்பில் விட்டுவந்திருந்தான். எப்படியும் வாய்க்கும் உயிர்ப்பென்னும் நம்பிக்கையுடன். நீரூட்டம் பெருகுவதற்கு சமீபமான தினங்களில் தன் வீட்டின் பால்கனி முகப்பிலிருந்து வினோதமான உருவங்களின் அசைவுகளை நதியில் கவனித்தவனுக்கு உறக்கமின்மை வளர்ந்தது. முதலில் நாளுக்கு சில மணிநேரங்களெனவும் பின்வெகு வேகமான தீவிரத்தில் பெருகிய உறக்கமின்மை சில நிமிடங்களுக்கான உறக்கத்தினை மட்டுமே தந்தவனை கபளீகரம் செய்திருந்தது.
கொம்புகள் சூடுவைக்கப்பட்ட உழவுமாடுகளின் அசைவற்ற கண்கள், நாள்பட்ட ரோகிகளின் நாற்றம் பீடித்த தாவரங்கள், கடல் கடந்த தேசத்தின் தேக்கு மரங்களின் ஆவிகுடித்த நூற்றாண்டு கால கட்டில் நாற்காலிகளை அவ்வறை நிராதரவானதொரு வெளியாய் மாற்றிக்கொண்டிருந்தது நதிநீர் அவனுறக்கத்தில். உறங்கி விழிக்கிற கனங்கள்தோறும் அதிர்ச்சியுற்றவனாய்த் தம் படுக்கையிலிருந்து எழுந்தோடி வருபவன் கண்சாட்சியாய் கண்டும் நம்பவியலாதவனாயிருந்தான் அவ்வூரின் இருப்பை.
     சிதைவுகளின் நெடியப்பிய புளிப்பு மனிதனாய் முழுக்க நீர்மை படர்ந்துவிட்டிருந்தது மேனியில். முடிவுறாத கனவுகளின் நீள்நாவுகள் விருப்பத்துடன் வருடியதில் இளஞ்சூடாய் பரவிப்பெருகியது நஞ்சு. தனக்காக கிடத்தப்படும் படுக்கையில் நெடுநாள் பாதுகாக்கப்படும் சவத்தின் துர்வாடையினையும் ஸர்ப்பங்கள் புணர்கையில் வெளிப்படும் மூர்க்கமும் பிண்ணிக்கிடந்ததாய் உணர்ந்தவனுக்கு கைவிரல்கள் மெலிந்து உதிரம் கட்டிப்போயிருந்தது. புதுவகையான நோயெனக் கருதி மேற்கொண்ட வைத்தியத்தில் மருந்துகள் கொடுக்க முடிந்ததெல்லாம் மிகுதியான தளர்வினையும் உடல்நடுக்கத்தினையும்தான்.
நாற்பது வயதிற்கு சமீபமாய் வந்திருந்தவனின் மயிர்க்கற்றைகள் இயல்பிற்கதிகமாய் நரைத்துப் பூத்திருந்தது. தனித்துவமான உடல்வாசனையென சொல்ல முடியாத அவனின் கபாலத்தில் மட்டும் நாகலிங்கப் பூக்களின் மகரந்த வாசனை. நிறமும் கூட பூர்ணமான வெள்ளையின் ஊடுபரவலாய் மெல்லிய பொன்னிறமாகவேயிருந்தன மயிர்கள். ஊரில் எஞ்சிப்போயிருக்கும் கடைசிக் குதிரைக்காரன் முத்துக்கிழவனின் வண்டியில் போட்டு வைத்தியத்திற்கு அழைத்துப்போன நாட்களில் திரும்பி வரும் வரையிலும் அவ்வூர் பாதுகாப்பாயிருக்குமென உறுதியில்லை அவனிடம். அரைமனதாய்   சம்மதித்துச் சென்றவன் சிலமுறைகளுக்குப் பின்பு தனக்குக் குணப்படுத்தும்படியான நோயெதுவுமில்லையென எங்கும் வர மறுத்துவிட்டிருந்தான். அபரிமிதமான சிதைவினை வெளிக்கொண்டிருப்பது தேகமாயிருப்பினும் அவனை வருத்திக் கொண்டிருப்பது  மனமாக மட்டுமேயிருக்க முடியுமென நிச்சயமாக நம்பினர் வீட்டில். சில தினங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டன வைத்யமும் மருந்துகளும். அவனுக்காய் வாங்கி வைக்கப்பட்டிருந்த பச்சைநிற லேகியங்கள் பாதி பயன்படுத்தப்பட்டு நிறம்மாறி நீலமாகிப்போயிருந்தது.   

                                                2
ஊரின் சாணம் மணக்கும் அதிகாலை வீதிகளில் குளித்து முடித்து வசீகரமாய் ஊரெழுப்பும் தேவதாசிகளின் இருப்பு பல காலங்களுக்கு முன்பே முடிந்துபோய்விட்டிருந்த்து. அவர்களுக்கென அழகூட்டப்பட்டிருந்த வீதி இன்று ஊர்க்காரர்கலின் ஆக்கிரமிப்பில் உருவிழந்து தன்னியல்பின்றியும் முகமற்றதாகவும் போனது. எவர்பொருட்டும் அக்கறை கொண்டிரவியலாத ஏமாற்றங்கள்தான். காலத்தின் மிச்சத்தினை மிக மெதுவாக பிரிய போராடிக்கொண்டிருக்கும் மூச்சுக்காற்றின் ஈரப்பசையோடு நிறுத்தி வைத்திருக்கிறாள் கடைசி தேவதாசியான ராஜம்மாள். இப்படியொருத்தி இருப்பதனை ஊரில் அறிந்திருப்பவர்கள் வெகுசிலர்தான்.
விடிகாலையினைப் பற்றின குழப்பங்கள் துளியுமின்றி கிடந்த முந்தைய இரவின் கடைசி மணிநேரத்தில்; நிரந்தர துயில்கொள்ள வேண்டி கண்மூடியிருந்தாள். வேறெந்த நினைவுமின்றி வதங்கியிருந்த உடலில் தளர்வும் சோர்வும் சரிபாதியனவைகளாய் சூழ்ந்திருந்தன. உயிர்ப்பின் மொத்த எடையையும் சொல்லிவைத்தாற்போல் ஸ்வீகரித்துக் கொண்ட வெண்மயிர்கள் புரண்டு மணற்துகள்களற்ற சிறு அலைகளென புரண்டுகிடந்தது படுக்கையில். இசையின் பரவசத்தில் கால் மாற்றி காலாடும் அவளின் அங்கத்தினை பூர்ணமாக ரஸித்திருந்த அவ்வறைச் சுவர்கள் விடுபடுதலின் துயரில் பொழிவிழக்கத் துவங்கின. ஊருக்குள் கசிந்த இவளின் மரணச்செய்தி பலகாலத்திற்கு முந்தைய நினைவுகளை சிலருக்குத் திருப்பிவிட்டிருக்க அவரவர் நினைவுகளிலிருந்து நிறம் மாறத் துவங்கியிருந்தது ஊர்.
திருவையாறின் தாசித்தெரு தன் ஆகயிறுதியான இருப்பையும் இழந்த தினத்தில் ஆற்றின் நீர்மட்டம் மிகுந்து ஊரெல்லைக்குள் கசியத்துவங்கியிருந்தது நீர். குளிர்காலத்தில் பூச்சிகள் புகுந்துவிடாது தடுக்க இரும்புச்சட்டங்களால் அடைக்கப்பட்டிருந்த ஜன்னல்களின்வழி அந்தக் காலையின் வெளிச்சம் அவ்வறையில் ஊர்ந்து பரவியது. நெடுந்தொலைவிலிருந்து வரவேண்டிய உறவுக்கார்ர்களுக்குத் தகவல் அனுப்ப்பட்டுக்கொண்டிருந்தது. ஒப்பாரி பாடவந்த தெருப்பெண்களின் குரல்களில் சுதியில்லை. ராஜம்மாளின் பாதிவயதுகூட இல்லாதவர்களாய் அவர்களிருந்த்தால் பாடுவதற்குத் தோதான வார்த்தைகள் அவர்களுக்குக் கிடைத்திருக்கவில்லை. தலைமாட்டில் புகையும் சைக்கிள் பிராண்ட் ஊதுபத்திகளின் வாசனைக்கும் அறையெங்கும் பரப்பப்பட்டிருக்கும் மட்டமான அத்தரின் வாசனைக்கும் விழித்திருந்தாள் களிநடனம் கொண்டிருப்பாள் ராஜம்மாள். முதுமையின் எல்லாப் பொழுதுகளிலும் அவ்வீட்டில் இடைவிடாது தொடர்ந்து கொண்டிருந்த அவள் நடனத்தில் நிகழ்த்துபவளும் ரசிப்பவளும் அவள் ஒருத்தியாக மட்டுமேயிருந்தாள். தான் நிகழ்த்தி தானே ரஸிப்பதில்தான் தேவதைகள் தங்களை உணர்ந்துகொள்கிறார்கள். ஒரு காலுயர்த்தி இன்னொரு கால் தரை பாவ கையால் உயர்த்திய காலைப் பிடித்துத் தலைதிரும்பியாடுகையில் புருவங்கள் முதற்கொண்டு வெளிப்படுத்தியபடியிருக்கும் நூற்றாண்டுகளின் காமத்தினை.
நோய்மை அவளுடலை எவ்விதத்திலும் சிதைத்திருக்கவில்லை. ஒரு பிற்பகல் வாயில் ஏதோ முனுமுனுத்தபடியே படுத்துக்கொண்டிருந்தவள் இரண்டு கால்களையும் மெதுவாகத் தூக்கி படுத்த நிலையிலேயே கொள்ளும் தனக்கு விருப்பமானதொரு நிலையில் முழுக்கப் பூத்திருந்த தன் கேசத்தினை படரவிட்டிருந்தவளின் உடலுக்கு மீறியதாயிருந்த்து கேசம். வினோத மலர்களின் வாசணையறிந்து வரும் ஸர்ப்பமென நோய்மை இவளுடலின் மலர்தலில் மிகவேகமாய் தொற்றிக்கொண்டது அக்கனத்தில்தான். அப்படியானதொரு நிலையிலேயே இருப்பதற்குத்தான் விரும்பினாள். முரட்டு யானைகளின் இழைக்கப்பட்ட தந்தத்தில் வார்த்த அவள் கால்களின் மிகமெதுவான அசைவில் அவ்வறை நாணங்கொண்டு இருண்டது. அவள் கால்களிலிருந்து கசியும் பேரொளி நொடியில் யாரொருவரையும் குருடாக்கிவிடக்கூடும், ஒளிர்ந்து தன் பொலிவை கசியவிட்டிருக்கும் அதன் வழவழப்பின் ஆர்வத்துடன் நகர்ந்தது அவளின் பார்வை. தன்னுடலின் ஒவ்வொரு அசைவிற்கும் நூறாயிரம் அர்த்தங்களை வெளிப்படுத்த மிகச்சிறிய வயதிலேயே பழகியிருந்தவளுக்கு அதன் மூர்க்கமும் நிதானமும் பழக்கப்பட்டுப் போனதுதான். வருடங்களாய் ஆடிச்சுழன்ற பாதங்களவை.

                     3
அனந்தனுக்கு கன்னித்தீட்டு என்றனர். அனந்தனுக்கோ, அனந்தனின் குடும்பத்தினருக்கோ  முகந்தெரியாத அக்கன்னியின் மீது கோபமோ வருத்தமோ யாதொன்றுமில்லை. அவன் நோய்மைக்குப் பழக்கப்பட்டுப் போகக்கூடுமென வைத்தியர் அவனை சந்தித்த முதல் தினத்திலேயே சொன்னது குறித்தான தெளிவுகள் எதுவும் இல்லாததால் அப்படியெதும் நடக்காதென்றுதான் நினைத்திருந்தார்கள். ரங்கூனின் தேக்கு மரங்களைச் சுமந்திருக்கும் அவ்வீட்டின் தூண்களுக்கு இவன் சமீபமாகத்தான் விளங்கிக்கொள்ள முடியாதவனாகியிருக்கிறான். அவனப்பா கொஞசம் சொத்துக்களோடு இவ்வூருக்கு வந்து சேர்ந்த சில மாதங்களுக்குப்பின் வந்து சேர்ந்திருந்தன  இந்த ராட்சச தேக்கு மரங்கள். ‘வாண்டையார் வீட்டுக்கு மரம் கப்பல்ல வந்துச்சாமேஎன சனங்கள் பேசிக்கொண்டாலும் உள்ளூற அவ்வளவு பேருக்குமிருந்தது சொல்லமுடியாததொரு ஏக்கம். இந்த ஊரில்தான் அவரின் திருமணம் நடந்து வாழ்க்கை துவங்கியது. கொரடாச்சேரிக்கும் திருவையாறுக்குமாய் வியாபாரம் செய்துகொண்டிருந்தவரின்  திருமணநாட்கள் துவக்கத்தில் அவ்வளவு சுவாரஸ்யமில்லை. முழு அணைப்பிற்கே நொறுங்கிவிடும் சிறுபெண்ணாய் அவரின் மனைவி ஒரு எலிக்குட்டிபோல் அங்குமிங்குமாய் வீட்டில் சுற்றிக் கொண்டிருந்தாள். தன் உடலை தான் கொண்டுவந்து சேர்த்திருந்த இரண்டு சிறு நகைப்பெட்டிகளில் ஒன்றைப்போலவே பாதுகாத்தவளின் தோலில் வெளுப்புமில்லாத கருப்புமில்லாத ஒரு சாம்பல் நிறமிருந்தது பலவருடங்கள் வரையிலும். காமம் ஊர்ந்தடங்கும் இரவுகளில் வாண்டையாரின் அணைப்பிலிருந்து தப்பியோடுமவள் கால்கள் கரப்பான்பூச்சிகளின் அசைவுகளென நான்கு சுவற்றிற்குள் தத்தளித்துக்கொண்டிருக்கும். கரப்பான்பூச்சி முதலில் வெளியறைக்குத் தப்பிச்செல்ல முயன்றது. சில காலங்கள் அம்முயற்சியில் தோற்றபின் வீட்டிற்குவெளியே தப்பியோட எத்தனித்து தோற்றது. பின்பு தன்னுடலின் மீதான அசைவுகளை விரும்பத் துவங்கிய தினங்களில் விருப்பத்துடன் மேலேறி ஊர்ந்த அசையும் உடலை காவிரியின் கரையோரமெங்கும் நீந்தச்செய்து பழக்கி பின் ஏதாவதொரு கரையில் இறக்கிவிட்டு தப்பிவரும் ஏமாற்றுவித்தை கற்றுக்கொண்டிருந்தது.
 வாண்டையார் அவ்வூருக்கு வந்ததினத்தில் முதலாவதாக உறவுக்கரம் நீட்டியதும் இவர் உறவுகொண்டதும் காவிரியுடன்தான். பூர்வீகமான ஊரென்கிற விசயம் ஒருபுறமிருப்பினும் உறவுக்காரர்களென ஒருவரும் அப்போதைக்கு அங்கிருந்திருக்கவில்லை. ரங்கூனின் வீதிகளில் இவன் உறவுகள் வியாபாரிகளாகவும், கூலிகளாகவும் அனேகமாயிருப்பதும், மலாயிலும் சிங்கப்பூரிலும் தோட்டங்களிலிருப்பதும் அப்பொழுது நினைக்க விரும்பாததொன்றாக அவருக்குப் பட்டது. இவ்வூரில் தனக்கென ஒரு இடம் பார்த்து இவர் குடிகொண்டது துவக்கத்தில் ஊருக்கு மையமாக தாசிகளின் வீதிக்கு அடுத்த வீதியில்தான். புதிதாக ஒருவனை உள்வாங்கியிருந்த ஊரின் இயக்கத்தில் மாற்றமெதுவுமில்லை. சிலர் விசாரித்து அடையாளங் கண்டுகொண்டபின் கொஞ்சம் ஆதரவாகவும் அயற்சியாகவுமிருந்தது அவருக்கு. காவிரிக்கு கரை  எதுவுமில்லை, இஷ்டப்படி நெளிந்து வளைந்து சென்றுகொண்டிருந்த அதில் தன்னுடல் கிடத்தின முதல் தினத்திலேயே ஒரு மாபெரும் பெண்ணினுடலில் தான் படர்ந்திருப்பதாய் உணர தன்னையுமறியுமால் அதனோடு முயங்கத் துவங்கியிருந்தார். சிலநிமிடங்களுக்குப்பின் அவனுடலின் சில துளிகள் ஆற்றுநீரின் சுழிப்பில் கலந்து விரைந்து செல்ல, மெளனமாக அதனைக் கவனித்து எழுந்தார். அன்றிலிருந்து அந்நதியுடன் தனக்கு மட்டுமேயான பிரத்யேக உறவிருப்பதாகத் தோன்றியவருக்கு காவிரியின் வழியெங்கும் பயணித்துத் திரும்ப ஆசையிருந்தது. அனந்தன் பிறந்தபிறகு அப்படியானதொரு பயணத்திற்கு தயாரானவரை ஊரில் சிலர் பஞ்சம் பிழைக்கப் போகிறாரென்றும், ஆண்டியாகப் போகிறாரென்றும் சொல்லவும், அப்படியானதொரு பயணம் சாத்தியமில்லாததாகவே போனது.
  
தம் மனைவியின் உடலில் தாவரங்களையும் பாறைகளையும் ஒவ்வொரு முறையும் உணரமுடிந்த தன்னால் ஒருபோதும்  நீர்மையை உணரமுடிந்த்தில்லை என்பது ஒரிரவில் புரிய அதனை சதை போர்த்தியதொரு பிண்டமாக மட்டுமே பார்க்க முடிந்தது அவரால். கரப்பான்பூச்சியின் நீந்தும் விளையாட்டிற்குப் பழகிப்போயிருந்தவள் இவரின் விலகுதலில் அச்சமும் வருத்தமும் கொண்டவளாய் வெவ்வேறானதாய் தன்னுடலை மாற்றி புதிது புதிதான நாடகங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தாள். உழவுமாடுகள் பெருகிய அவ்வூரின் வயல்களில் எப்பொழுதும் சலசலத்துக் கொண்டிருக்கும் நதிநீரின் பிம்பத்தில் தான் விரும்புகிற ஓராயிரம் பெண்களைத் தேடித்தேடி வேட்டையாடிக்கொண்டிருந்த வாண்டையாரின் உடலெங்கும் வறண்ட நிலத்தின் திரட்சியப்பி நிற்க, இன்னும் இன்னுமென அவர் நீரோடு கலப்பது அதிகரித்திருந்தது.
 ஊர் எல்லா தினங்களிலும் ஒரேமாதிரியாகயிருந்தது இங்குமட்டும்தான், சதாவும் பயணிகளாலும் வழிபோக்கர்களாலும் இவ்வூரின் வீதிகளுக்கு பிரத்யேகமானதொரு முகமில்லாமல் போய் எல்லா ஊரின் முகங்களையும் வாசணைகளையும் சுமந்துகொண்டு திரிந்தது. தஞ்சாவூரிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் இங்கு மாலைநேர நடனம் காண வருகிறவர்களின் எண்ணிக்கை நிபந்தனைகளின்றியே குறைந்து போகத்துவங்கியபொழுது இங்கிருந்த தேவதாசிகளும் வெவ்வேறு ஊர்களுக்கு பெயர்ந்து சென்றனர். ராஜம்மாள் சிறுமியாய் நடனம் கற்றுக்கொண்டிருந்த தினத்தில் சொல்லிவைத்தாற்போல் தன்னோடிருக்கும் அவ்வளவுபேருக்கும் மிக அழகான கால்கள் என்பதைத் தெரிந்து கொண்டவளாய் தன்னுடைய கால்களையும் மிக அழகானதொன்றாக்கிக் கொள்ள விரும்பினாள். உள்ளூர்க்காரர்கள் சிலரைத் தவிர்த்து அதிகம் ஆட்களின் வரத்தில்லாத தினங்கள் துவங்கியபொழுது அவளின் அம்மா நாகையிலிருந்து சுபத்ராவிற்குக் கிளம்பிப்போவதாகக் கிளம்பிப் போனாள். தஞ்சையிலிருந்து நாகை செல்லும் ஒரேயொரு ரயில்வண்டிக்காக இவர்கள் காத்திருந்த தினத்தில் இவளுக்குத் தெரிந்திருக்கவில்லை அம்மா ஒருபோதும் திரும்பப்போகிறாளில்லை எனபது. அம்மா நெடுந்தூரப்பயணம் போகிறாளென்பது பெருமையாகவும் சந்தோசமாகவுமிருந்தது.  தஞ்சையிலிருந்து கிளம்பிய மூன்றாவதுநாள் அவளம்மா கைகாட்டி வழியனுப்ப ஒருவருமில்லாமலேயே கப்பலேறியிருந்தாள்.
ராஜம்மாளுக்கு உடலில் நீர் பூத்திருந்தது, சிறுமியாகவுமில்லாமல் குமரியாகவுமில்லாமல் வயதுகளைக் கடந்தவளாய் தன்னுடலை நெகிழ்ந்து திரியும் படகெனக் கொண்டிருந்தாள். இளநொங்கின் வாசனையிலிருக்கும் நெடி அவளின் உடல் முழுக்க கொப்பளித்து வழிய பெண்மையின் வசீகரத் துவாரங்களை தன் நடனத்தால் இன்னும் இன்னுமென அழகூட்டியிருந்தாள்.  கொரடாச்சேரியிலிருந்து கொஞ்சம் விளைச்சலுக்குத் தேவையான தான்ய மூட்டைகளை வாங்கித் திரும்பிய தினத்தில் வாண்டையாரின் கவனம் முதல் முறையாக தாசித்தெருவுக்குத் திரும்பியிருந்தது. காவிரியைப் புணர்ந்து சலித்திருக்கவில்லையெனினும்  நீர்மையை பெண்ணுடலில் தேடுகிறவராகவே இன்னுமிருந்தவர் தேடிச்சென்றது உடலின் நிர்மையைத்தான். நீரில் உறங்குவதென்கிற புரிந்து கொள்ளவியலாததொரு சாகசமது. பதினாறு சன்னல்களிருந்த ராஜம்மாளின் வீட்டில் தாசிகள் ஐவர் மட்டுமே எஞ்சியிருந்தனர். நடனம் அவர்களுக்கு சலித்துவிட்டிருந்தது, நடனம் மட்டுமில்லாமல் வாழ்தலும் புணர்தலும் சலிப்பின் ஆகக்கடைசியான உச்சத்திலிருக்க, கடந்த காலம் பற்றின நினைவுகளை சிதறடிக்கவே ஒவ்வொரு முறையும் அவர்கள் விரும்பினர்.
வாண்டையாருக்கு தான் தேடிய நீருடல் தனக்கு மிக அருகாமையிலேயே இருக்குமென்கிற விசயம் பிடிபட்டபொழுது குமரியென்று சொல்ல முடியாதவொரு சிறுமியை தன்னுடல் இவ்வளவு சுகிக்குமென அவரால் நம்பியிருக்க முடியவில்லை. நீர்மையின் ஒளிபெருகிய சிறுமியவள். எல்லா மூர்க்கங்களையும் சிதறடித்து இவரை அமைதிகொண்ட இரவுகள் அவளுடன் கழிந்தவை. பின்பொருநாள் மிஞ்சியிருந்த ஐந்துபேரும் தாங்களும் அங்கிருந்து கிளம்பிச் செல்வதாகச் சொல்லிக் கிளம்பிச்சென்றனர். தஞ்சை நிறைய பேரை திரும்பி வராத பயணத்திற்கு அனுப்பி வைத்தபடியேயிருக்க, எங்கெங்கிருந்தோ இங்கு வருபவர்களும் திரும்பிச்செல்ல விரும்பாதவர்களாய் சேர்ந்துகொண்டிருந்தார்கள். ராஜம்மாளுக்கு இப்பொழுது பிரிவின் சுவாரஸ்யம் சகிக்கவியலாததொரு வேதனையென்பது புரிந்திருந்தது, அவ்வேதனையிலிருந்து யாரும் யாரையும் மீட்டெடுத்துக் கொள்ளவியலாத துரதிர்ஸ்டசாலிகளாகவே இருந்தனர்.  ரோகிகளும் பிணிகொண்டவர்களும் மிகுந்த ஊராயிருந்தது ஊர், காவிரியின் கரையோரங்களில் காலராவும் பிளேக்கும் மிகச்சாதரணமாக காணமுடிகிறதொன்றாக போய்விட்டிருந்தது. இவரும் ராஜம்மாளும் எப்பொழுதும்போல் அந்நதியில் நீந்துவதும் கூடுவதுமாயிருந்தனர் விருப்பத்துடன்.
வீட்டிற்குப் போவது விரும்பக்கூடியதொன்றாய் இல்லாத பொழுதும் அனந்தனின் சின்னஞ்சிறு முகத்திற்காகவேனும் போய்வந்து கொண்டிருந்த வாண்டையாரை மிகச்சில நாட்களிலேயே தன்னுடலோடு கூட அவர் மனைவி வற்புறுத்தியிருக்கவில்லை. ஆடிஅமாவாசைக்கு ஏடுகள் கொஞ்சத்தோடு வீட்டிற்கு வந்திருந்த தூரத்து உறவினொருவன் அடுத்த இரண்டு ஆடிஅமாவாசைகளுக்குப் பின்பும்கூட அங்கிருந்து போயிருக்கவில்லை. ரோகத்திற்கு மருந்திருக்கிறதென தான் வைத்திருக்கும் ஏடுகளை கவனமாகப் பாதுகாத்தவன் அவ்வூரின் முதிய வியாதியஸ்தர்களுக்கு வைத்தியராயிருந்தான். அதிகமான நேரமும் அவன் வீட்டிலேயே இருந்ததில் அனந்தன் அவனையே தகப்பனென நினைத்துக் கொண்டிருந்தான். அவனும் வாண்டையாரும் ஒரே சமயத்தில் இருக்கிற பொழுது யாரை அய்யாவென கூப்பிடுகிற சந்தேகமில்லாமலில்லை. வைத்திய சாச்திரத்தில் தன் சூட்சுமம் குறித்து இவ்வூர் புரிந்துகொள்கிற நாளில் தான் இந்த தஞ்சை வட்டத்திலேயே மிகமுக்கியமானவன் என்பதை உலகறியும் என நினைத்துக்கொள்வான். அனந்தன் வளர்ந்து சில வருடங்களிலேயே மதராஸ் அனுப்பப்பட அதன்பிறகு அவ்வீடு வெறுமையாகிப் போயிருந்தது. வாண்டையார் வீட்டிற்கு வருவதை எப்போதைக்குமாக நிறுத்திவிட, வைத்தியனைத்தான் தன் கனவனென ஊருக்குள் அவரின் மனைவி சொல்லிக்கொண்டிருந்தாள்.
ஊரில் எல்லா வீதிகளும் அந்நியர்களால் நிரம்பிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு வருடமும் விவாசயம் வீழ்வதும் செழிப்பதுமாயிருக்க ரயிலேறி கப்பலுக்குப் போகிறவர்களின் எண்ணிக்கை அப்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறையத் துவங்கியது. வாண்டையார் ராஜம்மாளோடு ரங்கூனுக்குத் திரும்பிவிட நினைத்திருந்தார். யாருக்குத் தெரியும் இவள் கைகாட்டி வழியனுப்பிய நிறையபேர் ரங்கூன் வீதிகளில் தாசிகளாகவோ, கூலிக்கு வேலை செய்கிற பெண்களாகவோ சுற்றிக்கொண்டிருக்கலாம். அவருடனிருக்க விரும்பியவளுக்கு அவ்வூரைவிட்டு எங்கும் போகிற எண்ணமில்லை, காவிரியில் விழித்து காவிரியில் உறங்குவதை விடவும் மேலானதொரு வாழ்க்கை எதுவுமில்லையென்பதில் நம்பிக்கை கொண்டிருந்தாள், இரவில் அந்நதிக்கு யாரும் உணரமுடியாத்தொரு நிறமிருக்கிறது, நீலம், கருப்பு என எப்படி வேண்டுமானாலும் நினைக்கத் தோன்றும் அந்நிறத்தின் உடல் இசையாலும் மொழியாலுமானது. ஒரு நதியின் உடலைப் புரிந்து கொள்ள, அதன் மொழியைப் புரிந்து கொள்ள அந்நதியுடன் அந்தரங்கமாக உரையாடப் பயிலவேண்டும். அவள் அந்நதியுடன் உறவாடியுதடன் தன் நடனத்தின் பெரும் சாகசங்களை அதன் முன்னால்தான் நிகழ்த்திக்கொண்டிருக்கிறாள் இப்பொழுது. சுழித்தோடுமதன் சலசலப்பில் புரிந்துகொள்ள முடிகிற வார்த்தைகளில் தாபத்தின் மூர்க்கமும், வேகமுமிருக்கும். அப்படியானதொரு மூர்க்கத்தினைதான் அவளுடல் விரும்பியிருந்தது. அவளுடல் நீலம் பாரிக்கத் துவங்கியது, நஞ்சல்லாத நீலம். நடனமும் நீர்மையும் சேர்ந்தளித்த நிறம், பேரொளியின் பிரதிபலிப்பாய் அங்கத்திற்குள் சேகாரமாகியிருக்க அவள் எருக்கம்பூவின் இதழ்களென பூத்திருந்தாள் என்றெறைக்குமாய்.
ஒரு மார்கழி மாதத்தின் அதிகாலையில் புதிதாக ஆற்றின் குறுக்காக போடப்பட்டிருந்த பாலத்திற்குக் கீழாக தடித்த மனிதன் இறந்துகிடப்பதனைக் கண்டு ஆட்கள் சிலர் தூக்கி வந்து போட்டனர். சில நிமிடங்களிலேயே விசயம் தாசி தெருவிற்கும் மொத்தமிருந்த முப்பத்துமூன்று வீதிகளுக்குமாய் சென்றுவிட்டிருந்தது. ரங்கூன்காரரு செத்துப்போனாராமே என ஊருக்குள் பெரிய அனுதாபங்கள் எதுவுமின்றி சிறியதொரு தகவலாக மட்டும்தான் பேசிக்கொண்டிருந்தனர். வாண்டையாரின் இறந்த உடலைச் சுற்றி அழுத பெண்கள் யாருக்கும் அவரைப்பற்றின அதிகப்படியான தகவல்களெதுவும் தெரிந்திருக்கவில்லை. அவரின் மனைவி எவ்வளவு முயன்றும் அழமுடியாதவளாய் எப்பொழுதும்போலவே இருந்தாள். நீண்ட வருடங்களுக்குப் பிறகு நெருக்கமாக அவரைக் கவனித்த அனந்தனுக்கு மட்டும் கொஞ்சம் அழவேண்டுமென்கிற உணர்வு எழுந்திருந்த பொழுதும் அப்படியானதொரு முயற்சியை அவன் செய்திருக்கவில்லை. அப்பாவின் முகமென்று ஒன்று இப்பொழுது அவனுக்குள் இழையோடத் துவங்கவும் கனத்துக் கிடக்கும் அவருடலின் நீர்மை புரிந்து கொள்ளமுடியாததொன்றாக இருந்தது. முரட்டுத்தோலாலான அவரின் தோல்கள் இப்பொழுது பெண்மை கசிந்தபடியிருக்க நீண்ட நேரமாய் அவரின் முகத்தினைப் பார்த்தபடியே இருந்தான்.
ராஜம்மாளின் வீடு களையிழந்து போயிருந்தது, அவள் ஆண்கள் ஒருவரையும் சமீபமாய் அனுமதித்திருக்காததோடு வந்துகொண்டிருந்த ஒரேயொருவனும் இப்பொழுது இறந்து போய்விட்டிருக்கிறான் என்பதில் சிதைந்து போயிருந்தாள். அவளுடலிலிருந்து நீர் கசிந்தது. வெறுமனே வியர்வையெனவும் கண்ணீரெனவும் பிரித்துப் பார்க்கமுடியாதபடி பல வருடகாலம் நிரம்பியிருந்த குளமொன்று நிரம்பி வழிவதைப்போலிருந்தது. வாண்டையாரின் உடல் தகனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்த அம்மாலையில் வீதியின் ஒரு கோடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தவளை மொத்த சனமும் சில நொடிகள் திரும்பிப் பார்ப்பதும் அவள் பெயரை உச்சரிப்பதுமாயிருக்க வாண்டையாரின் மனைவி வைத்தியனிடம் சொல்லி இவளையும் கூட்டிவரச்சொல்லி அனுப்பினாள். அனந்தன் இந்தப் புதியவளின் உடலுக்கும் தன் தந்தையின் உடலுக்கும் மிக நெருக்கமானதொரு உறவிருந்ததை கவனித்தபடியே அவளுடலிலிருந்து நீர் கசிவதைக் கவனித்து பார்வை திருப்பாமல் பார்த்துக் கொண்டிருந்தான். இவளும் அவனைக் கவனித்தபடியே நீண்டதூரம் கூட்டத்துடன் செல்லப்பிடிக்காமல் வழியிலேயே நின்றுகொண்டாள்.
காவிரியில் நீர்ப்பெருக்கெடுக்கும் மாதத்தின் பிற்பகுதி நாட்களில் பெய்யும் பெருமழை தினமொன்றில் இன்னும் தன்னுடலிலிருந்து நீர்க்கசிவு குறைந்திருக்காததில் கவனங்கொண்டவளாய் தஞ்சாவூருக்கு வைத்தியர் யாரையாவது பார்க்கலாமெனக் கிழம்பினாள். முத்துக்கிழவனின் வண்டியில் தனியாளாக அவள் சென்றுகொண்டிருப்பதை கவனித்த அனந்தன் அவளழைக்காமலேயே துணைக்குக் கிளம்பினான். இவளுடலில் நீர்மையின் பெருக்கு மிகுந்திருக்கிற நாட்களிது. என்ன செய்தினும் சிலநாட்கள் இதனை நிறுத்தவியலாதென வைத்தியர் சொல்லி கருந்தேனும், சுக்குநீரும் அடிக்கடி குடிக்கும்படி சொல்லியனுப்பியிருந்தார். திரும்பி வரும் வழியெங்கும் அவள் பேசப்போகிற நொடியொன்றிற்காக காத்திருந்தவனாய் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவளுடலின் வாசணை புதிரானதொன்றாயிருந்தது. என்ன சொல்லிக்கூப்பிடுவதென்கிற குழப்பத்தில் அலைபாய்ந்த அவன் பார்வையக் கவனித்தவளாய் ‘ராசம்மானு கூப்பிடுஎன்றாள். முதுமையின் முதல் சில தப்படிகளில் நின்றிருந்தவளை பெயர் சொல்லிக்கூப்பிடுவது உகந்ததொன்றல்ல என்கிற தயக்கத்துடன் மெளனித்திருந்தவனிடம் தனக்கு இன்னும் அப்படியொன்றும் முதுமை எய்தவில்லை என்றாள்.
இன்னொருமுறை தான் நடனமாடக்கூடுமென சில தினங்களுக்கு முன்பு அவளால் யோசித்திருக்க முடியாது, தன்னுடலின் பிடிபடாத கோணங்களுக்குள் இன்னொருவனும் பயணிக்க விரும்புவான் என்பது இப்பொழுது துயரமிக்கதொரு விசித்திரம்தான். அவள் முதுமையின் எந்த சுவடையும் பெற்றிருக்கவில்லை என்பதை அவள் கால்களும் கண்களும் சொல்லின. ஒற்றை விரலின்  நுனியில் மொத்த உடலையும் சுழற்றித் திருப்புமவள் ஒரே சமயத்தில் பூதகியாகவும், கொற்றவையாகவுமிருந்தாள். கொற்றவையின் நடனமிது. காவிரி எழுந்து தன்னுடலை சுழற்றுவது போலிருந்தது அக்கனம். அவளை வந்தடைவதற்கானதொரு பயணமாகவே தன் தந்தையின் மரணமிருந்திருக்கக்கூடும் அம்மனிதன் விட்டுச் சென்ற உச்சபட்சமான சொத்தொன்றை ஒருபோதும் தனதாக்கிக் கொள்ள விரும்பியிருக்காவிடினும் வேறு எவரும் உடமையாக்கி  கொள்ளக்கூடாதென நினைத்துக் கொண்டான். தயக்கமின்றி அவளை தன்னிடம் அனுமதித்தவள் இவனுக்குள் தன் நீர்மையின் தடயங்களை பரப்ப விரும்பியிருக்கவில்லை.

                     4
நடனமாடுகிற கனங்கள் தோறும் உடலின் கதவுகள் திறந்து வெறிகொண்டலைவதை என்னசெய்தும் நிறுத்தமுடியாதுதான், அவளோடு சுகிக்க யாரால் முடியும்? பெருங்காமத்தின் கோட்டுச்சித்திரமாய் ஒவ்வொரு முறையும் அவ்வீட்டின் சுவர்கள் அவளைக் கவனித்திருந்தன. அனந்தன் எதுவொன்றாகவும் ஆகமுடியாத ஒருவனாகவே தாசித் தெருவுக்கும் வீட்டிற்குமாய் சுற்றிக்கொண்டிருக்க, வைத்திய அப்பா அவன்மீதான பெருங் கரிசனத்தில் கொரடாச்சேரிக்கு அனுப்பி வைத்தார். பயணம் எளிதாகிக் கொண்டிருந்த நாட்களவை. அப்பாவின் வியாபாரத்தைப் பார்க்க வேண்டி அங்கு சென்றவனுக்கு அவ்வூர் சகிக்கவியலாததொன்றாகவே இருந்தது.  இழைக்கட்டுகளும் வெற்றிலை பொதிகளுமாய் அதிகாலைகளில் அந்த ரயில்நிலையத்திலிருந்து வந்து போகும் ஒரேயொரு ரயிலில் கும்பகோணத்திற்கும், தஞ்சாவூருக்கும் பொதிகளை அனுப்பி வைப்பதோடு அன்றாட பணி முடிந்து  பகல் முழுக்க வீதிகளில் சுற்றிக்கொண்டிருப்பதை  அவன் விரும்பியிருக்கவில்லை. இங்கும் காவிரியின் ஒரு துண்டு உடல் நீந்திக்கொண்டிருந்ததுதான். அதில் ராஜம்மாளைக் காணமுடியாததுதான் ஏக்கமாயிருந்தது. வெற்றிலையின் தோற்றத்திற்கும் அவளுடலுக்கும் நெருக்கமானதொரு ஒற்றுமையிருப்பதை ஒவ்வொரு முறையும் இலை கிள்ளுகையில் யோசிப்பான், அதனை வருடிக் கொடிக்கிற நொடியில் கசியும் வாசனையும் ராஜம்மாவின் உடல் வாசணையும் ஒன்றேதான். அந்த வாசணைக்காகவே வெற்றிலை மெள்ளப் பழகிப்போயிருந்தான்.
கடல்கன்னியொருத்தி கனவில் வந்து ஸ்கலிதம் கண்ட தினத்தில் இரவு முழுக்க உறக்கம் மீளப்பெறாதவனாய் சாளரத்தின் வழி நெளிவான அச்சிறு நதியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அடுத்த நாள் அதிகாலையில் வெற்றிலை கட்டுகளுக்குப் பதிலாக இவனே தஞ்சாவூருக்கு வண்டியேறினான். இன்னும் விடிந்திருக்காத அதிகாலையில் எவ்விதமுமான முன்னறிவுப்புகலுமின்றி ஊருக்குக் கிளம்பியவனிடம் தொண்டை வரையிலுமான சில சொற்கள் மட்டுமே எஞ்சியிருந்தன அவளிடம் கேட்க வேண்டி. சில மாதங்களில் தாசித்தெரு பெரிய மாற்றமொன்றையும் சந்தித்திருக்கவில்லை. உடைக்கப்பட்டு சுடுநீரில் கலக்கப்படும் அதிகாலை காப்பிக் கொட்டையின் மணம் வீதி முழுக்க நிரம்பிக் கிடக்க, ராஜம்மாளின் உறக்கம் நிரம்பிய முகமொன்றை பார்க்க விழைந்தவனாய் அவள் வீட்டிற்குச் சென்றிருந்தான். பூட்டப்பட்ட கதவுகளை கண்டதும் தயக்கத்தோடு நின்றவன் யாரிடம் கேட்பதெனத் தெரியாமல் சுற்றியிருந்தவர்களைப் பார்த்தான், ஒருவரும் இவனுக்குப் பதில் சொல்கிறவர்களாயில்லை. இவனைக் கடந்துபோன ஒரு நடுத்தரவயதுப்பெண் மட்டும் ‘ ரொம்ப வருசம் இவங்கய்யா இந்த வீடே கெதின்னு கெடந்தாரு...இப்போ இவன்...இன்னும் எத்தன குடி கெடப்போவுது?...யாருக்கோ சொல்லிச் சென்றாள். பூச்சியரித்து இற்றுப்போன கதவையொட்டியே வாசலில் உட்கார்ந்தவன் அந்த வீதியின் முதுமையில் இப்பொழுது காமம் முற்றியொதொரு பேயாய் அலைந்து கொண்டிருப்பதைக் கவனித்தான். நூற்றாண்டுகளாய் வேட்டையாடப்பட்ட பேயது, முதுமையில் வெறிகொண்டு வேட்டையாடக் காத்திருக்கிறது, இப்பொழுது வேட்டைக்கென எதுவுமில்லாமல் வறண்டு போயிருக்கும் அவ்வீதியில் மிகுந்திருந்தனைத்தும் சூன்யமே.
வெயிலின் வெளிச்சம் கொஞ்சமாய் நிறமாறத் துவங்கிய நேரமாய் ஈர உடலுடன் அவள் வீட்டிற்குத் திரும்பியிருந்தாள். உடல் கசக்கியெறியப்பட்டதொரு வெற்றிலையைப்போல் சுருங்கிக் கிடக்க அந்தக் கண்களில் மட்டும் பெரும் வெளிச்சமொன்று ஒளிர்ந்து கொண்டிருந்தது. தான் கனவில் கண்டது இதே கண்களைத்தான் என நினைத்துக் கொண்டவன் இத்தனை நாட்களுக்குப் பிறகு பூர்ணமானதொரு புன்னகையை சந்திக்க முடிந்த திருப்தியில் பதிலுக்குப் புன்னகைத்தான். இருவருமாக வீட்டிற்குள் நுழைந்த சில நிமிடங்களுக்குப்பின் இந்த அதிகாலை இவன் வரவை எதிர்பார்தத்தாகக் கூறினாள். முந்தைய இரவு நதியுடன் பேசிக்கொண்டிருக்கையில் முதலும் கடைசியுமாய் அனுப்பிய அந்தரங்கச் செய்தி உனக்கானது மட்டும்தான், எப்படியும் கிடைக்கப்பெற்றிருப்பாய் என்றாள். தன் கனவு குறித்து அவளிடம் சொல்லியவனை ஈர உடலோடு அணைத்துக் கொண்டாள். உடல் முழுக்க தாய்மையின் சூடு, இரவில் நடனமாடியிருக்க வேண்டும், அல்லது ஒட்டுமொத்தமான இரவும் அவளோடு சேர்ந்து ஆடியிருக்க வேண்டும், அப்படியானதொரு சூடு அவளுடலில். இவனுக்குத் தூதனுப்பியதற்கான காரணம் எதுவுமில்லையென சொன்னவள் ஒருமுறை அவனை ரங்கூன் போய்வரச் சொன்னாள். மலர்ந்து உள்ளங்கையினை கையிலெடுத்துக் கொண்டவனிடம் நத்தைகளின் ஊரலும், மீன்களின் குறுகுறுப்புமிருந்தது. தன் கைகளில் சின்னஞ் சிறியதாய் ஏராளமான மீன்களை நீந்த விட்டிருந்தவளின் மேனியின் நீர்மை குறித்த பிரம்மாண்டம் எழுந்த பொழுது அவளுடலில் நீந்தும் மீன்களிலொன்றாகிவிட விரும்பினான். அவன் கண்களின் வேகமான இயக்கத்தில் கவனித்தவளாய் ‘நீ மீனாக விரும்பாதே அனந்தா...அவள் குரல் நீந்தும் தன் விருப்பங்களை அறுத்து நிறுத்தியிருந்தது. அவன் ரங்கூன் போகவேண்டியது தனிப்பட்டதான விருப்பமில்லை வாழ்வின் இறுதியில் அவன் தந்தை அவனுக்கு விட்டுச்சென்ற செய்தியென்றாள். தன்னால் உரிமை கொண்டாடமுடியாததொரு மனிதனாகவே இப்பொழுதும் நினைக்கத் தோன்றுகிற ஒருவனின் கடைசி செய்தி எது குறித்தானதென்கிற யோசனைகளுடன் இவன் பயணத்திற்கு ஒப்புக்கொண்டான்.
ரங்கூன் இன்னுமொரு பதினைந்து வருடங்களை விழுங்குமென இங்கிருந்து கிளம்புகையில் அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. யாராலும் கவனிக்கப்படாமல்  விடப்பட்டிருந்த முந்நூறு பெரு மரங்கள் இவன் வருகைக்கென காத்திருந்தன, உடன் அவற்றிற்கிடையே ஓடிக்கொண்டிருந்த மிகப்பழையதொரு நதி. அந்த நதி எப்பொழுதும் அவனை திருவையாற்றிலிருந்து பிரித்திருக்கவில்லை. இதன் நிறம் வேறாக இருப்பினும் அதன் மொழியை இவனால் புரிந்து கொள்ள முடிந்தது. வா.னா.உ.னா தம்புச் செட்டியின் வட்டிகடையோடு அவ்வாண்டுகள் கழிந்த பொழுதும் ராஜம்மாளின் கால்களின் வனப்பும் சுழன்றாடுகையில் அவளிடம் வெளிப்படும் வசீகரமும் பல்லாயிரம் மைல்களுக்கப்பாலும் இவனை சிதறடித்தது. கொஞ்சம் முதுமையும் பணமும் சேர்த்துக் கொண்டு ஊர்திரும்பிய நாளில் இவனோடு வருவதற்கு குடும்பமென ஒரு  ஒரு பெண் இரண்டு குழந்தைகளிருந்தனர். எப்பொழுதோ தொடர்பறுந்துபோன அம்மா இப்பொழுது நினைவுக்கு வரத்தான் செய்தாள். உடலும் மனமும் கனக்க இவன் தஞ்சைக்கு திரும்பின நாள் இன்னொரு வாண்டையாரை ஆர்வமின்றி உர் ஏற்றுக்கொண்டது. ஊரின் விஸ்தாரம் தஞ்சைக்கும் திருவையாறுக்கும் இடைவெளியைக் குறைத்திருக்க நிறைய பேர் ஆற்றையொட்டி வீடுகட்டியிருந்தனர். எப்பொழுதும்போல் பெருஞ்சிரிப்புடன் காவிரி நடனமாடிக்கொண்டிருந்தாள்.
ஊருக்கு வந்த சில தினங்களுக்குப் பிறகு தாசிவீதிப் பக்கமாக செல்கையில் அதன் முகம் முழுமையாய் மாறிப்போயிருந்தது. தான் அந்தரங்கமாய் நேசித்த வீட்டின் துருப்பிடித்த கதவுகள் இன்னும் முதுமை எய்திருக்க, அவள் அவ்வூரின் மொத்த முதுமையையும் தன்னுடலில் பெற்றிருந்தாள். இவனைக் கண்டதில் களிப்புற்றவள் ‘இந்தமுறையும் உனக்கு நான் அனுப்பிய செய்தி வந்து சேர்ந்திருக்கிறதென்றாள்சிரித்துக்கொண்டே இவன், அப்படியான செய்திகள் உன்னிடமிருந்து வருடங்களாகவே வருகிறதுதான்என்றான். அவனுக்காக ஒருமுறை நடனமாடட்டுமா என்கிற அவளின் விருப்பம் இவனால் மறுக்கமுடியாததாகவும் வினோதமானதொரு மகிழ்ச்சியாகவும் பொங்கியது. எழுந்து நடக்க சிரமப்படுகிற ஒருவளால் எப்படி நடனமாட முடியுமென்கிற அவன் எண்ணம் அவள் படுத்தபடி இரு கால்களையும் மேல்நோக்கி உயர்த்திய முதல் நொடியிலேயே நொறுங்கிப்போனது. அவளுடல் நடனத்தாலும் நீர்மையாலும் ஆகியிருக்குமொன்று, நீர்மைக்கு ஏது தளர்ச்சி? அவள் நெகிழ்ந்துகொண்டிருந்தாள். அவள் நடனத்தில் அசைவுகள் ஒவ்வொன்றிலும் இவனுடலின் இயக்கம் சிறைபடத் துவங்கியது. எவ்வளவு தூரத்திலிருந்தும் எதிர்கொள்ளவியலாததொரு  நெருப்புப் பிளம்பாய் ஒளிர்ந்த அவளின் கண்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் பொசுங்கிக் கொண்டிருந்தான். உடலில் வியர்வை சொட்ட சில நிமிடங்களுக்குப்பின் அவள் களைத்து ஒதுங்கிய பொழுது அவளை எதிர்கொள்ளமுடியாதவனாய் எழுந்து ஓடினான். யாரோவொருவன் பித்துப்பிடித்ததைப் போல் ஓடுவதை அந்தவீதியிலிருந்த ஒருவரும் அன்று கவனித்திருக்கவில்லை.
அவளுடல் எரிக்கப்பட்டு சாம்பல் காவிரியில் கரைக்கப்பட்ட மாலையில் அந்நதி நீலநிறமாகியிருந்ததை இவன் மட்டுமே கவனித்திருந்தான். தொடர்ந்து சில தினங்களாய் தன் கனவில் இவ்வூர் ஆற்றோடு போவதைக் கண்டவன் அது இவ்விரவில்தான் என இடைவிடாமல் பிதற்றினான். ஆற்றில் நீர்ப்பெருக்கு கொண்ட்தாய்ச் சொல்லி கரையோர குடிசை மக்கள் வெவ்வேறு இடங்களை நோக்கி பயணித்தபடியிருக்க ஊருக்குள்ளிருந்தவர்கள் எப்பொழுதும்போலவே தங்களின் வீடுகளுக்குள் ஓய்வெடுத்தனர். பெரும் அதிர்வுடன் பொங்கிய நதி ஊரின் வீதிகளுக்குள் தவழ்ந்து வரத்துவங்கிய நள்ளிரவில்தான் ஒவ்வொருவருக்கும் தங்களின் இருப்பு குறித்தான் அச்சமெழுந்தது. அப்பொழுதும் தன் வீட்டிலிருந்து நதியைப் பார்த்துக் கொண்டேயிருந்தவன் பொங்கியெழுமதன் சுழிப்பில் மொத்த நதியும் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். கண்களை நிறைக்கும் நெருப்பின் வெளிச்சத்தோடு ‘நதி எறிகிறதென சொன்னவனின் குரலுக்கு பதில் சொல்ல ஒருவருமில்லை அங்கு...  

Friday, 27 February 2015

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்




பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில், எப்பொழுதும் அடைத்துக் கிடக்கும் ஒரு கடையின் முன் வராந்தாவில் ஒரு அட்டை பெட்டி ஷீட்டை தரையோடு விரித்த அதில் அமர்ந்திருப்பார். அந்தக் கடைக்கும் பக்கத்துக்கும் கடைக்கும் இடையில் குட்டி சுவர் ஒன்று உண்டு. அந்த மூலையில் தான் பாட்டியினுடைய மாத்திரை டப்பா, ஒரு குவளை, ஒரு தட்டு மற்றும் ஒரு மூட்டை (துணி மூட்டை?) இருக்கும். காலை வேளைகளில் பாட்டி அங்கு இருக்க மாட்டார். ஆனால் பொருட்கள் அங்கேயே தான் இருக்கும்.

இரவு அலுவலகத்தில் இருந்து திரும்பி வரும் நேரத்தில் தான் அமர்ந்திருப்பார். பெரும்பாலும் எதையாவது யோசித்துக் கொண்டோ அல்லது சாப்பிட்ட தட்டை கழுவிக் கொண்டோ இருப்பார். பல நாட்கள் நான் பாட்டியை கவனித்தும் கவனிக்காதது போல் சென்றுகொண்டிருந்தேன். எப்பொழுதாவது பாட்டியும் என்னை எதேர்ச்சையாக பார்ப்பார். ஒருபொழுதும் புன்னகைத்துக் கொண்டதில்லை நாங்கள், ஒருபொழுதும் பாட்டி என்னிடம் எதையும் யாசித்ததில்லை.

இரண்டு நாட்களுக்கு முன் எப்பொழுதும் போல் எதேர்ச்சையாக பாட்டியை கவனித்தேன், என்னையே பார்த்துக் கொண்டிருந்த பாட்டி “ம்மா ம்மா பசிக்கிது மா எதுனா குடுமா” என்று சொன்னார். நிற்கவும் முடியாமல் தொடர்ந்து நடக்கவும் முடியாமல் தள்ளாடினேன். என்னிடம் சில்லறைகள் இல்லை. சில்லறையாக கொடுக்கவும் விருப்பமில்லை. ஏடிஎமிலிருந்து எடுத்த கடைசி மூன்று நூறு ரூபாய் தாள்கள் மட்டுமே இருந்தது. இதை வைத்து தான் மூன்று நாட்களை ஓட்ட வேண்டும். நூறு ரூபாயை கொடுக்க எப்பொழுது மனமிருந்திருக்கிறது. “சில்லறை இல்லை பாட்டி” என்று கூறிவிட்டு விடுவிடுவென்று அந்த இடத்தை விட்டு அகன்று நேரே வாழைப் பழ கடையில் சென்று நின்றேன். பெரிய பழம் நான்கை வாங்கிக் கொண்டு பக்கத்திலிருந்த ஹோட்டலில் இட்லியும் கட்டிக்கொண்டேன்.

பாட்டி இருக்கும் இடத்திற்கு திரும்பவும் சென்று பழத்தையும், சாப்பாட்டையும் கொடுத்த பொழுது அவர் உணவை வாங்க மறுத்து “காசா குடும்மா காலைக்கு நாஷ்டாக்கு ஆவும்” என்று சொன்னபொழுது தான் உரைத்தது பாட்டி சாப்பிட்டிருக்கலாமென்று, மணி அப்பொழுதே ஒன்பதரை ஆகியிருந்து. யாசகம் கேட்கும் சில பாட்டிகள் மது வாங்கி குடிப்பதை செய்திதாள்களிலும், பிறர் கூறும்பொழுதும் அறிந்திருக்கிறேன். அதற்காக தான் பாட்டி காசு கேட்கிறாரோ என்று அபத்தமான நினைவு வந்து தொலைத்தது, அதற்காக என்னால் சாப்பாட்டையும் திரும்பி எடுத்து செல்ல முடியாது. ”பரவாயில்லை பாட்டி, கொஞ்சமா சாப்பிடுங்க” என்று வாழைப்பழத்தையும் கையில் திணித்தேன். “உனக்கேன்ம்மா சிரமம்” என்றபடி வாங்கிக் கொண்டவர் எதோ சொல்ல வந்ததை சொல்ல முடியாதபடி அமைதியாக பார்த்தார். எனக்கு அதற்கு மேல் சில்லறை கொடுக்கவும் விருப்பமில்லாமல் இருந்ததால் ”சரி சாப்பிடுங்க” என்று கூறி கிளம்பிவிட்டேன்.

சரவ் ஓட்ஸ் பாக்கெட் வாங்கி வர சொல்லியிருந்தான். அதை வாங்க முடியாதில் வருத்தமொன்றும் இருக்கவில்லை. ஓட்ஸ் இல்லையெனில் இட்லி அவித்து சாப்பிட்டுக் கொள்வதில் எந்த பிரச்சனையும் இருக்கப்போவதில்லை என்று மாவு வாங்கி சென்றுவிட்டேன்.

நேற்றைக்கு முந்தைய தினம் இரவில் பாட்டியை பார்த்து அருகில் சென்று நின்றபொழுது முதலில் அவர் என்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. “சாப்பாடு வாங்கிட்டு வரவா பாட்டி” என்று கேட்ட பின்னர் தான் தெரிந்துகொண்டு “உன்னைய பத்தி தான்ம்மா சொல்லிக்கிட்டு இருந்தேன்” என்று கூறினார். யாரிடம் என்று தெரியவில்லை. “நேத்து வாங்கி கொடுத்த இட்லில இரண்டு வச்சிருந்தேன் ம்மா அதை சாப்பிட்டுக்கிட்டேன்” என்றார். என்னால் அதை சகித்துக் கொள்ளவே இயலவில்லை, முந்தய இரவின் இட்லியை அடுத்த நாள் காலையில் கூட நான் சாப்பிட்டதில்லை அதை அடுத்த இரவு வரைக்கு வைத்திருந்து சாப்பிடும் அவலம் கொடுமையாக இருந்தது. பையில் இருந்து இருபது ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டேன்.

நேற்றிரவு தூரத்தில் வரும்பொழுதே பாட்டி அடையாளம் கண்டு கொண்டார். பக்கத்தில் சென்று “சாப்டீங்களா” என்று கேட்டபொழுது சங்கடத்துடன் தலையை ஆம் என்றும் இல்லையென்றும் ஆட்டினார். புரிந்துகொள்ள முடிந்தது. சாப்பாடு வாங்கிட்டு வரவா என்று மறுமுறை கேட்டபொழுது தான் தயக்கத்துடன் சரிம்மா என்று சொன்னார். சாப்பாடு பொட்டலத்தை கையில் கொடுக்கும்பொழுதே அவருக்கு கண்ணெல்லாம் கலங்கி விட்டது. எனக்கும் ரொம்பவும் சங்கடமாக ஆகிவிட்டது. கைகளை தொட்டு சாப்பிடுங்க நாளைக்கு வரேன் பாட்டி என்று சொன்னதும் அழுதே விட்டார். ஒரு தொடுதலுக்கு அவ்வளவு சக்தியிருக்கிறது. எந்தவித அருவருப்பும் இல்லாமல் தோளோடு அணைத்துக் கொண்டேன். என் பாட்டியின் முகத்தை தவிர எதுவுமே நினைவில் வரவில்லை(என் பிரியமான பாட்டி இறந்து மூன்று வருடங்களாகிவிட்டது). ”சரிம்மா சரிம்மா, நேரமாச்சு நீ கெளம்பு” என்று தனக்கும் எனக்குமாய் சமாதானம் சொல்லிக் கொண்டார்.

நேற்றிரவு அவர் நிம்மதியாக உறங்கியிருக்க கூடும் என்று கூட என்னால் நினைத்துக் கொள்ள முடியவில்லை. நான்கு அடக்கமான சுவர்களுக்குள் படுத்துக்கொள்ளும் எனக்கு போர்வை தேவையாக இருக்கிறது. இன்று சம்பளம் வந்தவுடன் பாட்டிக்கு ஒரு போர்வை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.

பசி தான் மனிதனை இயங்கச் செய்கிறது. அதே பசி தான் மனிதனின் ஆகப்பெரும் துயரமும் கூட. தினம் தினம் மூன்று வேளையோ அல்லது அதற்கும் மேலோ உணவு கிடைப்பவர்களுக்கு பசி வெறும் உணர்ச்சியாக இருக்கலாம். ஆனால் சிலருக்கு அது தான் ஆதாரம். 
யாரோ ஒருவர் பசியோடு இருப்பதை தெரிந்தே என்னால் சாதாரணமாக 
கடந்து செல்ல முடியவில்லை. என்னால் முடிந்ததை நான் பகிர்ந்துண்டு வாழ்கிறேன். ஆக,

வயிற்றுக்குச் சோறிட வேண்டும்
இங்கும் வாழும் மனிதர்க்கெல்லாம்.... (பாரதி)


Wednesday, 25 February 2015

குண்டு.. குண்டு.. குண்டுப் பெண்ணே

சமீபகாலமா குண்டான பெண்களின் ரேஷியோ அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் குண்டான பெண்களை அரிதாகவே காண முடியும், அதாவது பத்தில் ஒன்று என்கிற வீதம். இன்று எனக்கு முன்னால் நடந்து போகும் பெண்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் (என்னையும் சேர்த்து) பத்தில் ஐந்து பெண்கள் குண்டாக இருக்கிறார்கள், முக்கியமாக ஐடி துறையில் வேலை செய்யும் பெண்கள். உடல்வாகு என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டினாலும் பெரும்பாலான பெண்களுக்கு ஒபிசிட்டி (obesity) தான் உடல் பருமனுக்கு முக்கியமான காரணியாக இருக்கிறது. ஒபிசிட்டி என்பதே உடல் பருமன் அல்ல, ஒபிசிட்டி என்கிற நிலையில் உடல் பருமன் ஏற்படுகிறது.

அமெரிக்காவில் 60 சதவிகத பெண்கள் அதிக எடையில் இருப்பதாகவும் அவர்களில் 1/3 பேருக்கு ஒபிசிட்டி இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. எனக்கென்னவோ இந்தியாவில் உடல் பருமனால் அவதிப்படும் பெண்களின் சதவிகிதம் அதைவிட அதிகமென்றே தோன்றுகிறது. அதுவும் ஆண்களை விட பெண்களில் குண்டாக இருப்பவர்களின் சதவிகிதம் அதிகரித்து வருகிறது.

’சாப்பிடுற சாப்பாட்டுக்கு வேலை செஞ்சா தானே சாப்பாடு செரிக்கும்’ என்று ஊர்பக்கம் கூறுவார்கள். ஆக, செய்யும் வேலையை விட உட்கொள்ளும் கலோரியின் அளவு அதிகமாகும்பொழுது கலோரி கொழுப்பாகிவிடுகின்றது.  அதுவும் ஐடி துறையில் ஏழெட்டு மணி நேரத்திற்கு மேலும் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்பவர்களுக்கு கலோரி ஆற்றலாக மாறுவதற்கு வாய்ப்பே இல்லை.

ஒபிசிட்டி நிலை தொடர்ந்து நீடித்தால் இதயக் கோளாறுகள் ஏற்பட பெரும் வாய்ப்புகள் உள்ளன, இரத்த அழுத்தமும், சக்கரை வியாதியும் கூட வரக்கூடும். அதுவும் ஐடி துறையில் இருப்பவர்கள் தண்ணீர் அதிகமாக குடிப்பதில்லை. தண்ணீர் தொட்டிகளில் அருகில் இல்லாமலிருக்கும் பட்சத்தில் நிறைய சாதக பாதகங்கள் இருக்கிறது. ஒரு சிலர் பாட்டிலில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு வந்து விடுகின்றனர், அதனால் தண்ணீர் குடிப்பதற்கு கூட எழுந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கை முழுநாளும் ஆக்ரமித்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் அவ்வளவு தூரம் நடந்து சென்று தண்ணீர் குடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு தண்ணீரே குடிக்காமல் இருந்து விடுகின்றனர். இதையெல்லாம் தாண்டி தண்ணீரை குடித்தாலும் சிறுநீர் கழிக்க செல்ல சோம்பேறித்தனம் படுகின்றனர்.

அதற்காக அளவிற்கு மீறி ஒல்லியாகவும் இருக்கக்கூடாது அதுவும் கூட பலவித நோய் சிக்கல்களில் கொண்டுவிடும் வாய்ப்பு அதிகம். BMI இண்டெக்ஸின் அளவின்படி உயரத்திற்கேற்ற எடை தான் சரியான உடல் எடையை அளக்கும் முறை. 

ஐடி துறையில் இதெற்கென்று வார்ம் அப் செஷன் என்று எதுவும் இருப்பதில்லை. மன்னிக்க, ஐடி துறை என்றில்லை நாள் முழுதும் உட்கார்ந்தபடி வேலை பார்க்கும் எந்த துறையிலுமே வார்ம்- அப்பிற்கென்ற எந்த ஒரு சிரத்தையும் யாரும் எடுத்துக் கொள்வதில்லை. குறைந்தபட்சம் மூன்று மணி நேரங்களுக்கு ஒரு முறை சிறிய உடற்பயிற்சிகளை இருக்கும் இடத்திலிருந்தே செய்யும்படி ஊக்குவிக்கலாம். இயங்கு ஏணியை தவிர்த்து படிகளை உபயோகிக்கலாம். எங்களுடைய அலுவலகத்திலேயெ ஜிம் ஒன்று இருக்கிறது. ஆனால் பெண்கள் பெரும்பாலும் அதை உபயோகப்படுத்துவதில்லை. அலுவலகத்தை சுற்றி வர பெரிய நிறைய இடமிருக்கிறது, முழுதாக ஒரு சுற்று எடுத்தால் ஒரு கிலோமீட்டர் தொலைவு வரும். ஆனால் இங்கு நடக்க யாருமே தயாராக இல்லை.


உணவு முறைகளை பற்றி தனி பதிவே தான் போட வேண்டும். எது எப்படியோ, chubbyயாக இருப்பதாக யாரேனும் புகழ்ந்தால் மயங்கி விடாமல் ஆரோக்கியமான உடலுக்கு வழி செய்திட வேண்டும். உடம்பை வளர்த்து உயிர் வளர்ப்பதை தப்பார்த்தம் செய்துகொள்ளாமல் சரியாக புரிந்து கொண்டால் மட்டும் நீண்ட காலம் ‘ஆரோக்கியமாக’ உயிர் வாழ முடியும்.

Sunday, 4 January 2015

யட்சியானவள்

(தினகரன் - வசந்தம் வார இதழில் வெளியான நான்கு வாரத் தொடர்)

மழை பெய்து ஓய்ந்திருந்த இரவு, அந்த அப்பார்ட்மெண்ட் வழக்கத்தை விட  சற்று அதிக இருளையும் அமைதியையும் கொண்டிருந்தது பிரபாவிற்கு பயத்தை ஏற்படுத்தியது. அவசரமாக படியேறியவனின் கால்களை  சிதறிக் கிடந்த காலி அட்டைப்பெட்டிகள் இடறியன. பயம் கவ்வ இரண்டு இரண்டு படிகளாக தாவி மாடியேறி வீட்டு வாசலின் முன்பாக  ஒரு முறை நிதானித்து மூச்சு விட்டான்.

காலிங்பெல்லை ஒருமுறை  அடித்துவிட்டு காத்திருந்தான். நிமிடங்கள் கடந்தன. மொபைலின் கால் லிஸ்டில் கண்மனியின் பெயரை சொடுக்கிவிட்டு காத்திருந்தான். அழைப்பு எடுக்கப்படவில்லை. கதவை பலமாக தட்ட தொடங்கினான். இவ்வளவு சீக்கிரத்தில் அவள் உறங்கிவிட மாட்டாள்.

கண்மணி.. கண்மணி….”

உள்புற தாழ்பாளை விலக்கும் சத்தம் கேட்டதும் கதவை தட்டுவதை நிறுத்தினான். கொஞ்சம் ஆசுவாசமாகியது. ஈரம் சொட்ட டவலைப் போர்த்திக் கொண்டு ஓரமாய் நின்றிருந்த கண்மணி பிரபாவை உள்ளே வர விட்டு அவசரமாக கதவை சாத்தினாள்.

கதவ திறக்க இவ்வளவு நேரமா?

சிவப்பு படர்ந்திருந்த முகத்துடன் ப்ரபாவின் கோபப் குரலைக் கேட்டதும் கண்மணிக்கு குரல் அடைத்துக் கொண்டது.

குளிச்சிட்டு இருந்தேன் பா… ஸாரி… சுத்தமா சவுண்ட் கேட்கலதலையை துவட்டியபடியே கண்மனி சிரித்தாள்.

அவளுக்கு பதிலேதும் கூறாமல் ஷுவை கழற்றி ஓரமாக வீசிவிட்டு பெட்ரூமை நோக்கி சென்றுவிட்டான். ஒரு கணம் அவன் போவதையே பார்த்துக் கொண்டு நின்ற  கண்மணி வேகமாக குளியறைக்கு சென்று உடை மாற்றி வந்தாள்.

பிரபாவுக்கும் கோபம் குறைந்திருந்தது. அது கோபம் மட்டுமல்ல பயமும் கூட தான். பெருநகர சந்தடிகள் இல்லாத அந்த தெருவின் கடைசியில் வீடு பார்த்த பொழுதே அவன் யோசித்திருக்க வேண்டும். நெருக்கியடித்துக்கொண்டிருக்கும் அப்பார்ட்மெண்டுகளைக் காட்டிலும் அவனுக்கு தனி வீடு தான் எப்பொழுதும் பிடித்தமானது. அதனால் தான் தனி வீடாக தேடி பிடித்து இந்த வீட்டிற்குக் குடி வந்தான். இரைச்சலும் வீட்டிற்கு வருகிறவர்களை யார் நீ? எதுக்கு வந்திருக்க? என்று கேட்கிற அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேன்களும் அவனுக்கு எரிச்சலான விசயங்கள்.

இதை தனி வீடென்றும் சொல்ல முடியாது. கீழ் வீட்டில் ஒரு வயதான தம்பதியினர் குடியிருக்கின்றனர். அது ஒரு விதத்தில் துணை போல இருந்தாலும் அவர்கள் ரொம்பவும் பேசுவதில்லை. எதிர்படும்பொழுது சிரிப்பதோடு சரி. அப்புறம் மோட்டார் கரண்டுக்கு பணம் கேட்கும்பொழுது எதாவது பேசுவார்கள். அவ்வளவு தான்.

சாப்பாடு எடுத்து வை கண்மணி

ம்ம். இதோ வரேன்.. “ கண்மணி ஹாட் பாக்ஸையும் தட்டுகளையும் டைனிங் டேபிள் மீது வைத்து விட்டு தண்ணீர் எடுப்பதற்காக சென்றாள்.

இட்லியை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தவன்ஏன் வாசல்ல அட்டைப் பெட்டியெல்லாம் தூக்கிப் போட்டிருக்கஎன்று கேட்டான்.

இந்த எலி அட்டகாசம் தாங்க முடியல பிரபா. வீடு ஃபுல்லா நாசம் பண்ணுது அதான் எலி பொறி தேடிட்டு இருந்தேன்.”

”….”

எல்லாம் கலைஞ்சா கிடக்கு.. மெலிசா தான் தட்டி விட்டிருக்கும்

ம்ம்ம்அத நான் வந்ததுக்கு அப்பறம் சொன்னா தேடி எடுத்துத் தரப் போறேன்…”

ஆமா நீ வர பத்து மணியாகிடுது. அப்புறம் எலிப்பொறிய எப்ப தேடி எப்ப எடுத்து வைக்கிறது. அதான் நானே தேடினேன்…”

ஈஈ என ஈறு தெரிய சிரிக்கும் அவளின் வழக்கமான சிரிப்பை கண்டதும் தான் அவனுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

பரவாயில்லையே ரொம்ப தைரியமாகிட்ட போல இருக்கே

நான் எப்பவுமே பயந்ததில்ல பிரபா, இப்ப ரொம்ப தனியா இருக்குற மாதிரி இருக்கு. அதான் கொஞ்சம் பயம்

 மெதுவாக அவள் குரல் கமறியதை கண்டவன், லூசு, நீ நல்ல தைரியசாலி தான். எப்ப பாரு பேய் படம், பேய் படம். அதனால தான், உனக்கு பயம் வர்ரதே. அமானுஷ்யங்களை சாதாரணமா எடுத்துகுற மனசுக்கும் ஒரு அளவு இருக்கு. அதை தாண்டி போகும்போது யாருக்காயிருந்தாலும் பயம் வர தான் செய்யும்,”

போதும் போதும்… உடனே உன் ஹிஸ்டரி, ஜியாக்ரபி க்ளாசை எடுக்க ஆரம்பிச்சிடுவ..” என்றபடி இரண்டு பேரின் தட்டுக்களை எடுத்துக் கொண்டு அடுப்படிக்குள் சென்றாள்.

கையைக் கழுவாமல் யோசித்தபடி அமர்ந்திருந்தவனின் முதுகை தொட்டு என்னவென்பதுபோல் புருவத்தை உயர்த்தினாள். ஒன்றுமில்லை என்று தலையாட்டிவிட்டு எழுந்து கொண்டவன் கைகளை கழுவிவிட்டு எலிப்பொறியில் ராட் கில்லை உடைத்து வைத்துவிட்டு அடுப்படி விளக்கை அணைத்தான்.

என்னப்பா தூங்கலயா?.. “

இல்லம்மா நீ தூங்கு.. கொஞ்ச நேரம் படம் பார்த்துட்டு வரேன்

ம்ம்ச்சு..” உச்சுக் கொட்டியவள் ஒரு நிமிடம் அவனை பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். பிரபா அவளை கவனிக்காமல் லேப்டாப்பை எடுத்துக் கொண்டு கவுச்சில் சென்று அமர்ந்தான். படுக்கையறை விளக்கை அணைத்துவிட்டு இருட்டினுள் அமர்ந்தவளின் கண்கள் வாட்ரோபின் கண்ணாடியில் தெரிந்த தன் கால்களின் மீது பதிந்தது. கால்களை ஆட்டியபடி அமர்ந்திருந்தவள் அப்படியே படுக்கையில் சாய்ந்து உத்திரத்தை வெறித்துப் பார்த்தபடி யோசித்தாள்.


ப்ரபாவுடன் தூங்கி எத்தனை நாட்களாகின்றன. அவளுடன் தான் அவன் தினமும் படுத்துக்கொள்கிறான். ஆனால் அவன் வந்து படுக்கும்பொழுது எப்படியும் இரண்டு மூன்று மணியாகிவிடுகிறது. அதற்குள் கண்மணி தூங்கிவிடுவாள். சலிப்போடு விட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு அம்மாவின் ஞாபகம் வந்தது. அம்மாவும் இதே போல் தான் வீட்டில் நாள் முழுவதும் தனித்தருப்பாள். ஆனால் ஊரில் இருக்கும் சூழல் வேறு, வெட்கையை தணிக்கும் வம்பளப்புகள் திண்ணைகளில் அன்றாடம் நடந்து கொண்டு தான் இருக்கும். மதிய வேளைகளில் மட்டுமே அம்மா தனியாக இருக்கக்கூடும். அதுவும் வாசல் கதவை முழுக்கத் திறந்து வைத்துவிட்டு காற்றாட அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டோ அல்லது அரிசியை புடைத்துக்கொண்டோ இருப்பாள்.

ஆனால் இந்த டபுள் பெட்ரூம் வீட்டில் நாள் முழுதும் தனியாக இருப்பது சாதாரண விசயம் இல்லை. ப்ரபா வேலைக்கு கிளம்பி செல்லும்பொழுதே மணி பத்திற்கு மேல் ஆகிவிடும். அதன் பின்னர் அந்த வெயிலில் எங்கும் வெளியில் போக கண்மணிக்கு அலுப்பாக இருக்கும். ப்ராபாவிடம்  சீக்கிரம் வரக்கூடாதா நாள் முழுக்க தனியா தான இருக்கேன் என்று புலம்பும் பொழுதெல்லாம்

எங்கயாவது வெளிய தான் போயிட்டு வாயேன். டீவி இருக்கு, இவ்வளவு டிவிடி, பத்தாததுக்கு பேஸ்புக் இருக்கு வேற என்ன வேணும் உனக்கு?என்று அலுத்துக் கொள்வான்.

முதலிலெல்லாம் அப்படியாகத்தான் பொழுதை போக்கிக் கொண்டிருந்தாள் கண்மணி. பேஸ்புக்கில் எக்கசக்கமாக ப்ரண்ட் ரெக்வஸ்ட் வருவதும், நட்பு அழைப்பை ஏற்றதுமே இன்பாக்ஸில் வந்து வயதென்ன? திருமணமாகிவிட்டதா? உங்களுக்கு ஆன்மீகத்தில் விருப்பம் இருக்கிறதா? என விசாரிக்கும் ஆட்களைக் கண்டு வெறுத்துப் போயிருந்தாள். பின்பு சில நாட்கள் யோகா வகுப்பிற்குப் போகலாமென மாலை நேரங்களில் போய் வந்தாள். பாதிக்கும் மேல் ஐம்பது வயதை நெருங்கியவர்களே அங்கு வந்ததால் தன் வயது ஆட்கள் யாரும் பேச்சுத் துணைக்கு இல்லாமல் அதையும் பின்பு நிறுத்திக் கொண்டாள். 

வேலைக்கு சென்று கொண்டிருந்த நாட்கள் வரை இந்த பிரச்சனை இருந்திருக்கவில்லை. வேலைக்கு போக வேண்டாம் என்று முதலில் ப்ரபா சொன்னபொழுது கண்மணிக்கு மகழ்ச்சியாகத் தான் இருந்தது. வீட்டில் ஹாயாக இருக்கலாம் என்று எண்ணியவள் இந்த தனிமையை பற்றி நினைத்துப் பார்க்கவேயில்லை.

ஆரம்ப நாட்கள் கண்மணிக்கு சுமூகமாகவே இருந்தது. புத்தகம் படிப்பது, டீவி பார்ப்பது, நண்பர்களுடன் போனில் அரட்டை அடிப்பது என்று தனிமை அவளை உறுத்தாத வரை எல்லாம் நன்றகாத்தான் சென்றது. மெதுவாக எல்லாம் குறைந்து வந்த நாட்களில் தான் தனியாக இருப்பதை உணரத் துவங்கினாள். அதுவும் அவளுடைய இரு நண்பர்கள் வெளிநாட்டிற்கு சென்றுவிட்ட பின்னர் முற்றிலும் தனிமைபடுத்தப்பட்டதை உணர்ந்து சஞ்சலம் அடைந்தாள். தொலைக்காட்சியில் எல்லா சேனல்களிலும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அலைபேசியில் கூப்பிட்டு பாட்டுக் கேட்கிறவர்கள் எல்லாம் தன்னை மாதிரி வீட்டில் தனியாக இருப்பவர்கள் தானோ? என்று தோன்றும். அவளும் ஒருமுறை நேயர் விருப்பப் பாடல் கேட்டாள். பதிலுக்கு தொகுப்பாளினி ”அழகுக் குறிப்பு ஏதாச்சும் சொல்லுங்க கண்மனி?” கேட்டதற்கு என்ன சொல்வதெனத் தெரியாமல் அமைதியாக இணைப்பைத் துண்டித்துவிட்டாள்.

தனிமையை பழக்கப்படுத்திக் கொள்ள முயற்சித்தாள். அது அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை. முரண்டு பிடித்த தனிமையிடம் அடங்கிப் போகத் துவங்கினாள். தனிமையை விரட்ட அவள் கையாண்ட யுக்திகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.
வீட்டில் இருந்த பெரிய லாஃப்ட் கண்மணியின் தனிமை பயத்திற்கு எதாவதொரு உருவத்தைக் கொடுத்துகொண்டு இருந்தது. ப்ரபாவிடம் அவள் பேய் பயத்தைப் பற்றி சொன்னபொழுது முதலில் கிண்டலடித்தான்

நீயா இப்படி பயந்து சாகுற?. தனியா உட்கார்ந்து பேய் படம் பாக்குறவளாச்சே நீதினமும் அவள் அதே புகார்களைக் கொண்டு வந்தபொழுது எரிச்சலடைந்து கண்மணியை திட்டினான்
சும்மா நீயா எதையாவது கற்பனை பண்ணிக்காத கண்மணி. ஒரு முறை நீ இப்படி பயப்பட ஆரம்பிச்சின்னா பின்னாடி அது மனசுக்குள்ள ஆழமா பதிஞ்சிரும். அப்புறம் உன்னால அதுல இருந்து வெளிய வரவே முடியாது. ஒரு வேளை அப்படி உண்மையாவே இருந்துச்சுன்னாலும் நீ தான் அதை இக்னோர் பண்ணனும். நெகடிவ் என்ர்ஜீஸ் எல்லா இடத்தலையும் இருக்கும். நீ கம்யூனிக்கேட் பண்ண ஆரம்பிச்சிட்டீனா பிரச்சனை ஆகிடும்என்று அவளை இன்னும் அதிகமாக பயமுறுத்தி விட்டான்.

அதன் பின் பெரும்பாலும் அந்த அறைக்கு செல்வதை தவிர்த்துவிட்டாள். ப்ரபா வெளியூர் செல்லும் நாட்களில் கண்மணியின் பாடு சொல்லி மாளாதது. எல்லா கதவுகளையும் அடைத்துவிட்டு ஹாலில் கவுச்சில் சுருண்டு கொள்வாள். எல்லா கதவுகளையும் அடைத்துவிடுவதின் மூலம் தனிமையின் பார்வையில் இருந்து தப்பித்துக் கொள்வதாய் நினைத்துக் கொள்வாள். பகலின் தனிமைக்கும் இரவின் தனிமைக்கும் வேறுபாடுகள் இருந்தன. இரவின் தனிமையை அவளால் எளிதில் கடந்து வந்துவிட முடிந்தது. பெரும்பாலும் சீக்கிரம் உறங்க சென்றுவிடுவாள். அல்லது உறங்குவது போல் அவளால் நடிக்க முடிந்தது.

பகலின் வெறுமையோடு கலந்த தனிமை விசேச கொடூரத்தன்மை கொண்டது. அது எப்பொழுதும் நம்மை உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்கும் கண்களைக் கொண்டது. பகலில் தனித்திருக்கும் பெண்களை யட்சன் வந்து பிடித்துக் கொள்வான் என்று கதைகளில் படித்திருக்கிறாள். அப்படியொரு யட்சன் வந்தால் அவனிடம் நட்பு கொள்ளவே கண்மணி விரும்பினாள். அவனிடம் தீராத தனிமையின் கதைகளை கேட்டறிய அவள் விரும்பினாள். தனித்திருக்கும் பெண்களை அவன் ஏன் பிடித்து செல்கிறான் என்பதை கேட்டறிய விரும்பினாள். பகலெல்லாம் யட்சனை பற்றிய கனவுகளில் மூழ்கித் திளைத்தாள். இரவு தூக்கத்தில் அவனைப் பற்றி அரற்றினாள்.

பிரபஞ்சம் முழுவதற்குமான தனிமையை ஒரு பகலால் கொடுத்துவிட முடியும் என்பதை அவள் வெகு சீக்கிரமாகவே  உணர்ந்தாள்.

டே ப்ரபா.. நான் யார் தெரியுமா.. “

எம்பொண்டாட்டி

நாவொரு யட்சி டா

யட்சியா அப்படின்னா… “

யட்சின்னா ரகசியம்

ஆமாடீ என் செல்ல பொண்டாட்டி.. நிறைய ரகசியத்த புதைச்சு வச்சிருக்க பெரிய்ய்ய்ய.. ம்ம்ம் .. மண் பானை

ச்சீ போடா.. “

பேய் கதைகளின் சுவாரசியம் குறைய தொடங்கிய நாட்களில் கண்மணி புதிதாக ஒரு விசயத்தை ப்ரபாவிடம் ப்ரஸ்தாபித்தாள்.

ப்ரபா உனக்கொரு விசயம் தெரியுமா, நான் ஒரு பல்லி வளக்குறேன்

லூசு

நிஜமாதான் தான் ப்ரபா. நல்ல குண்டு பல்லி. தினமும் அதுக்கு சாதம் கூட வைக்கிறேன்

கண்மணியை முறைத்த ப்ரபாபல்லி எங்கடி சோறு திங்கும்

சத்தியமாடாஎன் கண்ணால பார்த்தேன் அது சோறு திங்கிறதை. இப்பல்லாம் நானே அதுக்கு கொஞ்சம் சோறு வைக்கிறேன்.. தினமும்

ம்ம்ம்

என்ன நம்பலையா.. “

எப்படி உனக்கு அந்த பல்லி ப்ரண்டாச்சுசின்ன குழந்தையிடம் கதை கேட்பதை போல் ப்ரபா அவளிடம் கேட்டான் அப்படியாவது அவளை ஆசுவாசப்படுத்தலாம் என்கிற எண்ணத்துடன்.
கண்மணி குதூகலமாக கண்கள் விரிய அவனிடம் கதை சொல்ல ஆரம்பித்தாள். “ஒரு நாள் நம்ம சின்க் உள்ள பாத்திரம் நிறைஞ்சிடுச்சு டா. பாத்திரத்தை எல்லாம் எடுத்து கழுவி முடிச்சப்போ சின்க் முழுக்க தண்ணி நிரம்பிடுச்சு. தண்ணி வெளியே போகவும் இல்ல. திடீர்ன்னு தண்ணிக்குள்ள இருந்து ஒரு பல்லி எம்பி வெளிய குதிக்க பார்த்துச்சு. பயந்தே போயிட்டேன் டா. ரொம்ப நேரம் வெளிய வர ட்ரை பண்ணிக்கிட்டே இருந்துச்சு. பாவமா இருந்துச்சு. என்னாலையும் ஒன்னும் பண்ண முடியல…”

ம்ம்ம்…”

முதல்ல லூசு மாதிரி ஒரு பேப்பர் அட்டையை உள்ளக் கொண்டு போய் விட்டேன்
அப்புறம் அந்த அட்டை நனைஞ்சு உள்ள முங்கிடுச்சு. அப்புறம் ஒரு கரண்டிய உள்ள சாச்சு வச்சேன். அது ஏற ட்ரை பண்ணிச்சு ஆனா வழுக்கிவிட்டுக்கிட்டே இருந்துச்சு. ப்ப்பா அருவருப்பா இருந்துதுதான். ஆனா பாவம்னு விட்டுட்டேன். அப்படியும் அதால ஏற முடியல. வேற வழியே இல்லன்னு பாத்திரத்தை உள்ள விட்டு தண்ணியோடு அள்ளி வெளியே தூக்கிப் போட்டுட்டேன்

அய்யே ச்சீ

யேய் அப்புறம் என்ன பண்ண சொல்ற. அப்படியே செத்துடுச்சுன்னா நீயா தூக்கிப் போடுவ

வாயக் கிளறாத.. பின்ன அசிங்கமா பேசுறேன்னு சொல்லுவ

போ.. போ.. சரி அதெல்லாம் விடு.. அப்புறம் அந்த பல்லிய தினமும் பார்க்க ஆரம்பிச்சிட்டேன் டா. ஒரு நாள் அது சோறு திங்கிறதை பார்த்துட்டு தான் நான் சாதம் வைக்க ஆரம்பிச்சேன். நீ தான் நம்பவே மாட்டேங்குற

சரிடீ செல்லம்.. நம்புறேன்

அழுத்தமாக கூறியதை போன்று பாவனையை உண்டாக்கி அதை பொய்யென்று அவளுக்கு உணர வைத்தான். “ச்சீ ப்பேஎன்று அவனை செல்லமாக அடித்தவள் ஏதோதோ கதைகளை பேசி உறங்கிப் போனாள். ப்ரபாவிற்கு அவளைப் பார்க்க பாவமாக தான் இருந்தது. ஆனால் இருவரும் வேலைக்கு செல்வது அவசியமில்லாதபொழுது கண்மணி வீட்டு வேலைகளையும் செய்து கொண்டு வேலைக்கும் செல்வதை அவன் விரும்பவில்லை. கொஞ்ச நாள் சென்றால் எல்லாம் எளிதில் பழகிவிடும் என்று நம்பினான். அந்த மட்டில் இப்பொழுது அவள் பயம் கொள்ளாமல் சாதாரணமாக இருப்பது நிம்மதியாக தான் இருந்தது. கண்மணிக்கு பகலின் கண்களை பற்றி இப்பொழுது எந்தவொரு குற்றசாட்டும் இருக்கவில்லை. முன்பெல்லாம் பகலில் குளிக்கும்பொழுது தாழ்பாள் போடாமல் கதவை வெறுமனே சாத்தி வைத்துவிட்டு குளிப்பாள், அப்பொழுதெல்லாம் யாரோ கதவிடுக்களின் வழியே தன்னை உற்று பார்த்துக்கொண்டிருப்பது போலவே தோன்றும். இப்பொழுது பகல் வேளைகளில் பாத்ரூம் கதவை திறந்து வைத்துக் கொண்டே அவளால் குளிக்க முடிகின்றது. கண்மணிக்கு இரவை பழக்குவது எளிதாக இருந்தது. இரவுக்கு தேவை சில கதைகள் மட்டுமே. கதைகளை உருவாக்கும் திறமை மட்டும் இருந்தால் போதும் இரவு நம்மை உள்வாங்கிக் கொள்ளும். இரவை பழக்கத் தெரிந்த எவரும் தேர்ந்த கதைசொல்லிகளாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. பகலை பழக்குவது தான் கடினம்ஆனால்  உரையாடுவது எளிதானது. இரவு மட்டுமே கதைகளை ஆராயக் கூடியது. கதைகளில் இருக்கும் பொய்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பகலுக்கு உண்டு. பகலுடன் உரையாட அவளுக்கு புதிது புதிதாக கதைகள் கிடைத்துக் கொண்டிருந்தது. கண்மணியின் பகலை நிரப்ப யட்சன் இருந்தான்.

யட்சிகளுக்கு பகலில் உலாவுமா என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் தன்னை ஒரு யட்சியாக உருவகம் செய்து கொள்வது அவளுக்கு பிடித்தமானதாக இருந்தது. ஒரு நாள் யட்சனுக்கு கதை சொல்லுவாள். ஒரு நாள் எதுவமற்று இருப்பது அவளுக்கொரு தவம் போல இருப்பதாக ஞானியின் முகம் கொண்டு அவனுடன் பேசுவாள். மற்றொரு நாள் அவனிடம் முடிவில்லாத மௌனத்தை கொண்டிருப்பாள். பிறிதொரு நாள் யட்சனுடன் யட்சியாக மாறி ஊர்த்துவ தாண்டம் ஆடிக் களிப்பாள். அவள் காதில் எப்பொழுதும் ஒலிக்கும் பறவையின் சிறகடிப்புகள் யட்சனின் இருப்பை உணர்த்திக் கொண்டே இருந்தது.

ப்ரபாவுடன் பேசுவதை அவளாக குறைத்துக் கொண்டாள். தூங்க போகலையா? என்று அவனே கேட்கும் முன்பு படுக்கையறைக்குள் நுழைந்துவிடுவாள். இதெல்லாம் ஒரு பெரு மாற்றமாக அவனுக்கு தெரியவேயில்லை. எல்லாம் சாதரணமாக சென்று கொண்டிருப்பதாகவே அவனுக்கு தோன்றியது அவள் புதிதாக ஒரு பூனை கதையை கொண்டுவரும் வரை.

கடந்த ஒரு வாரமாக தான் மெலிசா வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதாய் அவள் கூறினாள். மெலிசா ஒரு பூனை. அடர் சாம்பல் நிற பூனை. இந்த பகுதியில் அவள் எந்தவொரு பூனையையும் இதுவரை பார்த்திருக்கவில்லை. அவளுக்கு பூனைகள் என்றால் பெரும் பிரியம். அவளுடைய ஊரில் வீட்டைச் சுற்றி எப்பொழுதும் ஒரு பூனைக் கூட்டம் இருக்கும். பூனைகள் எப்பொழுதும் ஒரு நெடுங்கால சோகத்தை முகத்தில் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்வாள். பூனைகள் தங்களுடைய தனிமையை பற்றி வருத்தப்பட்டுக் கொள்ளுமா என்று அவள் அடிக்கடி யோசித்துப் பார்ப்பதுண்டு. சிலசமயம் அவ்வாறு யோசிப்பது அபத்தமாக தெரிந்தாலும் அவளுக்கு அது தேவையாக இருந்தது. சம்பந்தமில்லாத எதைப் பற்றியாவது யோசனையில் ஆழ்ந்திருப்பது அவளுக்குள் ஒரு போதை போல உருவாகிக் கொண்டிருந்தது.

யார்ட்ட பேசிக்கிட்டு இருக்க

இதோ மெலிசா கிட்ட

ப்ரபா அடுப்படியில் சுற்றி முற்றி பார்த்துவிட்டு கலவரத்துடன் கண்மணியைப் பார்த்தான். “ஏய் என்னடி ஆச்சுஎன்றபடி அவளை உலுக்கினான். சின்க் அருகில் அவளை கூட்டிச் சென்று முகத்தை அலம்பிவிட்டான்.

வா.. பேசாம படுத்து ரெஸ்ட் எடுஎன்றபடி அவளை படுக்கையில் படுக்க வைத்துவிட்டு அருகில் அமர்ந்து தலையை கோதிக் கொடுத்தான். உள்ளூர அவனுக்கு பயமாக இருந்தது. முன்பொரு நாள் இப்படித்தான் நள்ளிரவில் அவன் தூங்குவதற்காக பெட்ரூமினுள் சென்றபொழுது இருட்டினுள் துணிகளை மடித்து வைத்துக் கொண்டே எதிரில் யாருடனோ பேசுவது போன்ற பாவனையில் சைகை செய்து கொண்டிருந்தாள். எதோ கனவு கண்டிருப்பாள் என்று அவளை படுக்க வைத்துவிட்டான்.

அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துவிட்டு கண்மணியுடனே இருந்தான். முதல் இரண்டு நாட்களில் கண்மணி எடுத்ததற்கெல்லாம் எரிந்து விழவும் கடுப்புடன் மூன்றாம் நாள் அலுவலகத்துக்கு கிளம்பி சென்றுவிட்டான். சமயம் பார்த்து அவனுக்கு ஒரு வாரம் வெளியூரில் ட்ரெயினிங் என்று அலுவலகத்தில் சொல்லிவிட்டதால் மனதிற்குள் இனம்புரியா கலவரம் வந்து தொற்றிக்கொண்டது.

கண்மணி பத்திரமா இருந்துப்பியாடி.”

லூசு ஏன்டா பயப்படுற. அதெல்லாம் பத்திரமா இருந்துப்பேன். ரொம்ப பயமா இருந்துச்சுன்னா ப்ரண்ட்ஸ் யார் வீட்டுக்காவது போய் இருந்துட்டு வரேன் போதுமா.”

ம்ம்ம்.. எதுனா வேணும்னா கீழ்விட்டு அங்க்கிள் கிட்ட கேளு. நான் சொல்லிட்டுப் போறேன்
அதெல்லாம் வேணாம் ப்ரபா. நான் பார்த்துக்கிறேன். நீ பத்திரமா போய்ட்டு வா

ஒரு வார காலத்தில் அவன் போன் செய்யும்பொழுதெல்லாம் உற்சாகமாகவே கண்மணி பேசினாள். அவனுக்கு நிம்மதியாக இருந்தது. ஊருக்கு திரும்பும் நாளில் வேலை சற்று குறைந்திருந்ததால் கடைவீதிக்கு சென்று கண்மணிக்கும் அவனுக்கும் சில உடைகளும் அவனுக்கு தேவையான சில பொருட்களையும் வாங்கினான். ஒரு பெட்ஷாப் கண்ணில் பட்டது. உள்ளே சென்று பூனைக்கு உணவு வாங்கலாமா என்று யோசித்தான். அப்படியொரு பூனை உண்மையாக இருக்கிறதா என்ற சந்தேகம் வந்து அந்த யோசனையை கைவிட்டான். ப்ரபாவுக்கு பேருந்து ஒன்பது மணிக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.அப்படி கிளம்பினால் நள்ளிரவில் தான் வீடு போய் சேர முடியும். எல்லா வேலைகளும் முடிந்தவிட்டபடியால் மதியமே அங்கிருந்து கிளம்பி விட்டான். இரவு எட்டு மணிக்கெல்லாம் ஊர் வந்து சேர்ந்துவிட்டான். பேருந்தில் இருந்து இறங்கி வீடு நோக்கி உற்சாக துள்ளல் நடை போட்டான்.

வழக்கத்தை விட வீடு சற்று அதிக இருளையும் அமைதியையும் கூட்டிக் கொண்டு நின்றிருந்தது ப்ரபாவிற்கு பயத்தை ஏற்படுத்தியது. அவசரமாக படியேறியவனின் கால்களை  சிதறிக் கிடந்த காலி அட்டைப்பெட்டிகள் இடறியது. பயம் கவ்வ இரண்டிரண்டு படிகளாக தாவி மாடியேறி வீட்டுக் கதவை அடைந்து ஒரு முறை நிதானித்து மூச்சு விட்டுக் கொண்டான்.

காலிங்பெல்லை ஒருமுறை அழுந்த அடித்துவிட்டு காத்திருந்தான். நிமிடங்கள் கடந்தன. மொபைலின் கால் லிஸ்டில் பெயரை சொடுக்கிவிட்டு காத்திருந்தான். அழைப்பு எடுக்கப்படவில்லை. கதவில் தட்டுவதற்காக கைவைத்தவுடன் கதவு திறந்து கொண்டது. கால்கள் நடுங்க மெல்ல அடியெடுத்து வைத்தவன் விளக்கை போட்டான். ப்ரபாவிற்கு உள்ளூர எதோ ஒன்று அடித்துக்கொண்டே இருந்தது. படுக்கையறை நோக்கி தன்னிச்சையாக நடந்து சென்றவன் கண்மணி உறங்குவதைப் போல படுத்திருப்பதை கண்டான். சாதரண உறக்கமாக அது தெரியவில்லை. நெடுங்காலமாக தூக்கத்தை தொலைத்த யட்சி ஆழ்ந்த உறக்கத்திலிருப்பது போல் தெரிந்தது.

அமைதியாக கவுச்சில் வந்து அமர்ந்தவன் அடுப்படியில் இருந்து வெளிவந்த பூனையைக் கண்டு திடுக்கிட்டான். அடர் சாம்பல் நிற பூனை. அதன் வாயில் பல்லி ஒன்றை கவ்விக் கொண்டிருந்தது. அமைதியாக அவனை உற்று நோக்கிவிட்டு கதவிடுக்கின் வழியே வெளியேறி மறைந்தது. ப்ரபா முகத்தை கைகளால் மூடிக்கொண்டு பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினான்.