Friday, 10 August 2012

ரதி




Saturday, 30 June 2012

நினைவுகள் - 7


இந்த மாற்றம் தேவை தானா என்று தோன்றும் அளவு நெருக்கம் இதனுடன். ஆயிற்று ஒன்றரை வருடங்கள் சைதாப்பேட்டையில். வாழ கற்றுக் கொடுத்த இடம்! நிறைய சோகம்.. நிறைய சந்தோஷம்.. நிறைய பாடங்கள்...நிறைய தனிமை..நிறைய அழுகை...பிரிவு , வலி, சண்டைகள்.. இன்னும் நிறைய நிறைய... நிறைய நிறைய...நிறைய நிறைய. வந்த புதிதில்  ”சைதாப்பேட்டை” - பெயரிலேயே ஒரு பயம் காட்டிய இடம்;“கலீஜான இடம், ரவுடிகள் ஏரியா, கொசுக் கடி, தண்ணீர் பிரச்சனை...” இன்னும் என்னனவோ என்று எண்ணி தான் வந்தேன். ஆனால் நான் நினைத்ததுக்கு நேர் மாறாய் அமைந்தது இந்த இடம் எனக்கு. சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை அளித்த இடம். இங்கு நான் சுற்றாத இடம் இல்லை! ஒவ்வொரு மூலையையும் அத்துப்படி. பேருந்து ஏற நெடுந்தொலைவு தினமும் நடந்து செல்லும் பாதை , வழி நெடுக கன்னத்தில் போட்டுக் கொள்ளும் கோவில்கள், டைலர் அண்ணா, மளிகை கடை, மாவு கடை ,சமையல் அக்கா, மசால் பூரி கடை, ரயில்வே ஸ்டேஷன், ஆட்டோ அண்ணன், எதிர்பார்த்து வரும் எல்லா நேரமும் ஏமாற்றும் ஏடிம், வாட்ச்மான் அண்ணா, வேப்ப மர நிழல், பட்டம் விடும் சிறு நண்பர்கள்.......இந்த செடிகள், இந்த மாடி, இந்த வாசல், இந்த வீடு !!!!  ஏற்றுக் கொள்ள முடியாத மாற்றம்.!! இடம் மாறுதல் எனக்குள் பெரிய மாற்றத்தை எப்பொழுதும் ஏற்படுத்தியது இல்லை! நான்கு வருடங்கள் உருண்டு பிறண்ட கல்லூரி விடுதி பிரிவே எனக்கு பெரிய சோகத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் பெரும் பாறாங்கல் பாரம் மனதுள் அழுத்துகிறது, ஒரு நிமிடம் பாக் பண்ணி வைத்திருக்கும் பிரித்தெரிந்துவிட்டு அமைதியாய் உக்கார்ந்து கொள்ளலாம் என தோன்றுகிறது. ஆனால் இந்த மாற்றம் எனக்கு தேவையானது தான்!! இங்கு திரும்பி வருவேனா என்பது நிச்சயமில்லை. ஆனால் வரும்படி நேர்ந்தால் , இதை விட்டு இனியொரு முறை பிரிவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.


#Bye Bye சைதாப்பேட்டை!!!! :’(

இது காதல் செய்யும் நேரம் – 2



முன்குறிப்பு : இது கதையை பற்றிய முன்குறிப்பு அல்ல!
எனக்கு காதலையோ காதலர்களையோ வர்ணிக்க தெரியாது, அதனால் தயவு செய்து வர்ணனைகளை எதிர்பார்க்காதீங்க. என்னை பொறுத்த வரைக்கும் காதலர்கள் அழகோ அழகில்லையோ காதல் என்னைக்குமே அழகானதுதான், அதை வர்ணித்து ஒரு வரையறைக்குள் கொண்டு வர எனக்கு தெரியவில்லை.




மூக்கு நுனியும் காதுகளும் சிவக்க முகத்தை சரேலென்று திருப்பிகொண்டாள், அவள் திரும்பிய அதே நொடி அவளை ஆதி பார்த்து விட்டான்.”போச்சுடா இன்னைக்கு ரணகளம் தான் ” என்று மனதுள் நினைத்து கொண்டான்.ஆத்திரமும் அழுகையும் ஒன்று சேர,அதுல்யா கையில் இருந்து ஓட்ஸ் பிஸ்கட் நொறுங்க துவங்கி இருந்தது.
அவளின் நிறுத்தம் வந்ததும் திரும்பிக்கூட பார்க்காமல் இறங்கி விடு விடுவென்று நடக்க துவங்கினாள்.அவளை சமாதானப்படுத்தவில்லை என்றால் வரும் பின்விளைவுகளை அறிந்த ஆதி அவளின் நிறுத்தத்திலேயே இறங்கி நடக்க துவங்கிய நேரத்தில் அவள் ஓட துவங்கி இருந்தாள்.
இனிபொறுப்பதில்லை என முடிவு செய்து, வேக நடையிட்டு அவள் கைகளை பிடித்தான்.
“அதுல்யா கொஞ்சம் நில்லு, இப்போ என்ன ஆச்சுனு இவ்வளவு கோவப்படுற?”
“இன்னும் என்ன ஆகனும், முதல்ல கைய விடு”
அவன் பிடியிலிருந்து கைகளை விடுவிக்க அவள் திணறினாள், அவள் திமிர இவன் பிடி இறுகியது
“மரியாதையா கைய விட்டுடு.. ச்சு கடுப்பேத்தாத… உன் மூஞ்சிய பாக்கவே பிடிக்கல, விடு…” கைகளை வேகமாக உதறி நடக்க தொடங்கினாள்..
“ஹே ஏன்டி இப்படி படுத்துற.. சாரி டி .. ப்ளீஸ் டி , கொஞ்சம் நின்னு நடந்தது என்னனு கேட்டுட்டு அப்பறம் கோவப்படு”
“ஒன்னும் தேவை இல்ல..தயவு செஞ்சு என்ன விட்டுடு . நானும் உன் வழிக்கு வரல, நீயும் என்னை தொல்ல பண்ணாத. போதும் டா சாமி நான் பட்டதெல்லாம்” அவனை நோக்கி கையெடுத்து கும்பிட்டாள்.
அவளின் குவித்த கரங்களை பிடித்து ” சாரி மா புரிஞ்சிக்கோ.. நிலைமை அப்படி…”
“அப்படி என்ன !@#$% வேலை உனக்கு; காலைல இருந்து எத்தன போன் கால், எத்தனை தடவ பிங் பண்ணினேன் ” அதுல்யா வெடித்து அழ துவங்கி இருந்தாள்.
“ஹே அழாத டி..எல்லாரும் பாக்குறாங்க, முதல்ல நீ உள்ள வா”  பிடி விலகாமல் அவள் கைகளை இறுக்கி பக்கத்திலிருந்த உணவு விடுதி ஒன்றில் நுழைந்தான்.
“காலைல இருந்து கம்யுனிகேட்டர் வொர்க் ஆகல டா செல்லம், சத்தியமா! நம்பு ! யாருக்குமே பிங் பண்ண முடியல”
“ஒரு போன் பண்ணி இருக்கலாம்ல, அட்லீஸ்ட் நான் பண்ணினப்போ அட்டென்ட் பண்ணி இருக்கலாம்ல”
“போன் சார்ஜ் போட்டுருந்தேன் வீட்லயே மறந்து வச்சிட்டு வந்துட்டேன் மா”
“….”
“தேவை இல்லாம சண்டை போடாத டி.. புரிஞ்சிக்கோ”
“… ஹ்ம்ம் சரி விடு இனிமே இப்படி பண்ணாத”
“அட ராமா நான் என்ன பண்ணினேன்!!” மனதிற்குள் சிரித்துக்கொண்டான்.
சட்றென்று அதுல்யா முகம் மாறி ” அதெல்லாம் விடு , என்ன பஸ்ல அந்த ‘ஜாவா சுந்தரேசி’ கிட்ட இளிச்சு இளிச்சு பேசிக்கிட்டு இருந்த?”
கடவுளே அடுத்த ஏவுகணையா!!
ஆதி முழித்த முழியை பார்த்து அதுல்யா சிரிக்க தொடங்கினாள், அப்படா தப்பித்தோம் என்று அந்த சிரிப்பில் கலந்து கொண்டான் ஆதி , மகிழ்ச்சியை அழிக்க போகும் புயல் ஒன்று கரையை கடக்க காத்திருக்கின்றது என்பதை அறியாமல்……

பின்குறிப்பு: இந்த பகுதி எழுதி முடிக்கும் பொழுது.. ஒரு மாதிரி வழ வழவென்று (வள வள இல்லை) மனதில் ஒட்டாதது போல் இருந்தது, எங்கே தவறு என்று நீங்க சொன்னா  . அடுத்த முறை திருத்திக்கொள்கிறேன்.\

நேரம் வரும், காத்திருப்போம் ….

நினைவுகள் -6

இந்த ஜீன் மாசம் பொறந்தவங்க சரியான கிறுத்துருவம் பிடிச்சவங்களா இருப்பாங்க போல. எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து எங்க அம்மா பிறந்தநாள் கொண்டாடி நான் பார்த்ததே இல்லை, அதை பற்றி நாங்க கவலைப் பட்டதும் இல்லை. அம்மாவுக்கு பிறந்தநாள்னா வாழ்த்துவோம், அம்மா ஏதாவது பலகாரம் செஞ்சு தருவாங்க. இந்த அளவு மட்டுமே அவங்க பிறந்தநாள் எங்களுக்கு. கடந்த நாலு வருஷமா தான் ஏதோ திடீர்னு கொண்டாட ஆரம்பிச்சிடோம், ஏதாவது கிஃப்ட் வாங்குறது, கேக் வாங்குறது இப்படியே போகுது. ஆனா இந்த அம்மாக்கள் கிட்ட மட்டும் எதையுமே மறைக்கவே முடியாது, எப்படியாச்சும் கண்டுபிடிச்சிடுறாங்க!!!! ஒவ்வொரு முறையும் நாங்க ஸ்ர்ஃப்ரைசா எதாவது பண்ணலாம்னு முயற்சி பண்ணுவோம், ஆனா அவ்ங்க சரியா முதல் நாள் அதே பொருளை எங்க கிட்ட எடுத்து வந்து காமிச்சு ”ஹேய் இது எனக்கா டீ!!!!” அப்படினு கூவுவாங்க, எங்களுக்கெல்லாம் புஸ்ஸுனு ஆகிடும். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கூட அவ்வளோ பெரிய கேக் நானும் என் தங்ச்சியும் போய் வாங்கி வந்து மாடியில ஒளிச்சு வச்சா அன்னைக்குனு பார்த்து மழை பிரிச்சி மேயுது. நானும் என் தங்கையும் அடிச்சு பிடிச்சு மாடிக்குப் போய் கேக்க எடுத்துட்டு வந்தோம் ஆனா வீட்டுக்குள்ள எடுத்து வர முடியல , வெளியே ஒரு சேர்ல வச்சிட்டு வந்தோம், கொஞ்ச நேரத்துல எங்க அம்மா கத்துறாங்க.. “அய்யையோ நாய் கேக்க நக்கிக்கிட்டு இருக்கு”னு ... அவ்வ்வ்வ் “அய்யோ ராமா” எங்களால முடியல. சரி விசயத்துக்கு வரேன் நேற்று கடை கடையா ஏறி இறங்கி ஒரு புடவை அவங்க கிட்ட இல்லாத கலர் இல்லாத டிசைன்( அது கொஞ்சம் கஷ்டம் தான் :P) வாங்கினோம். அவங்க எப்பவுமே தொடாத ஒரு எடத்துல ஒளிச்சு வச்சோம். காலைல என் தங்கச்சி கத்தினதுல தான் எழுந்தேன். எங்க அம்மா கைய்ல நாங்க வாங்கி வந்த புது புடவையோட நிக்குறாங்க :’( :’(

“ஜாக்கெட்ல டிசைனே இல்ல டி” - அடங்கொக்கமக்கா

# ஆங் ஜுன் 8 எங்க அம்மாவுக்கு பிறந்தநாள் :)

நினைவுகள் -5



சில பேரு இருக்காங்க பாருங்க இந்த எக்ஸாம் டைம்ல தான் எக்கச்சக்க சக்க சக்க செண்டிமெண்ட் பார்பாங்க. எக்ஸாம் அன்னைக்கு இட்லி சாப்பிட கூடாது, மை போட கூடாது (மை இடுறதுக்கும் எக்ஸாம் எழுதுறதுக்கும் என்ன சம்பந்தம் ?? ), சாப்பிட கூடாது (இதுலலாம் நான் காம்ப்ரமைஸ் பண்ணிக்கவே மாட்டேன் ... எக்ஜட்ரா எக்ஜட்ரா .. நான் அப்படி எல்லாம் இல்லைங்க , என்ன எல்லா எக்ஸாம்க்கும் ஒரே டிரஸ் தான் போட்டுகிட்டு போவேன் அவ்வளோ தான் :D :D காலேஜ் முதல் வருஷத்துல ஆரம்பிச்ச பழக்கம். அப்போ மூணு டிரஸ் ராசியான டிரஸ் எடுத்து வச்சிடுவேன் எக்ஸாம்குன்னு , அதனால மாத்தி மாத்தி போட்டாலும் தெரியாது. அப்படியே படி படியா மூணு ரெண்டாச்சு , கடைசி வருஷத்துல ஒன்னு ஆச்சு. கடைசி வருஷம் மூணே மூணு பரீட்சை, ஆனா என்னோட துரதிர்ஷ்டம் ரெண்டு எக்ஸாம் அடுத்தடுத்து. ஆனா அதுக்கும் முன்னாடியே என் நண்பர்களுக்கு இந்த விஷயம் தெரிஞ்சு போச்சு. அதுக்கெல்லாம் கவலை படுற ஆள் இல்லை அப்போ. ஆனா இப்போ இங்க கம்பெனிக்கு வந்த பிறகும் அந்த பழக்கத்தை மாத்திக்கவே முடியல. போன சனி, ஞாயிறு ரெண்டு நாள் தொடர்ந்து MS எக்ஸாம். வழக்கம் போல ராசியான டிரஸ் போட்டாச்சு , ரெண்டாவது நாள் தான் ரொம்ப குழப்பமாகிடுச்சு , ஆபிஸ் நண்பர்கள் ஆச்சே கண்டுப்பிச்சா அசிங்கமாகிடுமேனு ஒரே கவலை. சரி வர்றது வரட்டும்னு துணிஞ்சு களத்துல இறங்கியாச்சு. என்னோட சீட்டும் கடைசிங்கறதால பிரச்சனை இல்லை. ரொம்ப சீக்கிரமாவே போய் உக்கார்ந்துகிட்டேன். யாரும் கேட்டுட கூடாது கடவுளே அப்படின்னு வேண்டிகிட்டு இருந்தேன். "Excuse Me" நிமிர்ந்து பார்த்தேன் , பக்கத்து சீட் பொண்ணு..பக்குனு ஆகிடுச்சு. இந்த பொண்ணு நேத்தும் இதே டிரஸ் தானே போட்டுட்டு வந்தா ????!!!!!!!!!!!!

#என்னை போல் ஒருத்தி

Tuesday, 19 June 2012

நினைவுகள் - 4

நேற்று கம்பெனி பேருந்தில் பயணம் செய்தபொழுது, பேருந்தின் கையொப்ப தாளில் தமிழில் பெயரை எழுதி கையொப்பமிட்டேன்.. அது குற்றமா? பேருந்தில் இருந்து இருந்து இறங்கியவுடன், என்னுடன் எப்பொழுதும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கும் ஒரு தோழி என்கிட்ட கேட்டாங்க, " ஏங்க தமிழ்ல பேர் எழுதி சயின் போட்டு இருந்தீங்க?"
"தமிழ்ல எழுத ஆசையா இருந்துச்சுங்க அதான்", 
"இல்ல எல்லாரும் அதப்பத்தி தான் பேசிகிட்டு இருந்தாங்க "
"ஓ சரி"
"உங்களுக்கு தமிழ்ல எழுத ஆசையா இருந்துச்சுனா வீட்ல போய் எதாவது பேப்பர்ல எழுதி பார்க்க வேண்டியதுதானே" (நக்கலான சிரிப்புடன்)
"ஏங்க நான் என்ன கிளைண்டுக்கு தர போற பிசினஸ் ரிப்போர்ட்லயா தமிழ்ல எழுதினேன் இல்ல ஸ்டேடஸ் ரிப்போர்ட்ல எழுதினேனா? இதுனால எதுவும் ஆகாதுங்க" (பயங்கர கோவத்தோட)
"அட அட என்ன ஒரு தமிழ் பற்று" (அதே நக்கல் சிரிப்பு)
"தமிழ் நம்மளோட மொழிங்க, என்னோட மொழில எழுதுறது எனக்கு ஒன்னும் அசிங்கம் இல்லங்க" (அதே பயங்கர கோவம் )
அமைதியாக சென்றுவிட்டாள் அந்த பெண்.....

ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது.. இனி நிறுத்திவிட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.. ஆம் இனி பேருந்து கையொப்ப ஏட்டில் கைஎழுத்திடுவதையே!!!

இது காதல் செய்யும் நேரம்



இது என் முதல் முயற்சி, என்னுடைய இந்த முயற்சிக்கு ஊக்கம் அளித்த என் நண்பர்களுக்கு நன்றி. எனக்கு தெரிந்த தமிழில் இந்த கதையை சொல்கிறேன்;தமிழ் ஆர்வலர்கள், தமிழ் நேசிப்பாளர்கள் இதை மன்னிக்க வேண்டும். பிழை இருப்பின் தயவு செய்து கூறுங்கள் கண்டிப்பாக திருத்திக்கொள்கிறேன் .
இந்த கதையில் வரும் சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே.யாருடைய மனமும் புண்படும் நோக்கில் இதை எழுதவில்லை.


300 பில்லியன் டர்ன் ஓவர்களை தாண்டி கொண்டிருக்கும் அந்த தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் இயந்திரங்களும் மனிதர்களும் வித்தியாசமின்றி இயங்கிகொண்டிருந்த மூன்றாவது தளத்தின் ஒரு மூலையில் மட்டும் ஏசியின் குளிரை தாண்டி அனல் கனன்று கொண்டிருந்தது..
காலைல இருந்து பிங் பண்ணிக்கிட்டு இருக்கேன் ஏன் ரிப்ளை பண்ணவே மாட்டேன்குறான். கவலை மனதை பிசைய கணிணித்திரையில் தெரிந்த நேரத்தை வெறித்தபடி நகத்தை கடித்துக்கொண்டிருந்தாள்.
ஒரு நிமிட காத்திருப்பிற்கு பின், “எவ்வளோ நேரம் தான் வெயிட் பண்ணறது” சலித்துக்கொண்டாள் .நண்பர்களின் அழைப்பு வரவே கணினியை லாக் செய்துவிட்டு கேபினை விட்டு வெளியே வந்தாள்.
அக்செசில் சொருகிய கார்டில் “அதுல்யா சங்கரன்” தேய தொடங்கி இருந்தது.
“ஓய் எவ்ளோ நேரம் வெயிட் பண்ணறது?” பொய் கோபத்துடன் தீபக் கேட்டான்
பதில் பேசாமல் மௌனமாக, போகலாம் என்ற சாக்கில் நடந்தாள் அதுல்யா.
“என்னாச்சு லூசு எதாவது பிரச்சனையா?? ஏன் அமைதியா இருக்க? “ஸ்ரீனி  அக்கறையுடன் கேட்டான்.
“ஒன்னும் இல்ல லேசா தலை வலி”
“டேய் அவங்க ‘உயரதிகாரி’ எதாவது காய்ச்சி இருப்பாங்க, அதான் இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி வருது” என்று சொல்லி திவ்யா சிரித்தாள்
“சத்தியமா ஒன்னும் இல்ல பேசாம வாங்க”
சாப்பிட்டு முடிக்கும் வரை நண்பர்களின் கலாட்டக்கள் எதிலும் கலந்து கொள்ளாமல், சாதத்தில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். உணவு உள்ளே செல்லாமல் தொண்டையை அடைத்தது.
இன்னும் சிறிது நேரம் அங்கு இருந்தால் திரைட்டு இருக்கும் கண்ணீர் வெளியே வந்துவிடும் என்பதை அறிந்து, வேலை இருக்கு என்று கூறி கிளம்பி விட்டாள்.
“என்னடா ஆச்சு இதுக்கு? காலைல நல்லாதானே இருந்தா”  இது தியாகு.
“தெரியலையே மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்” நண்பர்கள் கோரசாக சொல்லி சிரித்தாலும் அனைவர் மனதிலும் அவளுக்கு என்னாச்சு என்ற எண்ணமே ஓடி கொண்டிருந்தது.
கேபினுக்குள் நுழைந்த அதுல்யா கணினியை அன்லாக் செய்தவாறே பொத்தென்று இருக்கையில் அமர்ந்தாள்.திரையில் “ஹரிஷ் ஸ்ரீதர்” சாட் விண்டோ ஒளிர்ந்தது..
ச்சு கொட்டி சலிப்புடன் அதை மூடிவிட்டு  கம்யுனிகேட்டரில் ”ஆதித்யாஅரவிந்தனை” தேடி சொடுக்கினாள், ஆப்லைன் முகத்தில் அறைந்த நொடி அதுல்யாவிற்கு தலை விண் விண்ணென்று தெறிக்க துவங்கியது…

அதே சமயம், அந்த அலுவலகத்தின் இரண்டாவது மாடியில், குப்பைதொட்டியை கவிழ்த்து அதன் மேல் கால்களை நீட்டி, இரண்டு கைகளையும் தலைக்கு பின் கோர்த்து கணிணியை வெறித்துக்கொண்டிருந்தான் ஆதி என்கிற ஆதித்யா.. காதுகளின் உள்ளே “செந்தாழம் பூவின்” ஒலித்து கொண்டிருந்தது.
வீநெட் அலறியது “டேய் ஆதி என்னடா ஆப்லைன்ல இருக்க?”
“ஆமாம் டா என்ன பிரச்சனைனே தெரியல மச்சி காலைல இருந்தே யாருக்கும் பிங் பண்ணவே முடியல அதான் கடுப்பாகி சைன்அவுட் பண்ணிட்டேன்”
“நான் கூட ட்ரீட்க்கு பயந்து ஆப்லைன்ல போய்டியோனு பயந்துட்டேன் ஹி ஹி ஹி ”
“அடச்சே அதெல்லாம் இல்ல மச்சி இன்னைக்கு நைட் கண்டிப்பா பார்ட்டி உண்டு”
தலைவலி தாங்க முடியாததால் ஆறு மணிக்கே அதுல்யா கிளம்பிவிட்டாள். கிளம்பும் முன் மறுமுறை கம்யுனிகேட்டரில் ஆதியை தேடினாள், அதே நிலையை தான் காட்டியது.
பேருந்துக்கு அவசரமாக ஓடி ஏறி பார்த்தால் பேருந்து நிரம்பி வழிந்தது முன் சீட் மட்டுமே காலியாக இருக்க அதிலேயே அமர்ந்தாள்.
மதியம் சாப்பிடாததால் பசி தாங்க இயலாமல் கைப்பையில் வைத்திருந்த ஓட்ஸ் பிஸ்கட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள். பிஸ்கட்டில் இருந்த உப்புடன் ஆதி மேல் வந்த எரிச்சல் கலந்து கரிக்க தொடங்கியது.
தண்ணீர் குடித்தால் தேவலாம் போல இருந்தது, கைப்பையில் காலி பாட்டில் தான் இருந்தது. சரி பின்னாடி திரும்பி தண்ணீர் கேக்கலாம் என்று நேர் எதிர் பின்பக்க சீட்டை நோக்கி திரும்பினாள்….
அங்கே ஆதி ஒரு பெண்ணுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தான்…

நேரம் வரும், காத்திருப்போம்….

Sunday, 29 January 2012

நினைவுகள் - 3


ரொம்ப நாள் யோசிக்காம நிம்மதியா இருந்த விஷயம் ஒன்னு திடீர்னு  அலாவுதீன் அற்புத விளக்கு பூதம் மாதிரி முன்னாடி வந்து ரொம்ப தடுமாற வச்சிடுச்சு.

ஆபீஸ் ல இருந்து வீட்டுக்கு கெளம்பின அப்பறம் ஆபீஸ்ல இருந்து வர தொலைபேசி அழைப்புகள் எப்போவுமே தொல்லைபேசி தான், வேண்டா வெறுப்பா எடுத்து பேசினேன், ஏதோ tracker பில் பண்ணனும் டீடைல்ஸ் வேணும்னு கேட்டாங்க (வருஷத்துக்கு ஒன்பத்து ரெண்டு tracker பில் பண்ணுவாங்களே இவங்க ).. ஏன்யா காலைல இருந்தே அங்கன தானே குந்திகினு இருந்தேன், எப்படி வீட்டுக்கு கெளம்பின அப்பறம் கால் பண்ணறிங்க...அட அத விடுங்க விஷயத்துக்கு வரேன் அவங்க கேட்ட விஷயம் தான் முக்கியம்.
இரண்டு கேள்விகள் (பதில் கடைசில சொல்றேன்)
1 . உங்க career Aspiration என்ன??
(நான் அப்படியே ஷாக் ஆய்டேன்)
2. Onsite போற பிளான் இருக்கா, அப்படி இருந்தா லாங் டெர்ம்ஆ ஷார்ட் டெர்ம்ஆ
(இந்த கேள்வி ஐ லைக்கோ லைக்)

உடனே சுதாரிச்சுக்கிட்டு முதல்ல இரண்டாவது கேள்விக்கு பதில் சொல்றேன்னு சொன்னேன், சரின்னு சொன்னாங்க. (உரையாடலையே  சொல்றேன் அதான் flow கரெக்டா வரும்)

நான் : " லாங் டெர்ம் பிளான்லாம் இல்ல, ஷார்ட் டெர்ம் பிளான் ஓகே"
தொல்லைபேசி: "ஷார்ட் டெர்ம்னா எப்படி எதிர்பாக்குறீங்க?
நான்: (மனசுக்குள் யோவ் ரெண்டு கேள்வி தானே கேக்க போறனு சொன்ன, இது என்ன மூணாவது கேள்வி)
ஒரு 1 வருஷம், இல்ல ரெண்டு வருஷம்னாலும் ஓகே
தொல்லைபேசி: ஏங்க அது தான் லாங் டெர்ம்ங்க
நான் : அவ்வவ் அப்படியா ?? ஹி ஹி .. அப்போ ஷார்ட் டெர்ம்னா என்னங்க??
தொல்லைபேசி: மூணு மாசம் இல்லனா ஆறு மாசம்
நான்: (மனசுக்குள் : அட கடவுளே இந்த கருமம் தெரியாம போச்சே, லாங்  டெர்ம்னு சொல்லி இருக்கனுமோ?? )
ஆ அப்படி.. ம்ம்ம் சரி அதையே போட்டுகோங்க..
தொல்லைபேசி: சரி சரி, முதல் கேள்விக்கு பதில் சொல்லுங்க.
நான்: முதல் கேள்வியா அது என்னங்க??
தொல்லைபேசி: அதாங்க career Aspiration
( என்ன கருமமோ !! ஸ்பெல்லிங் கூட தெரியல )
நான்: (மனசுக்குள்: மறுபடியும் இந்த கேள்விக்கு வந்துட்டாங்களே)
எனக்கு ஒரு ரெண்டு நிமிஷம் டைம் குடுங்க யோசிச்சு சொல்றேன்
தொல்லைபேசி: அதெல்லாம் முடியாதுங்க இப்போவே ப்பில் பண்ணனும் உடனே சொல்லுங்க
நான்:
சரி ஒரு 1 நிமிஷமவாது டைம் குடுங்க.
தொல்லைபேசி: சரி சரி நான் லைன்ல இருக்கேன் சொல்லுங்க
நான்: (என்ன வில்லத்தனம்). அதாவதுங்க நான் சொந்தமா...
தொல்லைபேசி: ஏங்க அதெல்லாம் இல்ல, organisation குள்ள சொல்லுங்க
நான்: அவ்வ்வ்வ்

சரி இனி தான் விஷயமே, எனக்கு சத்தியமா பதிலே தெரியல, mute  போட்டுட்டு பக்கத்துல இருந்த நண்பன்கிட்ட கிட்ட கேட்டேன்

நான் : நண்பா career Aspiration னா என்ன ? அப்படி ஒன்னு இருக்க இல்லையா? அது இருக்கறதுக்கான அறிகுறி என்ன?

பாவம் பயபக்கி என்னை போலவே இருக்கு... அவனுக்கும் தெரியல என்னென்னமோ உளறுறான்...

ஹ்ம்ம் அப்பறம் என்ன பண்றது நண்பன் உளறுனதையே நானும் உளறி வச்சேன்...

நினைவுகள் - 2

எங்க டீம் தல வீட்டு க்ரஹப்ரவேஷதுக்கு கிப்ட் வாங்கிட்டு பர்ஸ பார்த்தப்ப ஆனந்த அதிர்ச்சி.. :D :D என்றைக்கும் பத்து பைசா இல்லாத பர்ஸ்ல இருந்த பத்து ரூபாய், பத்துலட்ச மகழ்ச்சிய குடுத்துச்சு, பல நாள் ஆசை , என் மசால் பூரி ஆசை மனசை கிளரிவிட்டுடுச்சு. இருக்காதா பின்னே, ஆசையாய் மசால் பூரி கடையை நோக்கி சென்று, 10 பைசா பர்ஸ்ல இல்லாம திரும்பிய நாட்கள் உண்டு.. அதனால என்றும் மெதுவாக சோம்பி நடக்கும் கால்கள், பர பரவென ஓட துவங்கியது. ஆனால்... பூட்டிய கடை முகத்தில் அறைந்தது.. :'( :'(, அதுவரை பரபரத்த கால்கள் துவண்டு நடுங்கியது... கெஞ்சி அடம் பிடித்து பலூன் வாங்க காசு வாங்கி தெரு நோக்கி ஓடி வந்து, பலூன்காரன் தலை மறைந்த வீதியை கண்டு மனம் வெம்பி அழ தயாராகும் குழந்தையின் அழுகை தொண்டை குழியில் முட்டிக்கொண்டு நின்றது...
அந்த பத்து ரூபாயை செலவழித்தால் மட்டும் மனம் நிம்மதி அடையும் என புத்தி சொன்னது ( புத்தியும் மனசும் வேற வேறயானு கேட்டுடாதீங்க சத்தியமா எனக்கு பதில் தெரியாது). ஒரு வழியா முடிவு பண்ணி தெரு முனை பிள்ளையார் கோவில் கிட்ட இருந்த பெட்டி கடைல முறுக்கும் கடலை உருண்டையும் வாங்கி சாப்பிட்டேன் (முறுக்கு இன்னும் நாலணாவிற்கு விக்குதுங்க !!!). அப்பறம் என்ன ஹாப்பி எண்டிங் தான், ஜாலியா முறுக்கு சாப்ட்டுகிட்டே வீடு வந்து சேர்ந்தாச்சு...moral : ஆசைப்பட்டது கிடைக்கலனா, கிடைச்சத ஆசை பட்டு ஏத்துக்க வேண்டியது தான் :P :P

நினைவுகள் - 1

நேற்று இரவு அம்மாவை அழைத்து வர மாம்பலம் ரயில் நிலையத்திற்கு சென்றிருந்தேன்.ரயில் வர தாமதமானதால், அப்படியே ரெங்கநாதன் தெருவில் இறங்கி நடக்க தொடங்கினேன், இரவு ஒன்பதரை மணிக்கு கூட மிச்ச சொச்ச கூட்டம் கடைகளை மொய்த்து கொண்டிருந்தது. எதையும் வாங்கும் எண்ணமில்லை என்று சொல்லவதை விட வாங்க காசில்லை என்று சொல்லவே விரும்புகிறேன். அப்படியே காலாற நடந்தபோது ஒரு தாய் தன் 12 வயதிருக்கும் மகனை அதட்டி கொண்டே பின்னே சென்றார்,
"டேய் வாட்ச் தானே வாடா வாங்கித்தரேன் "
"வேண்டாம் போ"
"அட வா தம்பி அதான் வாங்கி தரேன்னு சொல்றேன்ல"
"வேண்டாம்னு சொல்றேன்ல விடு, முதல்ல கேட்டப்ப வாங்கி தரல்லல அப்பறம் என்ன ? வேண்டாம் போ "
உரையாடல் காதுகளுக்கு எட்டாத தூரம் சென்றுவிட்டிருந்தது ... மனம் பின்னோக்கி நினைவலைகளுக்குள் சென்றது... இதே போல் என் அம்மா என் பின்னே பாசத்தோடு அதட்டிக்கொண்டு வந்தார்..

ஹ்ம்ம்ம் அதெல்லாம் ஒரு காலம்.. இப்பொழுதெல்லாம் எதையும் கேட்டு வாங்க வேண்டிய அவசியம் இருபதில்லை.. விரும்பியதை விரும்பாததயோ வாங்கி கொள்கிறேன், அத்யாவசியமா என்று கூட நினப்பதில்லை... புதிதாக எதாவது வாங்கினால், கூட அம்மாவே இது புதியதா என்று கேட்கும் வரை சொல்லவதுமில்லை, அல்லது சொல்ல கூட நேரமில்லாத நிலை.

வரட்டு பிடிவாதத்துடன் முன்னே முறுக்கி கொண்டு சென்ற என்னை அதட்டி கூப்பிட்ட அம்மாவின் குரலை ரயில் ஓசை கலைத்துச் சென்றது

அவளுடைய அவன்

அவளுடைய அவன்

அவளுக்கு அவன் மீது காதல்…அது என்றுமே தீராத காதல். ஒவ்வொரு நாளும் அவனை புதிது புதிதாக பார்க்கிறாள், பார்க்கும் நொடி எல்லாம் அவள்ளுள் புதிதாகவே காதல் பூக்கிறது.

அவனின் சிவந்த நிறத்திலும் ரோஜா கன்னங்களிலும் அவள் மயங்கி இருக்கிறாள். அவனின் சிவந்த தேகம் கண்டு அவள் கண்கள் நாணிச் சிவக்கும்.

அவன் இல்லையென்றால் அவளுக்கு ஒரு வேலையும் ஓடாது என்பதை அவள் அறிவாள், அதனாலேயே அவன் எப்போதும் இல்லாது போகாமல் பார்த்துக்கொள்கிறாள்.

அவனில்லாது போன பல நாட்கள் அவனுக்காக காத்திருக்கிறாள்.

அவன் அவளை அழ வைத்திருக்கிறான், சில நாட்கள் குறைவாக; சில நாட்கள் மிகுதியாக. அவளின் கண்ணீரும் அவனை நேசிக்கின்றது. அவன் மேல் அளவுகடந்து கொண்டுள்ள காதல் அவள் கண்ணீரையும் சில நொடிகளில் கரைத்து விடுகின்றது…

அவனை யாரவது தவறாக கூறினால், தாங்கமாட்டாமல் அவ்விடம் விட்டு நகர்ந்து விடுவாள்.

அவனிடம் அவள் நிறைய பாடங்களை கற்றிருக்கிறாள்; அதில், “தேட தேட ஒன்றும் இல்லாமல் முடியும் வாழ்கை பாடம்” அவளுக்கு மிகவும் பிடித்தமானது.

அவனை தவிர்க்க அவளுக்கு மனமே வராது..மற்றவர்கள் தவிர்த்தாலே அவள் தவிப்பாள்.

அவன் -

எத்தனை காயங்கள் அவளால் பெற்றாலும், என்றும் அவள் கையில் ஆசையாய் அடங்குவான்…. அவளின் “வெங்காயம்”

பி.கு Specially dedicated to அம்மா. அவங்களுக்கு வெங்காயம் ரொம்ப பிடிக்கும். :P

Sunday, 15 January 2012

அவமான படுத்துரதுன்னா மொத ஆளா வந்துடுவாங்க


சம்பவம் 1
இடம் உணவு விடுதி
நானும் நண்பனும்
நான் : எதுக்கு ஸ்பூன்
நண்பன் : இதென்ன கேள்வி சாப்பாடு சாப்பிட தான்
நான் : :@ :@ :@
நான் : கை இருக்குல்ல
நண்பன் : ஆமாம் இருக்கு, வேணும்னா பாரேன் :D :D
நான் :  உனக்கென்ன கைல குஷ்டமா ஏன் ஸ்பூன் ல சாப்புடுற
நண்பன் : கைல குஷ்டம் இருந்தா ஸ்பூன் பிடிக்க முடியுமா என்ன 
நான் : எனக்கு தெரியாது
நண்பன் : என் கை என் ஸ்பூன் என் சாப்பாடு உனக்கென்ன வலிக்குது, உன் சாப்பாட சாப்பிட்ட மாதிரி அழுவுற
நான் :  ரைட் விடு  :@ :@
சம்பவம் 2
இடம் ரயில்
நானும் தங்கையும்
(பக்கத்தில் இருந்த ஒரு குடும்பம் ரயிலில் ஏறியதில் இருந்து எதாவது சாப்பிட்டு கொண்டே இருந்தனர் )
நான் : ஏய் இங்க பக்கத்துல்ல இருக்கற கும்பல பாரேன் எதாவது தின்னுக்கிட்டே இருக்காங்க எரிச்சலா இருக்கு
தங்கை :  ஏன் எரும உனக்கு வேணுமா  :D :D
நான் :  தூ ஓடிரு :@
தங்கை : தேங்க்ஸ் டி அப்போ அம்மாகிட்ட சொல்லிடு :D :D
நான் : ரைட் விடு :@ :@
சம்பவம் 3
இடம் ஆபீஸ்
நான் தோழி(அடிக்கடி தின்பண்டம் தரும் தோழி ) மற்றும் பலர்
தோழி : (மெயில்) என் இடத்திற்கு வரவும்
நான் : (வேகமாக ஓடினேன், கூட வந்த இன்னொரு தோழியை இடித்து தள்ளி விட்டு ஓடினேன்) :D :D
நான் : குடுங்க குடுங்க
தோழி : அட சே எப்போ கூப்ட்டாலும் திங்க தான் கூப்பிடுவாங்களா
(சுற்றி எல்லாரும் சிரிக்க ஆரம்பித்தனர் )
நான் : ரைட் விடுங்க :@ :@
சம்பவம் 4
இடம் லிப்ட்
நான் நண்பன் மற்றும் பலர்
நான் : ஏய் ஜீரோ பிரஸ் பண்ணு கீழ போகணும்
நண்பன் : அதுக்கு எதுக்கு ஜீரோ வ பிரஸ் பண்ணனும் :D :D
நான் : ஏன் வேற என்ன பண்ணனும் ???!!! (வினை எங்கயும் இல்ல என் நாக்குல தான் இருக்கு)
நண்பன் : நீ ஒரு தடவ குதி போதும் லிப்ட் தானா கீழ போய்டும் :D :D :D
நான் : :@ :@ :@
இன்னொரு நண்பன் : பாத்து பா பூமிஎ பொளந்துட்டு கீழ போயிட போகுது :D :D
நான் :  :@
நான் : நண்பா நான் என்ன குண்டாவா இருக்கேன் :'(
நண்பன் : இல்லையே
நான் : அப்பறம் :(
நண்பன் : ரொம்ப குண்டா இருக்க :D :D :D
நான் : ரைட் விடு :@ :@
பிளான் பண்ணி அசிங்கபடுத்துவாங்களோ  :@

எரிச்சலா வருதுங்க


சில விஷயத்துல நமக்கு வர எரிச்சல கண்டிப்பா அடக்கவே முடியாது 
1 ).  சில நேரத்துல ரொம்ப முக்கியமா எதாவது தேடிகிட்டு இருப்போம்… ஆனா அது மட்டும் கிடைக்கவே கிடைக்காது அப்போ வரும் பாருங்க எரிச்சல்…  அதுவும் முக்கியமா காலைல அவசர அவசரமா கெளம்பும்போது தான் ஊக்கு கண்டிப்பா கண்ல சிக்காது… ஆனா வேற எதாவது பொருள் தேடும்போது டஜன் டஜனா கிடைக்கும் அப்போ வரும் பாருங்க எரிச்சல்  :@ :@ :@
2 ). ஒரு காலத்துல 570 பஸ்க்கு  வெயிட் பண்ணும்போது, ஒரு 570  பஸ் கூட வராது… வரிசையா 19b  தான் வரும்.. ஆனா இப்போ 19b க்கு வெயிட் பண்ணினா வரிசையா 570  தான் வரும்.. அப்போ வரும் பாருங்க எரிச்சல் :@ :@ :@
3 ). 8 மணி பஸ் க்கு ஏழு ஐம்பதுக்கே போய் நின்னா கண்டிப்பா பஸ் எட்டேகாலுக்கு தான் வரும்.. சரி பஸ் லேட்டா தானே வருதுன்னு எட்டு அஞ்சுக்கு போனா பஸ் ஏழு ஐம்பத்தியொன்பதுக்கே போய்டும்.. ஏன் இப்படி.. இல்ல ஏன் இப்படி  :@ :@ :@
4). ரெண்டு வாரம் துணி தொவைக்காம சேத்து வச்சி மொத்தமா ஞாயத்துகிழம உக்காந்து மாங்கு மாங்கு னு தொவைச்சா… மழை போட்டி போட்டுக்கிட்டு வெளுதுக்கட்டும்போது எரிச்சல் வரும் பாருங்க  பிளான் பண்ணி தான் உசுர வாங்குமோ இந்த மழை  :@ :@ :@
 5 ). புது டிரஸ் போட்டுக்கிட்டு சீன் போடலாம் னு ப்ளான் பண்ணி போட்டா.. என்னைக்கும் எந்த டிரஸ்லயும் மாட்டாத பாத்ரூம் கதவு ஆணி கண்டிப்பா புது டிரஸ்ச மாட்டி இழுக்கும்… ஆணிய !@#$%^& வேணாம்  :@ :@ :@
 6 ).  காலைல 9  ஸ்டேடஸ் கால்ல முக்கியமா எதாவது சொல்லவேண்டியது இருக்கும் ஆனா பஸ் கண்டிப்பா ஒன்பதரைக்கு தான் போகும்.. கடவுளே இன்னைக்கு ஸ்டேடஸ் கால எப்படியாவது டபாய்ச்சிடனும்னு நினைக்கிற நாள்ல தான் பஸ் 9 மணிக்கே ஆபிஸ் போய்டும்.. அப்போ வரும் பாருங்க எரிச்சல் :@ :@ :@
7 ). கைல காசு இருக்கும்போதெல்லாம் இந்த மசாலா பூரி சாப்பிட ஆசை வராதுங்க.. ஆனா என்னைக்காவது ஆசையா மசாலா பூரி சாப்பிடலாம்னு போய் நின்னு பர்ஸ தொறந்தா 2 ரூபா 50  பைசாக்கு மேல தேராது.. அப்போ வரும் பாருங்க எரிச்சல்  :@ :@ :@
8 ). எல்லா சனி கிழமையும் ஆபிஸ் போயிட்டு எதாவது ஒரு சனி கிழம எங்கயும் ஊரு சுத்தாம ஜாலியா ரூம்ல ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைக்கிற அன்னைக்கு கண்டிப்பா கரண்ட் முழு நாளும் இருக்காதுங்க.. சாயங்காலம் ஆறு மணிக்கு தான் கண்டிப்பா கரண்ட் வரும்…அப்போ வரும் பாருங்க எரிச்சல்  :@ :@ :@
ஹ்ம்ம் என்ன பண்றது எல்லாம் நேரம்… விதி வலியது…    :@ :@ :@

வெட்டியா இருக்கறது ஒன்னும் சாதாரண விஷயம் இல்ல


கஷ்டப்பட்டு அடிச்சு பிடிச்சி ஒரு வழியா ரிலீஸ் வாங்கிட்டேன்….  :D :D :D
அப்பாடா.. அப்படின்னு நிம்மதியா வீட்ல இருந்திருக்க வேண்டியது தானே (மனசாட்சி)
அட மனசாட்சி ஆயிரம் சொல்லுங்க மனுஷனுக்கு நேர்மை நாணயம் முக்கியமுங்க   (க்கும் இதுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல )
சரி உண்மைய சொல்லனும்னா வீட்ல தனியா இருக்க போர் அடிக்கும், ஏசி இருக்காது (ஹி ஹி ), வீநெட் இருக்காது, நெட் காசு கொடுத்து உபயோகிக்கணும்.. இதையெல்லாம் யோசிச்சு ஆபீஸ் வந்தேனுங்க (வந்ததுக்கு தான் வச்சாங்களே ஆப்பு )
எங்க டீம்ல (ஓ டீம் தான் இல்லையோ) சீனியர் ஒருத்தர்: என்ன கார்கி ஒரே ஜாலியா….
நான் : (மனசுக்குள்ள “இப்போ தானேயா வந்தேன் அதுக்குள்ளயா)
ஹி ஹி அப்படிலாம் ஒன்னும் இல்லைங்க.. யார்கிட்ட போய் ரிப்போர்ட் பண்ணணும்னு தெரியல போய் பாக்கணும் ( இப்படி சொல்லி தான் தப்பிச்சுக்கணும்)
சீனியர்: ஓகே ஓகே  (நக்கல் சிரிப்பு)
இந்த நண்பர்கள் இருக்காங்களே.. ஹ்ம்ம் அவங்க தான் நம்மள வாரி விடுறதுல மொத ஆளா வந்து நிப்பாங்க
நண்பன் : நண்பா வா வா உன்ன தான் எதிர் பார்த்துக்கிட்டு இருந்தேன்
நான் : (மனசுக்குள்ள ஆகா ஆரம்பமே அமர்களமா இருக்கே)
என்ன நண்பா
நண்பன் : ஹி ஹி ஹி என்ன வெட்டியா
நான் : நான் தான் அதுக்கு சந்தோஷ படனும் நீ ஏன் சிரிக்கிற
நண்பன் : சை உன்ன மாதிரி வெட்டி பயலுக்கெல்லாம் ஏன் சம்பளம் குடுக்குறாங்களோ
நான் :இதுக்கு தான் எதிர் பார்த்துக்கிட்டு இருந்தியா :@ :@ :@ ஓடிரு
சரி நாம வெட்டியா இருக்குற மாதிரி காட்டிக்க கூடாதேனு சும்மா vb ஸ்கிரிப்ட் அது இதுன்னு ப்ரௌஸ் பண்ணிக்கிட்டு இருந்தேன்  ( இது தான் நான் பண்ணின மொத தப்பு   )
நண்பி : ஒரு நாள்ல அப்படியே எல்லாம் படிச்சு கிழிச்சு அறிவாளி ஆகுற மாதிரி தான்
நான்: உனக்கு பொறாமை நான் எங்க அறிவாளி ஆய்டுவேனோனு
நண்பி: வெட்டியா வாய் பேச்சு பேசி என் நேரத்தை வீணாக்காத
நான்: எனக்கும் ஒரு காலம் வரும் டீ
நண்பி: வந்தா பாத்துக்கலாம்
நான்:  ஓடிரு
எவ்வளோ நேரம் தான் நானும் படிக்கிற மாதிரியே நடிக்கிறது…
அங்க இங்க போய் சுத்தி எல்லார்கிட்டயும் அசிங்க பட்டதுதான் மிச்சம்… இது போதாதுன்னு “இன்னும் வேற ப்ராஜெக்ட் allocate ஆகலையா”னு கேட்டே சாவடிபாங்க…
இதுல யாரடா எப்ப பயமுறுத்தலாம் னு ஒரு கூட்டம் சுத்திக்கிட்டு இருக்கும் பாருங்க “இயர்-எண்டு அப்பரைசல், recession .. அப்படி இப்படி னு பீதி கெளப்பிக்கிட்டு திரிவாங்க… ( ஏன்டா ஒரு வாரம் தானே வெட்டியா இருக்கேன்.. அதுகூட உங்களுக்கு பொறுக்கலியா   )
கடவுளா பாத்து discussion னு ஒரு ப்ரோஜெக்ட்க்கு அனுப்பி வைச்சாரு (அது கடவுள் இல்ல சாத்தன் னு அப்பறம் தான் தெரிஞ்சுது )
கொடும கொடுமனு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடும டிங்கு டிங்குனு ஆடுச்சாம்…. அப்படி ஆய்டுச்சுங்க என் கதை
discussion ங்கற பேர்ல கரெக்டா எனக்கு தெரியாததா கேட்டாங்க பாருங்க ( மனசாட்சி - ஆமாம் அப்படியே தெரிஞ்சிட்டா மட்டும் )
அவங்க கேட்டது கூட பரவா இல்லங்க… ஒரு வருஷமா இந்த வேலையத்தான் பாத்துகிட்டு இருந்தீங்களானு கேட்டுட்டாங்க.. அத தான் தாங்க முடியல ( சே ஒரு வாரம் prepare பண்ணினது வேஸ்ட்ஆ போச்சே)  :’(  :’(
மறுபடியும் என்ன..  ப்ரொவ்சிங்,பிரேக், கதை பேசுறது… ஹ்ம்ம் வெட்டி தான்
ஆனா ஒன்னு தெரிஞ்சிகோங்க… வெட்டியா இருக்குறது ஒன்னும் சாதாரண விஷயம் இல்ல.. அதுக்கும் ஒரு திறமை வேணும்(எல்லாரையும் சமாளிக்கணும் ல), பொறுமை வேணும் ( எதிரிங்க ஜாஸ்தி பாஸ்…)  
அதனால வெட்டியா இருக்குறவங்கள ஏளனமா பேசாதிங்க, அசிங்க படுத்தாதிங்க பா…  :)  
மனசாட்சி - சரி சரி கவலைபடாத “இதுவும் கடந்து போகும்”
நான் - ஓடிரு

அப்பா……


உன் மீது கால் போட்டு
நான் தூங்காத நாளில்லை ..
உன் கால்கள் மீது
என் கால்கள் வைத்து
நான் நடை போடாத நாளில்லை ..
உன் கைலியில் அமர்ந்து
நான் ஊஞ்சலாடாத நாளில்லை..
ஒவ்வொரு முறை நீ
ஊரில் இருந்து திரும்பும்போதும்
நான் ஓடி வந்து அணைக்காத நாளில்லை ..
முடி வெட்ட விருப்பம் இல்லாவிட்டாலும்
நீ அழைத்து நான் வராத நாளில்லை ..
எத்தனை முறை பென்சிலை தொலைத்தாலும்
எதுவும் கூறாமல்
நீ வாங்கி தராத நாளில்லை …
அம்மா ஊருக்கு செல்லும்போதெல்லாம்
அக்கறையாய்
நீ கவனிக்காத நாளில்லை …
இப்பொழுதெல்லாம் உன் நினைவு நாளில்
மட்டுமே இவை நினைவுக்கு வருகின்றது அப்பா….

Monday, 9 January 2012

மிச்சம்



பாதி படித்து வைத்த
புத்தகத்தின்
மிச்ச வார்த்தைகள்
கை கோர்த்து விளையாடுகின்றன
என் கனவின் தாழ்வாரத்தில்.......

வரி வடிவமின்றி
எழுத்துக்களாகவும்
ஓசைகளாகவும்
ரீங்காரமிடுகின்றன
என் கனவின் காதுகளில்...

சில கோபத்துடனும்
சில கெஞ்சலுடனும்
முழுதாக ஆக்கிரமிக்கின்றன
என் கனவின் தூரத்தை....

நான் திடுக்கிட்டு
விழிக்கும் வரை
அவை
மெதுவாக புசிக்கின்றன
என் கனவின் ஆழத்தை.....