ரதி!!
பேருக்கேற்றார் போல ரதி தான். முதன்முதலாக அவளை ("அவள்" என்று பார்த்தபொழுது தெரியாது) வேப்பேரியில் ஒரு பெட் ஹௌசில் வைத்து பார்த்தேன். அண்ணனோ தம்பியோ ஒரு கருத்த சிறுவனுடன் பிளாஸ்டிக் கூடையில் அடைத்துக் கொண்டு வரப்பட்டாள். அவள் அண்ணன் (
பேருக்கேற்றார் போல ரதி தான். முதன்முதலாக அவளை ("அவள்" என்று பார்த்தபொழுது தெரியாது) வேப்பேரியில் ஒரு பெட் ஹௌசில் வைத்து பார்த்தேன். அண்ணனோ தம்பியோ ஒரு கருத்த சிறுவனுடன் பிளாஸ்டிக் கூடையில் அடைத்துக் கொண்டு வரப்பட்டாள். அவள் அண்ணன் (
சற்று பெருத்த உருவமாதலால் அண்ணன் எனக்கொள்ளப்பட்டது) நல்ல துறுதுறுவென்று அங்குமிங்கும் ஓடி விளையாடிக்கொண்டிருந்தான். இவளோ நோஞ்சான் போல ஒரே இடத்தில அசங்காமல் நின்றுக் கொண்டே இருந்தாள். வீட்டில் ஏற்கனவே ஒரு கருப்பு நாய் இருந்ததால் அம்மாவிற்கு மறுபடி கருப்பு நிற நாய் வாங்க இஷ்டம் இல்லை. இவளோ நல்ல இளம் தங்கநிறத் தோலுடன் மின்னிக்கொண்டிருந்தாள். அம்மா என்னுடன் சண்டை பிடித்து இவளை வாங்கிவிட்டார்கள். அவள் அண்ணனை முதலில் கூடையில் போட்டு எடுத்து சென்று விட்டார்கள். ஏற்கனவே சொங்கி போல இருந்தவளுக்கு இன்னும் முகம் எல்லாம் சுருங்கி விட்டது. தாயை பிரிந்து வந்த சோகம் வேறு; இருக்கத்தானே செய்யும். என் அம்மா அதை எல்லாம் கண்டுக்கொள்ளாதவள் போல என்னை தூக்கி வர சொல்லிவிட்டார்கள். ஒரு பிளாஸ்டிக் கூடை வாங்கி அதனுள் படுக்க வைத்து கார்க்கு கொண்டு சென்றோம். காரை எடுத்தவுடன் முட்டி மோதுகிறது கூடையினுள் அழுகுரல். சரி கூடையில் அடைத்து வைத்ததால் ஏற்பட்ட பயமோ என்னவோ என்று அவளை வெளியே தூக்கிய நான் அவள் முகத்தை பார்த்ததும் அதிர்ந்து விட்டேன். தாரை தாரையாக வடிகிறது அவள் கண்களில் கண்ணீர். அதுவரை நாய்கள் ஊளையிட்டு, அடிவாங்கி கத்துவதை மட்டுமே பார்த்திருக்கிறேன் ஆனால் இப்படி கண்களில் கண்ணீர் வடிந்து கண்டதே இல்லை. ம்ம்ம் ம்ம்ம் என்று சிறு குழந்தை போல முனங்கிக் கொண்டே அழுகிறாள், ஒரு கட்டத்தில் எனக்கும் கண்கள் கலங்கி விட்டது. அம்மா பாவம் மா கொண்டு போய் விட்டலாம் மா என்று அம்மாவிடம் கூறினேன். அம்மாவிற்கோ அவளை எப்படி ஊருக்கு கொண்டு செல்வது என்பதிலேயே யோசனையாக இருந்ததால் நான் கூறியதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு வழியாக சென்னையில் இருந்த என் அறைக்கு அவளை எடுத்து வந்து பால் சிறுது புகட்டி, பிஸ்கட் ஊட்டி விட்ட பிறகு மெது மெதுவாக அங்கும் இங்கும் ஓடி விளையாட துவங்கினாள். அப்பா அந்த இரண்டு மாத குட்டிக்கு தான் என்னோவொரு ஓட்டம் ஆட்டம். அவளுடன் நானும் சேர்ந்து விளையாட துவங்கினேன், கூர்மையாகாத மென்பற்கள் ஊறுவதால் கைகளை கடிப்பது, கால் விரல்களை கடிப்பது என்று ஒரே அமர்க்களம் பண்ணிவிட்டாள். இரவு ஊருக்கு செல்ல ஆயுத்தமானோம். எப்படி தான் அது தெரிந்ததோ அவளுக்கு முகமெல்லாம் மறுபடியும் சுண்டி விட்டது, விளையாடி களைப்படைந்து விட்டாள் என்று எண்ணினேன். சற்று நேரத்திற்கெல்லாம் உண்மையாகவே களைப்படைந்து உறங்க துவங்கி விட்டாள். அப்பாடா உறங்கி விட்டாள் என அம்மாவிற்கு ஒரே சந்தோசம். ரயில் நிலையத்தை சென்றடைந்தோமோ இல்லையோ விழித்துக்கொண்டு விட்டாள். தாயை தேடும் பிள்ளை அழத்தானே செய்யும். புது இடம் புது ஜந்துக்கள் ஒரே கூச்சல், கூட்டம் எல்லாம் சேர்ந்து அவளை மிரளச் செய்துவிட்டது. ஊஊ என ஒப்பாரி பாட்டு பாட ஆரம்பித்து விட்டாள்.மறுபடியும் நான் அவளை கையில் தூக்கி வைத்துக் கொண்டு, என் அம்மாவை நாலு திட்டு திட்டிக்கொண்டே பிளாட்பாரம் நோக்கி நடக்கத் துவங்கினேன். இருந்த எரிச்சலில் அவள் வாயில் பிஸ்கட்டை திணித்து விட்டேன். மறுபடியும் அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து விட்டது. நானென்னவோ அவளைக் கொடுமை படுத்துவது போல எல்லாரும் என்னையே வெறிக்க வெறிக்க பார்த்தனர். இதில் சில ஐடியா மணிகள் வேறு ஆலோசனை வழங்கத் துவங்கினர்; அப்படிக் கொண்டுபோகலாமே இப்படி கொண்டு போகலாமே என்று ஆரம்பித்துவிட்டனர். கடுப்புடன் ஏறி கோச்சில் அமர்ந்தால் இன்னும் ஊஊ என்று அழுதுகொண்டே இருக்கிறாள். டிடிஆர் வரும் நேரம் வேறு, இவள் இப்படி சத்தம் போட்டுக்கொண்டு இருந்தால் சக பயணிகள் எதாவது கடிந்துகொள்வார்கள் என்ற பயம் வேறு சேர்ந்துகொண்டு தூக்கமே தொலைந்துவிட்டது. சரியாக டிடிஆர் வரும் நேரம் சத்தமெல்லாம் அடங்கி (அடக்கி) அமைதியாகிவிட்டாள். அவரும் இவள் தலையை தடவிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். எங்களுக்கோ ஒரே ஆச்சரியம். அவ்வளவு நேரம் கத்தி ஆர்ப்பாட்டம் செய்துக்கொண்டிருந்தவள் அப்படியே அடங்கிவிட்டாள். இப்பொழுதே தப்பித்துக்கொள்ள வேண்டும் என்று நடு பெர்த்தில் ஏறி படுத்துக்கொண்டேன். அம்மா கீழ் பெர்த்தில் படுத்து உறங்க தலைப்பட்டாள். சிறுது நேரத்திற்கெல்லாம் நான் நினைத்தபடியே மறுபடியும் அழ ஆரம்பித்து விட்டாள். என் அம்மா எழுந்து அவளை தூக்கி பக்கத்தில் படுக்க வைத்துக்கொண்டாள். அம்மாவின் உடம்பு கதகதப்பில் சிறிது நேரத்திற்கெல்லாம் அடங்கிவிட்டாள். ஒரு வழியாக ஊர் போய் சேர்ந்தோம். மெல்லிய பட்டை ஒன்றை கழுத்தில் கட்டி ஸ்டூல் ஒன்றில் இணைத்துவிட்டு படுத்தோம். கொஞ்ச நேரமாவது தூங்கலாம் என்று நினைத்தால் அழுதழுது தூக்கத்தையும் கெடுத்து விட்டாள். என் அம்மா வேலைக்கு கிளம்பி சென்ற பின் , சோபாவிலேயே சாய்ந்துவிட்டேன். இவள் கத்திக்கொண்டே இருந்ததால் கயிற்றையும் அவிழ்த்துவிட்டு நான் தூங்க தொடங்கிவிட்டேன். ரொம்ப நேரம் சோபாவிற்கு அருகே எம்பி எம்பி என்னைக் கூப்பிட்டுக்கொண்டிருந்தாள். முந்தய நாள் அலைச்சலும், சோர்வும், தூக்கமின்மையும் ஒன்று சேர்ந்து கண்களை திறக்க முடியாதபடி அழுந்த மூட செய்துவிட்டது. ரொம்ப நேரம் தூங்கியது போன்ற எண்ணம் வர திடுக்கிட்டு கண் திறந்தேன். இவள் சத்தத்தையும காணவில்லையே என்று பதறி எழுந்தால் காலுக்கு கிழே மெத் மெத்தென்று உருண்டையாய் எதோ ஒன்று. இவள் தான். பிறகு வீடும் அம்மாவும் இவளுக்கு நன்கு பழகி விட்டது. ஆனால் நான் மட்டும் ஏனோ பழகவில்லை. நான் கிழே இறங்கினாலே வந்து கடிக்கிறாள். விளையாட போனாலும் கை கால்களை கடிக்கிறாள். ஓடிப்போ என்று நானும் ஒதுங்கி உட்கார்ந்துகொண்டால் வந்து டிரெஸ்ஸை இழுத்து விளையாட கூப்பிடுகிறாள். அவளுக்கு என்ன பேர் வைப்பது என்று மாத்தி மாத்தி ஆளுக்கொரு பேர் சொல்லிக்கொண்டிருந்தோம். எங்கள் சித்தப்பா வீட்டிற்காக தான் இவளை வாங்கினோம். அவருக்கு இவளை மிகவும் பிடித்து விட்டது இவளை பார்த்தவுடனே அவர் கூப்பிட்டது "ரதி" என்று தான். அப்பறம் என்ன "ரதி" என்றே நாமகரணம் சூட்டியாகிவிட்டது. நான் ஊருக்கு திரும்பி வந்த பிறகு அவளை பற்றிய நினைவு சுத்தமாக அழிந்துவிட்டது. சரியாக ஒரு வருடம் கழித்து அவளை பார்க்க சென்றேன். அவ்வப்பொழுது அம்மா அவளைப் பற்றிக் கூறிக் கொண்டே இருப்பாள் நன்றாக வளர்ந்துவிட்டாள், கொழுகொழுவென்று ஆகிவிட்டாள், தோள் உயரத்திற்கு காலை தூக்கி வைக்கிறாள். கிழே பிடித்து தள்ளி விடுகிறாள்.... எனக்கும் அவளை பார்க்க வேண்டுமென்ற ஆவல் அதிகமாகி விட்டது. வீட்டை நெருங்க நெருங்க எப்படி இருப்பாள் என்று நெஞ்சு படபடவென்று அடித்துக்கொள்கிறது. வீட்டிற்கு வெளியே வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தேன். குறைத்தபடியே ஓடி வந்த அந்த பெரிய உருவம், ஒரு நொடி நின்று பார்த்துவிட்டு தவ்வி என்னைக் கிழே தள்ளிவிட்டு முகத்தை நக்க, தடுமாறி எழுந்து நின்றேன், கால்கள் இரண்டையும் தோள்களில் தூக்கி வைத்து முகத்தை நக்கினாள். என்னை அங்குமிங்கும் நகரவிடாதபடி இறுக பிடித்துக்கொண்டாள். அவளை தடவிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தி, அவள் வளர்ச்சி கண்டு வியந்து பார்த்துக்கொண்டிருந்தேன். நான் எங்கு சென்றாலும் பின்னாடியே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தாள். சிறிது நேரம் ஆவலுடன் விளையாடி விட்டு நான் வீடிற்கு கிளம்ப வண்டியை ஸ்டார்ட் செய்தேன் "ஊஊஊ ஊஊஊ" இது அந்த அழுகை போல் இல்லவே இல்லை. இறங்கி மீண்டும் அருகே சென்று தடவிக் கொடுத்துவிட்டு கனத்த மனதுடன் திரும்பி விட்டேன். அப்புறம் அவளைப் பற்றிய நினைவு சில நாட்களில் மறைந்து போனது. போன வாரம் ஒரு நாள் இரவு பத்து மணிக்கு மேல் இருக்கும், என் தங்கை கால் பண்ணி இருந்தாள், அப்பொழுது எடுக்க முடியாத காரணத்தினால் சிறிது நேரம் சென்று நானே திரும்பவும் அவளுக்கு அழைத்தேன். அழுகை ஆறி போன குரலில் வருகிறது வார்த்தைகள்; "ரதி செத்து போய்டுச்சு டி" நெஞ்சு பதறி வெளியே எகிற தயாராய் இருக்க "ஏன் டி என்ன ஆச்சு திடீரென்று?" என் வினவினேன். வீட்டிற்குள் நுழைய இருந்த பாம்பை நுழைய விடாமல் இறுதி வரை போராடி உயிர் துறந்திருக்கிறாள்... அவள் முனகிக்கொண்டே இறந்திருக்கிறாள் "ஊஊஊ" என்று ... இந்த "ஊஊஊ" விற்கு என்ன அர்த்தம்??
உணவிட்ட கைகளுக்கு கடைசி வரை நன்றியுடன் இருப்பது இவர்களன்றி வேறு யார் ????
# RIP ரதி
உணவிட்ட கைகளுக்கு கடைசி வரை நன்றியுடன் இருப்பது இவர்களன்றி வேறு யார் ????
# RIP ரதி
No comments:
Post a Comment