Sunday, 29 January 2012

நினைவுகள் - 3


ரொம்ப நாள் யோசிக்காம நிம்மதியா இருந்த விஷயம் ஒன்னு திடீர்னு  அலாவுதீன் அற்புத விளக்கு பூதம் மாதிரி முன்னாடி வந்து ரொம்ப தடுமாற வச்சிடுச்சு.

ஆபீஸ் ல இருந்து வீட்டுக்கு கெளம்பின அப்பறம் ஆபீஸ்ல இருந்து வர தொலைபேசி அழைப்புகள் எப்போவுமே தொல்லைபேசி தான், வேண்டா வெறுப்பா எடுத்து பேசினேன், ஏதோ tracker பில் பண்ணனும் டீடைல்ஸ் வேணும்னு கேட்டாங்க (வருஷத்துக்கு ஒன்பத்து ரெண்டு tracker பில் பண்ணுவாங்களே இவங்க ).. ஏன்யா காலைல இருந்தே அங்கன தானே குந்திகினு இருந்தேன், எப்படி வீட்டுக்கு கெளம்பின அப்பறம் கால் பண்ணறிங்க...அட அத விடுங்க விஷயத்துக்கு வரேன் அவங்க கேட்ட விஷயம் தான் முக்கியம்.
இரண்டு கேள்விகள் (பதில் கடைசில சொல்றேன்)
1 . உங்க career Aspiration என்ன??
(நான் அப்படியே ஷாக் ஆய்டேன்)
2. Onsite போற பிளான் இருக்கா, அப்படி இருந்தா லாங் டெர்ம்ஆ ஷார்ட் டெர்ம்ஆ
(இந்த கேள்வி ஐ லைக்கோ லைக்)

உடனே சுதாரிச்சுக்கிட்டு முதல்ல இரண்டாவது கேள்விக்கு பதில் சொல்றேன்னு சொன்னேன், சரின்னு சொன்னாங்க. (உரையாடலையே  சொல்றேன் அதான் flow கரெக்டா வரும்)

நான் : " லாங் டெர்ம் பிளான்லாம் இல்ல, ஷார்ட் டெர்ம் பிளான் ஓகே"
தொல்லைபேசி: "ஷார்ட் டெர்ம்னா எப்படி எதிர்பாக்குறீங்க?
நான்: (மனசுக்குள் யோவ் ரெண்டு கேள்வி தானே கேக்க போறனு சொன்ன, இது என்ன மூணாவது கேள்வி)
ஒரு 1 வருஷம், இல்ல ரெண்டு வருஷம்னாலும் ஓகே
தொல்லைபேசி: ஏங்க அது தான் லாங் டெர்ம்ங்க
நான் : அவ்வவ் அப்படியா ?? ஹி ஹி .. அப்போ ஷார்ட் டெர்ம்னா என்னங்க??
தொல்லைபேசி: மூணு மாசம் இல்லனா ஆறு மாசம்
நான்: (மனசுக்குள் : அட கடவுளே இந்த கருமம் தெரியாம போச்சே, லாங்  டெர்ம்னு சொல்லி இருக்கனுமோ?? )
ஆ அப்படி.. ம்ம்ம் சரி அதையே போட்டுகோங்க..
தொல்லைபேசி: சரி சரி, முதல் கேள்விக்கு பதில் சொல்லுங்க.
நான்: முதல் கேள்வியா அது என்னங்க??
தொல்லைபேசி: அதாங்க career Aspiration
( என்ன கருமமோ !! ஸ்பெல்லிங் கூட தெரியல )
நான்: (மனசுக்குள்: மறுபடியும் இந்த கேள்விக்கு வந்துட்டாங்களே)
எனக்கு ஒரு ரெண்டு நிமிஷம் டைம் குடுங்க யோசிச்சு சொல்றேன்
தொல்லைபேசி: அதெல்லாம் முடியாதுங்க இப்போவே ப்பில் பண்ணனும் உடனே சொல்லுங்க
நான்:
சரி ஒரு 1 நிமிஷமவாது டைம் குடுங்க.
தொல்லைபேசி: சரி சரி நான் லைன்ல இருக்கேன் சொல்லுங்க
நான்: (என்ன வில்லத்தனம்). அதாவதுங்க நான் சொந்தமா...
தொல்லைபேசி: ஏங்க அதெல்லாம் இல்ல, organisation குள்ள சொல்லுங்க
நான்: அவ்வ்வ்வ்

சரி இனி தான் விஷயமே, எனக்கு சத்தியமா பதிலே தெரியல, mute  போட்டுட்டு பக்கத்துல இருந்த நண்பன்கிட்ட கிட்ட கேட்டேன்

நான் : நண்பா career Aspiration னா என்ன ? அப்படி ஒன்னு இருக்க இல்லையா? அது இருக்கறதுக்கான அறிகுறி என்ன?

பாவம் பயபக்கி என்னை போலவே இருக்கு... அவனுக்கும் தெரியல என்னென்னமோ உளறுறான்...

ஹ்ம்ம் அப்பறம் என்ன பண்றது நண்பன் உளறுனதையே நானும் உளறி வச்சேன்...

நினைவுகள் - 2

எங்க டீம் தல வீட்டு க்ரஹப்ரவேஷதுக்கு கிப்ட் வாங்கிட்டு பர்ஸ பார்த்தப்ப ஆனந்த அதிர்ச்சி.. :D :D என்றைக்கும் பத்து பைசா இல்லாத பர்ஸ்ல இருந்த பத்து ரூபாய், பத்துலட்ச மகழ்ச்சிய குடுத்துச்சு, பல நாள் ஆசை , என் மசால் பூரி ஆசை மனசை கிளரிவிட்டுடுச்சு. இருக்காதா பின்னே, ஆசையாய் மசால் பூரி கடையை நோக்கி சென்று, 10 பைசா பர்ஸ்ல இல்லாம திரும்பிய நாட்கள் உண்டு.. அதனால என்றும் மெதுவாக சோம்பி நடக்கும் கால்கள், பர பரவென ஓட துவங்கியது. ஆனால்... பூட்டிய கடை முகத்தில் அறைந்தது.. :'( :'(, அதுவரை பரபரத்த கால்கள் துவண்டு நடுங்கியது... கெஞ்சி அடம் பிடித்து பலூன் வாங்க காசு வாங்கி தெரு நோக்கி ஓடி வந்து, பலூன்காரன் தலை மறைந்த வீதியை கண்டு மனம் வெம்பி அழ தயாராகும் குழந்தையின் அழுகை தொண்டை குழியில் முட்டிக்கொண்டு நின்றது...
அந்த பத்து ரூபாயை செலவழித்தால் மட்டும் மனம் நிம்மதி அடையும் என புத்தி சொன்னது ( புத்தியும் மனசும் வேற வேறயானு கேட்டுடாதீங்க சத்தியமா எனக்கு பதில் தெரியாது). ஒரு வழியா முடிவு பண்ணி தெரு முனை பிள்ளையார் கோவில் கிட்ட இருந்த பெட்டி கடைல முறுக்கும் கடலை உருண்டையும் வாங்கி சாப்பிட்டேன் (முறுக்கு இன்னும் நாலணாவிற்கு விக்குதுங்க !!!). அப்பறம் என்ன ஹாப்பி எண்டிங் தான், ஜாலியா முறுக்கு சாப்ட்டுகிட்டே வீடு வந்து சேர்ந்தாச்சு...moral : ஆசைப்பட்டது கிடைக்கலனா, கிடைச்சத ஆசை பட்டு ஏத்துக்க வேண்டியது தான் :P :P

நினைவுகள் - 1

நேற்று இரவு அம்மாவை அழைத்து வர மாம்பலம் ரயில் நிலையத்திற்கு சென்றிருந்தேன்.ரயில் வர தாமதமானதால், அப்படியே ரெங்கநாதன் தெருவில் இறங்கி நடக்க தொடங்கினேன், இரவு ஒன்பதரை மணிக்கு கூட மிச்ச சொச்ச கூட்டம் கடைகளை மொய்த்து கொண்டிருந்தது. எதையும் வாங்கும் எண்ணமில்லை என்று சொல்லவதை விட வாங்க காசில்லை என்று சொல்லவே விரும்புகிறேன். அப்படியே காலாற நடந்தபோது ஒரு தாய் தன் 12 வயதிருக்கும் மகனை அதட்டி கொண்டே பின்னே சென்றார்,
"டேய் வாட்ச் தானே வாடா வாங்கித்தரேன் "
"வேண்டாம் போ"
"அட வா தம்பி அதான் வாங்கி தரேன்னு சொல்றேன்ல"
"வேண்டாம்னு சொல்றேன்ல விடு, முதல்ல கேட்டப்ப வாங்கி தரல்லல அப்பறம் என்ன ? வேண்டாம் போ "
உரையாடல் காதுகளுக்கு எட்டாத தூரம் சென்றுவிட்டிருந்தது ... மனம் பின்னோக்கி நினைவலைகளுக்குள் சென்றது... இதே போல் என் அம்மா என் பின்னே பாசத்தோடு அதட்டிக்கொண்டு வந்தார்..

ஹ்ம்ம்ம் அதெல்லாம் ஒரு காலம்.. இப்பொழுதெல்லாம் எதையும் கேட்டு வாங்க வேண்டிய அவசியம் இருபதில்லை.. விரும்பியதை விரும்பாததயோ வாங்கி கொள்கிறேன், அத்யாவசியமா என்று கூட நினப்பதில்லை... புதிதாக எதாவது வாங்கினால், கூட அம்மாவே இது புதியதா என்று கேட்கும் வரை சொல்லவதுமில்லை, அல்லது சொல்ல கூட நேரமில்லாத நிலை.

வரட்டு பிடிவாதத்துடன் முன்னே முறுக்கி கொண்டு சென்ற என்னை அதட்டி கூப்பிட்ட அம்மாவின் குரலை ரயில் ஓசை கலைத்துச் சென்றது

அவளுடைய அவன்

அவளுடைய அவன்

அவளுக்கு அவன் மீது காதல்…அது என்றுமே தீராத காதல். ஒவ்வொரு நாளும் அவனை புதிது புதிதாக பார்க்கிறாள், பார்க்கும் நொடி எல்லாம் அவள்ளுள் புதிதாகவே காதல் பூக்கிறது.

அவனின் சிவந்த நிறத்திலும் ரோஜா கன்னங்களிலும் அவள் மயங்கி இருக்கிறாள். அவனின் சிவந்த தேகம் கண்டு அவள் கண்கள் நாணிச் சிவக்கும்.

அவன் இல்லையென்றால் அவளுக்கு ஒரு வேலையும் ஓடாது என்பதை அவள் அறிவாள், அதனாலேயே அவன் எப்போதும் இல்லாது போகாமல் பார்த்துக்கொள்கிறாள்.

அவனில்லாது போன பல நாட்கள் அவனுக்காக காத்திருக்கிறாள்.

அவன் அவளை அழ வைத்திருக்கிறான், சில நாட்கள் குறைவாக; சில நாட்கள் மிகுதியாக. அவளின் கண்ணீரும் அவனை நேசிக்கின்றது. அவன் மேல் அளவுகடந்து கொண்டுள்ள காதல் அவள் கண்ணீரையும் சில நொடிகளில் கரைத்து விடுகின்றது…

அவனை யாரவது தவறாக கூறினால், தாங்கமாட்டாமல் அவ்விடம் விட்டு நகர்ந்து விடுவாள்.

அவனிடம் அவள் நிறைய பாடங்களை கற்றிருக்கிறாள்; அதில், “தேட தேட ஒன்றும் இல்லாமல் முடியும் வாழ்கை பாடம்” அவளுக்கு மிகவும் பிடித்தமானது.

அவனை தவிர்க்க அவளுக்கு மனமே வராது..மற்றவர்கள் தவிர்த்தாலே அவள் தவிப்பாள்.

அவன் -

எத்தனை காயங்கள் அவளால் பெற்றாலும், என்றும் அவள் கையில் ஆசையாய் அடங்குவான்…. அவளின் “வெங்காயம்”

பி.கு Specially dedicated to அம்மா. அவங்களுக்கு வெங்காயம் ரொம்ப பிடிக்கும். :P

Sunday, 15 January 2012

அப்பா……


உன் மீது கால் போட்டு
நான் தூங்காத நாளில்லை ..
உன் கால்கள் மீது
என் கால்கள் வைத்து
நான் நடை போடாத நாளில்லை ..
உன் கைலியில் அமர்ந்து
நான் ஊஞ்சலாடாத நாளில்லை..
ஒவ்வொரு முறை நீ
ஊரில் இருந்து திரும்பும்போதும்
நான் ஓடி வந்து அணைக்காத நாளில்லை ..
முடி வெட்ட விருப்பம் இல்லாவிட்டாலும்
நீ அழைத்து நான் வராத நாளில்லை ..
எத்தனை முறை பென்சிலை தொலைத்தாலும்
எதுவும் கூறாமல்
நீ வாங்கி தராத நாளில்லை …
அம்மா ஊருக்கு செல்லும்போதெல்லாம்
அக்கறையாய்
நீ கவனிக்காத நாளில்லை …
இப்பொழுதெல்லாம் உன் நினைவு நாளில்
மட்டுமே இவை நினைவுக்கு வருகின்றது அப்பா….

Monday, 9 January 2012

மிச்சம்



பாதி படித்து வைத்த
புத்தகத்தின்
மிச்ச வார்த்தைகள்
கை கோர்த்து விளையாடுகின்றன
என் கனவின் தாழ்வாரத்தில்.......

வரி வடிவமின்றி
எழுத்துக்களாகவும்
ஓசைகளாகவும்
ரீங்காரமிடுகின்றன
என் கனவின் காதுகளில்...

சில கோபத்துடனும்
சில கெஞ்சலுடனும்
முழுதாக ஆக்கிரமிக்கின்றன
என் கனவின் தூரத்தை....

நான் திடுக்கிட்டு
விழிக்கும் வரை
அவை
மெதுவாக புசிக்கின்றன
என் கனவின் ஆழத்தை.....