Monday, 10 February 2014

மோக்லி


மோக்லி அசைவில்லாமல் ஒரே இடத்தில் இருந்தது. பல நேரம் இப்படி ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கிறது. மீன் தொட்டியை விரல்களால் சுண்டினேன். "அது தூங்கிட்டு இருக்கும் விடேன்டீ கொஞ்ச நேரம் அதை" பப்பி சலித்துக்கொண்டாள். ஒரு நாளுக்கு நூறு முறை சாப்பாடு போட்டியா அவனுக்கு என்று கேட்டுக்கொள்கிறேன். அடிக்கடி மீன் தொட்டியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டு மீன் தொட்டியை தடவிக் கொடுக்கிறேன். நடு இரவில் பாத்ரூம் போகஎழுந்தால் கூட மீன் தொட்டியை சென்று ஒரு முறை பார்த்துக்கொள்கிறேன். மோக்லியின் தொட்டியும், அதன் அடியில் பரப்பியிருக்கும் நீலமும் பச்சையும் கலந்த கற்களின் பிரதிபலிப்பும் இந்த இரவை அவ்வளவு அழகாகிக் கொண்டிருக்கிறது.

ஏன் எனக்கு ஃபைட்டர் ஃபிஷ் பிடித்தது ? குறிப்பாக நீல நிற ஃபைட்டர் ஃபிஷ் ? காரணம் தெரியவில்லை. ஆனால் நீல நிறம் காரணம் இல்லை. நீல நிறத்தில் வேற எந்த மீன் எனக்கு கிடைத்திருந்தாலும் அதை இவ்வளவு ரசித்திருக்க மாட்டேன். காரணம் தெரியாமல் பிடித்திருக்கும் சில விஷயங்கள் சில நேரம் சுவாரசியமாகவே இருக்கிறது. இதற்கு முன் மீன் வளர்ப்பு அனுபவம் எதுவும் எனக்கு இல்லை. வீட்டில் பெரிய மீன் தொட்டி ஒன்று இருக்கிறது. அதற்குள் ஆரஞ்சு, வெள்ளை நிற ஏஞ்சல் மீன்களும், சில்வர் மோளிகளும், கண்கள் வெளியே துருத்திக் கொண்டிருக்கும் கருப்பு நிற டெலஸ்கோஃப்களும் கொச கொசவென்று அங்கும் திரிந்து கொண்டிருக்கும். அவை மீது எப்பொழுதும் பெரியதொரு ஈர்ப்பு எனக்கு இருந்ததே இல்லை. தொட்டியில் இருக்கும் நீரை இரண்டு நாட்களுக்குள் கலங்கடித்துக்கொண்டும் சண்டையிட்டுக்கொண்டும், ரொம்ப சாதாரணமாக நீந்திக்கொண்டு அலையும் அந்த மீன்கள் என்னை எப்பொழுதும் கவர்ந்ததில்லை.

தொட்டியில் இருக்கும் தண்ணீரை அடிக்கடி மாற்றுவதான் பெரிய வேலை. முதலில் ஒரு பக்கெட் நிறைய தண்ணீரை பிடித்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு மீனாக வலையில் பிடித்து பக்கெட்டினுள் விட வேண்டும். சில மீன்கள் பிடித்துக் கொண்டிருக்கும்பொழுதே வெளியே எகிறி குதித்துவிடும். அகலமான பாத்திரத்தில் விடவில்லை என்றாலும் பெரும்பாலும் சண்டையிட்டுக்கொண்டு எம்ப ஆரம்பித்துவிடும். பின்னர் அவ்வளவு பெரிய தொட்டியிலிருந்து நீரை முழுவதுமாக வெளியேற்ற வேண்டும். டியூப் போட்டு வெளியேற்றவும் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். நீரை மொண்டு வேறெதிலாவது ஊற்றிவிட்டு பின்னர் அடியில் பரப்பியிருக்கும் கற்களையும் கழுவ வேண்டும். கொஞ்சமும் அசைக்க முடியாத கனமான தொட்டி. அந்த இடத்தில் நின்று கொண்டே அதை சுத்தம் செய்ய வேண்டும். அம்மாவிற்கு மீன் தொட்டியை கழுவுவதில் எந்த ஒரு உதவியும் நான் செய்ததே இல்லை. கழுவி முடிக்கும் வரை வாயைக் கூட திறக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருப்பேன். தண்ணீர் கொண்டு வந்து தருவது மட்டும் தான் என் வேலை. அவ்வளவு அசுத்தமான நீரை பார்ப்பதற்கே அருவெறுப்பாக இருக்கும் சில நேரம். அம்மா பொறுமையாக கழுவி முடித்துவிட்டு மீன்களை எடுத்து அந்த தெளிவான நீரில் விடும்பொழுது மட்டும் மீன் தொட்டி அழகாக தெரியும்.

ஒரு நாள் கூட நான் மீன்களுக்கு உணவிட்டதில்லை. சிறுசிறு கலர் உருண்டைகள் அடைத்திருக்கும் பாக்கெட்டை பார்த்திருக்கிறேன் அவ்வளவு தான். இரவில் தான் அந்த உணவை அம்மா போடுவாள். அம்மா மீன் தொட்டியின் அருகே சும்மா போய் நின்றால் கூட அம்மா நிற்கும் இடத்தில் எல்லா மீன்களும் வந்து குழுமிவிடும். இவ்வளவு அடையாளம் இந்த மீன்களுக்கு தெரியுமா என்று ஆச்சரியமாக இருக்கும். மீன்கள் எப்பொழுதாவது நம்மை பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்திருக்கிறேன். சிறு வாயை அசைத்துக்கொண்டு எதோ சொல்வது போலவே இருக்கும். நடனமாடும் ஆரஞ்சு நிற மீனை சென்ற முறை ஊருக்கு சென்றபொழுது கவனித்தேன். மொபைலில் பாட்டு போட்டு கேட்டுக்கொண்டிருந்தேன். முதலில் நான் மீன் தொட்டியை கவனிக்கவே இல்லை. ஒரே ஒரு ஆரஞ்சு நிற மீன் மட்டும் மேலும் கீழுமாக அசைந்து கொண்டிருந்தது கவனத்தை மெதுவாக ஈர்த்தது. கொஞ்சம் நெருங்கி உட்கார்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். கன்னம் கொழுத்த அந்த மீனின் நடனம் சந்தோஷம் மிகுந்திருக்கும் ஒரு பெண்ணின் மெல்லிய நடனம் போல அவ்வளவு அழகாக இருந்தது. முட்டாள்தனமாக பாட்டை நிறுத்திவிட்டு அதை கவனித்தேன். ஒரு நொடி அமைதியாக அசந்து என்னை வெறித்து பார்த்துவிட்டு வேறு பக்கம் சென்றுவிட்டது. குற்றவுணர்ச்சி அந்த இரவை நிறைத்திருந்தது. ஊருக்கு சென்றிருந்தபொழுது தான் ஒரு ஃபைட்டர் ஃபிஷ் வாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அடிக்கடி நெட்டில் நீல நிற ஃபைட்டர் ஃபிஷ் படங்களை தேடி தேடி பார்த்துக்கொண்டிருந்தேன்.

என்னுடைய தோழி ஒருத்தி இரண்டு மீன்கள் வளர்த்துக் கொண்டிருந்தாள். உடல்நிலை சரியில்லாமல் ஒரு மீன் இறந்தபொழுது இன்னொரு மீனை நினைத்து தான் எனக்கு ரொம்பவும் கவலையாக இருந்தது. இரண்டும் அந்த குட்டி தொட்டியில் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு சந்தோஷமாக சுற்றி வந்ததை நானே பார்த்திருக்கிறேன். இன்னொரு மீனும் சில நாட்களில் இறந்துவிட்டதை தோழி அந்த முறை அழாமல் வெறுமையான குரலில் சொன்னாள். அதன் பிறகு அவள் மீன் வாங்கவேயில்லை.

இப்பொழுதெல்லாம் மோக்லியை பற்றிய கவலை என்னை பெரிதும் ஆக்ரமித்திருக்கிறது. முதல் நாள் மோக்லியை தனியாக விட்டுவிட்டு அலுவலகம் சென்ற நாளில் பகல் முழுதும் அவன் என்ன பண்ணிக்கொண்டிருப்பான், தனியாக இருப்பானா என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். தங்கை கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்து தொலைபேசியில் என்னை அழைத்தபொழுது ஹலோ கூட சொல்லாமல் மோக்லி என்ன பண்ணிக்கிட்டு இருக்கான் என்று கேட்டேன். "யடீ அதுக்கு ஒரு வேளை சாப்பாடு போட்டா போதும்டீ , நிறைய தின்னா மண்டை வீங்கி செத்து போய்டும்" என்று அடிக்கடி அவள் சொன்னாலும் போதுமா அவனுக்கு என்று உணவு குறித்த பயம் எப்பொழுதும் இருக்கிறது. ஊருக்கு சென்றுவிட்டால் யார் மோக்லியை பார்த்துக்கொள்வார்கள். இட மாற்றங்களை எப்படி ஏற்றுக்கொள்ளும் போன்ற குழப்பங்கள் நிரம்பி வழிந்தாலும் தற்காலிகமாக நானே அந்த நினைவுகளை ஒதுக்கிக்கொள்கிறேன்.

நேற்றே தண்ணீர் மாற்ற வேண்டும் என்று நினைத்திருந்து மறந்துவிட்டேன். இன்று பப்பி தான் நினைவுபடுத்தினாள். தண்ணீரை மாற்ற வேண்டும் என்று நினைத்தபொழுதே திக்கென்றிருந்து. ரொம்பவும் சின்ன தொட்டி தான். மோக்லி ரொம்பவும் குட்டி. தண்ணீரை மாற்ற வேண்டுமானால் வேறொரு பாத்திரத்தில் முதலில் அவனை விட வேண்டும். எப்படி அவனை எடுத்து போடுவது என்று பப்பியிடம் கேட்டவுடன், "டீ வடிகட்டுறதுல எடுத்து பக்கெட்ல போட்டுடலாம்டீ" ரொம்ப சாதரணமாக சொன்னாள். எனக்கு தான் பயமாகவே இருந்தது. தொட்டியை எடுத்து கீழே வைத்துவிட்டு முழித்துக்கொண்டிருந்ததை பார்த்துவிட்டு அவளே வடிக்கட்டியை எடுத்து வந்து ஒரு நொடியில் பிடித்து இன்னொரு பாத்திரத்தில் போடும்வரை பதற்றத்தில் என் முழி பிதுங்கிக்கொண்டிருந்தது. "ஸ்ஸ் பார்த்து பார்த்துடீ" , திரும்பி என்னை முறைத்துப் பார்த்தாள். நான் அமைதியாக மீன் தொட்டியை கழுவ எடுத்து சென்றுவிட்டேன். தண்ணீர் மாற்றியவுடன் அவளே மறுபடியும் எடுத்துப்போட்டாள், இம்முறை உடல் குலுக்கி மெதுவாக அது துடித்ததை என்னால் பார்க்கவே முடியவில்லை.

மோக்லி தனியாக தான் இருக்கிறான். முதல் நாளிலிருந்து. ஒரு மீனுக்கு எந்த மாதிரியான ஆளுமை உணர்வு இருக்க முடியும் ? எதனால் இப்படி காலம் முழுவதும் தொட்டியில் இவன் தனியாக நீந்திக்கொண்டிருக்க வேண்டும் ? பூனைகளை போல மீன் சுதந்திரமாக இருக்க விரும்புமா ? தெரியவில்லை. சில நேரம் அமைதியாக ஒரே இடத்தில் இருக்கிறான், சில நேரம் சுற்றி சுற்றி வருகிறான். இப்பொழுதெல்லாம் என் விரல்களின் அடையாளம் அவனுக்கு தெரிந்திருக்கிறது. தொட்டியில் சுண்டும்பொழுது அருகில் வருகிறான். மோக்லி மோக்லி என்று நூறு முறையாவது அவனை அழைத்துக்கொண்டே இருக்கிறேன். தனிமையை இவ்வளவு அழகாக எதிலும் நான் பார்த்திருக்கவில்லை.

கொஞ்சம் நேரம் அவனையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு மெதுவாக தொட்டியை அதன் இடத்தில் வைத்தேன். மறுபடியும் தெளிந்த நீர், அதே பச்சை நீல கற்கள், தனியாக மோக்லி; மெதுவாக நீந்தினான்.

No comments:

Post a Comment