சந்தோஷமாக தற்கொலை செய்து கொள்ள முடியுமா ? ஆசிர்வாதங்களும், ப்ரிய முத்தங்களும், அணைப்புகளும் நிறைந்த ஒரு நாளில் தற்கொலை செய்து கொள்ள முடியுமா ? நேசிப்பவர்களே! இதோ சந்தோஷமான இந்நாளில் தண்டவாளங்களை தேடிச் செல்கிறேன். தற்கொலை, மிகவும் சந்தோஷமான தற்கொலை. மிச்சமிருக்கும் எல்லா நாளுக்குமான சிரிப்புகளை இன்றே முழுமையாக செலவழித்துவிட்டேன். இருந்தும் இது சந்தோஷமான தற்கொலை என்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறேன்.
மூன்று மாதங்களாக பேசாமலிருந்த தோழி இன்று ஏன் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். எல்லாரும் வெறுத்து ஒதுக்கிய ஒரு இரவில் என்மீதொரு ஏளனப் புன்னகையை நானே வீசிக்கொண்டு முகம் தெரியாத ஒருவனுக்கு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அனுப்பிய குறுஞ்செய்தி நினைவிற்கு வந்தது. அலைபேசியில் இருந்த எண்கள் ஒவ்வொன்றாக அழித்துக் கொண்டே வந்தேன். ப்ரியமானவர்களின் எண்களை அழிக்கும் போதுமட்டும் கைகளில் இருந்த நடுக்கத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
வாங்கிய எல்லாவற்றையும் திருப்பிக் கொடுத்திட வேண்டும். நிர்பந்தம் இல்லை. ஆனால் சுமையோடு இந்த தற்கொலையை நிகழ்த்திட இயலாது. வெறுப்புகளை சுமந்து தான் செல்ல வேண்டும். வேறு வழியில்லை. "உன்னை எனக்கு பிடிக்கவேயில்ல டீ" சிரித்துக்கொண்டே சொன்ன இந்த வார்த்தைகளையும் சுமந்து தான் செல்ல வேண்டும். வெறுப்பு சுமையாக இல்லை. ப்ரியங்கள் தான் சுமையாக இருக்கிறது.
மிச்சமிருந்த சோற்றை வழித்தெடுத்து பூனைகளுக்கு போட்டுவிட்டு அந்த பச்சை நிறக் கண்களை கொண்ட பூனையை மட்டும் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அந்த கண்களை நேருக்கு நேர் என்னால் சந்திக்க இயலவில்லை. முடியாது. குற்ற உணர்வோடு இந்த தற்கொலை நிகழ்ந்திட கூடாது. இது சந்தோஷமான நாள்; சந்தோஷமான தற்கொலை. பைகளை தடவிப் பார்த்துக்கொண்டேன், தாரணி பாதி கடித்துவிட்டு திரும்ப கொடுத்துவிட்ட சாக்லேட் இன்னும் உறுத்திக்கொண்டே இருந்தது. இந்த உணர்வு பெரும் பாரம். தலையை உதறி முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டேன்.
செருப்பை மாட்டிக்கொண்டு கதவை பூட்டினேன். தற்கொலைக்கு எதற்கு செருப்பு ? எதற்கு பூட்டு ? சாவியை விட்டெறிந்தேன், எதிலோ 'நங்'கென்று பட்டுத்தெறித்த ஒலியைக் கடந்து சாலையில் இறங்கினேன். எதிர்ப்பக்கம் செல்வதற்காக சாலையில் ஓடினேன். எதற்கு ஓட வேண்டும் ? நிற்க தோன்றவில்லை. சாலையை கடக்க முடியாமல் நீண்டு கொண்டே செல்வது போல் இருந்தது. இந்த தற்கொலைக்கு தண்டவாளங்கள் மட்டுமே வேண்டும். எல்லா அன்பும் சிதறி அடிக்க வேண்டும்.
முன்பொரு தற்கொலை முயற்சிக்கு முன் யானியின் இசையை பரிசாக அளித்தவனின் கைகளை இந்த மாலையில் அழுந்த பிடித்திருந்தேன். கைகளை முகர்ந்து பார்த்துக்கொண்டேன். வேர்வையின் மணம் இன்னும் மிச்சமிருக்கிறது. இந்த தற்கொலைக்கு பின்னும் இருக்கக்கூடும். வேறு யாரும் முகர்ந்திடக்கூடுமா ? தண்டவாளத்திலிருந்து தலையை எடுத்துவிட்டு கைகளை இறுக்க மூடிக்கொள்கிறேன். காலம்காலமாக தொடர்ந்து வரும் மணம் இது, இப்பொழுது உடலெங்கும் பரவியிருக்கிறது. இதைவிட்டு எப்பொழுதும் நான் பிரிந்திருக்க முடியாது. இது எப்பொழுதும் என்னுள் கலந்திருக்கிறது. பையில் இருந்த காகிதக்கற்றைகளை இருளில் விசிறடித்துவிட்டு கைகளை முகர்ந்துகொண்டே தண்டவாளத்தை தாண்டி நடந்தேன்.
No comments:
Post a Comment