Thursday, 11 September 2014

தாரணி குட்டி - 3

காரிடரை கடந்து வந்தும் கூட இந்த பூனைகளை காணவில்லை. காரிடரில் நுழையும்பொழுதே எங்கிருந்தோ இரண்டும் ஓடி வரும். வீட்டருகில் சென்று கதவை திறந்தபொழுது குட்டி பூனை மட்டும் கத்திக்கொண்டே பின்னால் வந்து நின்றது. உள்ளே சென்று பிரட் பாக்கெட்டில் இருந்து நாலு பிரட்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். சாப்பாடு போடும் இடத்தை தெரிந்து வைத்துக் கொண்டு சரியாக அந்த இடத்திற்கு எனக்கு முன்னால் ஓடி சென்று நின்று கொண்டது. பிரட்டை பிய்த்து போட்டுவிட்டு பெரிய பூனைக்காக காத்திருந்தேன். குட்டிபூனை பிரட் துண்டுகளை அவசர அவசரமாக விழுங்கியது. இந்த குட்டி பூனை கொஞ்சம் வித்தியாசமாக சாப்பிடும்பொழுது "மௌ மௌ" என்று ஒலியெழுப்பி சாப்பிடுவது வேடிக்கையாக இருக்கும். பூனைகளுக்கு பெயர் ஏதுமில்லை; குட்டி பூனை, பெரிய பூனை என்று நிறுத்திக்கொண்டேன். 

பிரட்டை இன்னும் சிறு துண்டுகளாக பிய்த்து போட்டுவிட்டு எழுந்தபொழுது அந்த பக்கம் தாரணி வந்து நின்றாள். நான் உடனே எழுந்து சுவற்றுக்கு பின் ஒளிந்து கொண்டேன். கொஞ்சம் நேரம் விட்டு எட்டிப் பார்த்தேன். அங்கேயே நின்று கொண்டு நான் நின்ற திசையை பார்த்துக்கொண்டிருந்தாள். எட்டிக்கூட பார்க்கவில்லை. நான் மறுபடி தலையை உள்ளே இழுத்துக்கொண்டு கொஞ்சம் நேரம் கழித்து எட்டிப்பார்த்தேன். அவள் அசைய கூட இல்லை அப்படியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். அவளும் என்னைப் போலவே ஒளிந்து கொண்டு விளையாட்டு காட்டுவாள் என்றெண்ணி ஏமாந்தேன். இப்பொழுது முகத்தில் கொஞ்சம் சிரிப்பு வந்திருந்தது. கொஞ்ச நேரத்திற்கு இப்படி எட்டி பார்ப்பதும் ஒளிந்துகொள்வதுமாக தொடர்ந்தது இந்த விளையாட்டு.

என்ன நினைத்தாளோ திடீரென்று சுவற்றை சுற்றிக் கொண்டு என்னை பிடிப்பது போல வந்தாள். நானும் ஓடத் துவங்கினேன். ஒரே திசையில் வராமல் எதிர்திசையில் ஓடிவருவதும் பின்னர் ஒரே திசையில் ஓடுவதுமாக இருந்தோம். அவள் என்னை பிடிக்க வேண்டும் என்பதற்காகவே மெதுவாக ஓடினேன். குழந்தைகளிடம் தோற்றுப் போவதை விட ஆகச் சிறந்த சந்தோசம் என்ன இருக்க முடியும் ? நான் மெதுவாக ஓடியும் அவளால் பிடிக்க முடியவில்லை. நானே எதிர் திசையில் அவளுக்கு பின்புறமாக ஓடி சென்று "பூஊஊ" என்று கத்தியபடி அவளை தூக்கிச் சுற்றினேன். ஈஈஈஈ என்று சிரித்தவள் போதும் போதும் இறக்கிவிடு என்று கைகளில் இருந்து அவளே விடுவித்துக்கொண்டாள்.

"வா இன்னொரு முறை கண்ணாமூச்சி விளையாடலாம்"  என்றாள்

நான் "இது கண்ணாமூச்சிய்யா ?" என்று உதட்டை சுழித்துக் காட்டினேன்

"இல்லயா ?" என்று வாயினுள் மூன்று விரல்களை விட்டபடி இன்னொரு கையால் பாவடையை பிடித்தபடி ஒரு சுற்று சுற்றினாள்

"மூஞ்சயே மூடிக்கல இது கண்ணாமூச்சி இல்ல "

நான் எதுவுமே பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டு நின்றேன். அவளே தொடர்ந்தாள்.

"ஒளிஞ்சு பிடிச்சு விளையாட தெரியல உனக்கு. மறைஞ்சு நின்னுக்கோ நான் சொல்லி தரேன்"

எந்த மாதிரியான கண்ணாமூச்சி விளையாட்டை இவள் சொல்லித்தரப் போகிறாள் என்று யோசித்தபடி "சரி வா " என்றேன்.

"இப்போலாம் சொல்லி தர முடியாது. நாளைக்கு சொல்லி தரேன். இப்போ நான் சாப்பிட போறேன்" என்று திரும்பி நடக்க ஆரம்பித்தாள்

"அய்ய் என்ன சாப்பிட போற" 

"டோஓச"

"ம்ம்ச் நான் இட்லி தான் சாப்பிடப் போறேன். நீ எனக்கு தோசை ஊத்தி தரியா" 

"டோசன்னா அம்மா தான் ஊத்தி தரனும்"

"...."

"சரி சரி நீ உள்ள போ" காரிடரை தாண்டி வெளிப்பக்கமாக ஓடி மறைந்தாள்

Wednesday, 10 September 2014

வெல்லிங்டன் – பிரிதலும் பிரிதல் நிமித்தமும் – வாசிப்பனுபவம்

மாற்றம் என்பது ஒரு நொடிப் பொழுதில் நேர்ந்துவிடுவது அல்ல. அதற்கான அடித்தளங்கள் வெகு முன்னரே போடப்பட்டுவிடுகின்றன.காடுகளை அழித்து நகரங்கள் உருவாகும் பொழுது ஏற்படும் இடப்பெயர்ச்சிகளில் பெருமளவு பாதிக்கப்படுவது காலங்காலமாக அந்த இடங்களில் வாழ்ந்து வரும் பழங்குடியினரும், காடுகளில் வாழும் மிருகங்களும் தான். நுகர்வுமயமாக்குதல் சமவெளி பகுதிகளை கடந்து மேடேறி சென்ற காலத்திலேயே மலைப்பகுதிகளின் அழிவு ஆரம்பமாகிவிட்டது, இது அங்கு வாழும் மக்களையும் மிருங்களையும் சேர்த்தே குறிக்கின்றது. இடமும் மக்களும் ஒன்றோடொன்று தொடர்புடைய(து)வர்கள், ஒன்றினால் மற்றொன்று அறியப்படுவது. ஆனால் இது வெகு சமீபத்தில் நடந்தது அல்ல. இதற்கான விதையை பிரிட்டிஷ்காரர்கள் வித்திடப்பட்டது. அரசியல்வாதிகளாலும், அதிகார வர்க்க முதலாளிகளாலும் வளர்க்கப்பட்டது.

பெருநகரங்களில் இவ்வாறாக ஏற்படும் மாற்றங்களை வெகு சுலபத்தில் கடந்து சென்றுவிட முடியும். முக்கியமாக நாடோடித்தனமான வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு இது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது. ஆனால் ஊரோடான உறவு வேரோடு பிடுங்கப்படும் வலியும் வேதனையும் ஆதியந்தமாக அந்த ஊரோடு உறவு கொண்டவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

கவிஞரும் மொழிப்பெயர்ப்பாளருமான சுகுமாரன் , எழுதிய முதல் நாவல் இது. ஆரம்ப பக்கங்களின் வாசிப்பு இது அவரின் முதல் நாவல் என்று தோன்றாதபடிக்கு வாசிப்பதற்கு லகுவான மொழியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முதல் எழுபது பக்கங்களில் வெல்லிங்டன் உருவான கதை பற்றி விரிவாக அதே சமயம் அழுத்தமாக விவரித்திருக்கிறார். ஊட்டியை கண்டுபிடிக்க ஜான் சல்லீவன் புறப்படுவதில் இருந்து தொடங்கும் கதை எழுபதாவது பக்கத்தில் ஊட்டியில் தேயிலை பயிர் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்து ஜான் சல்லீவனின் மகனிடமிருந்து வரும் செய்தியுடன் முடிகிறது (கொசுறாக ஜான் சல்லீவன் இறந்த வருடத்துடன் முடிக்கிறார்).

இந்த பக்கங்களுக்கிடையே தான் ஊட்டிக்கும் குன்னூருக்கும் இடைப்பட்ட ஜதளா எனும் மலை கிராமம் (ஹட்டி) வெல்லிங்டன் எனும் ராணுவத் தளவாடமாக உருமாறுவது சித்தரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து படுகர் இன மக்கள் இந்த மலை கிராமத்தில் வந்து குடியேறிய கதை பற்றியெல்லாம் விவரிக்க ஆசிரியர் சிரத்தை மேற்கொள்ளவில்லை.
“தமிழ்நாட்டின் நீலகிரி மலைப்பகுதிகளில் குடியேறிய ஒரே காரணத்தால் மட்டுமே தங்களையும் ”தோடர்கள்” போன்று (படுகர்களை) “ பட்டியலிடப்பட்டபழங்குடியினர்” (Scheduled Tribes) என்ற சலுகை கேட்டு தமிழ்நாடு மாநில அரசிடம் தொடர்ந்து போராடி வருகின்றனர்.”  என்று ஆவணக் குறிப்புகள் கூறுகின்றன.

இம்மக்கள் 200 வருடங்களுக்கு முன்பு தான் நீலகிரி மலைப்பகுதியில் வந்து குடியேறியதாக ஆவணங்கள் கூறுகின்றன. ஜான் சல்லீவன் ஊட்டியை கண்டறிந்தது 1800களின் ஆரம்பம். இராணுவத் தளவாடம் ஆரம்பிக்கபட்டது கிட்டத்தட்ட 1800களின் மத்தியில். ஆக, குத்துமதிப்பாக மக்களுக்கும் மலைக்குமான நூறு வருட பிணைப்பு இவ்வளவு அழுத்தமாக வேரூன்றி இருப்பது ஆச்சரியமானது.

இந்த முதல் எழுபது பக்கங்களிலேயே வெல்லிங்டனின் கதை முடிந்துவிட்டது. மீதி இருநூற்றி எண்பது பக்கங்களும் நாவலுக்காக இழுக்கப்பட்டவை. அதன் பின் வெல்லிங்டனுக்கும் கதைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை, வெல்லிங்டன் திருநெல்வேலியை போல கும்பகோணத்தை போல ஒரு வசிப்பிடம் அவ்வளவே. மீதி கதையை சமதளத்தில் நடக்கும் கதையாக விவரித்தாலும் இதே வித அனுபவத்தினை தான் கொடுக்கும் என்பது திண்ணம்.

பாபு என்கிற சிறுவனின் பார்வையில் கதை விரிகிறது. ஜகதளா ஹட்டியில் இருந்த, இடம்பெயர்ந்த மனிதர்களுக்கும் பாபுவுக்கும் இருந்த உறவை விவரிப்பதே மீதி கதை. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அத்தனை காலமாக உடன் வசித்து வந்த ஒவ்வொருவரும் மெதுவாக விலகி செல்லும்போது (இடம்பெயர்ந்து செல்கின்றனர்) பாபுவிற்கு இருக்கும் மனநிலையை நாவலாசிரியர் விளக்க முற்படுகிறார் ! பல இடங்களில் கதை தொய்வு கொண்டு நகர மறுக்கின்றது. உறவுகளுக்கிடையே இருக்கும் சிக்கல்களை தான் பெரும்பாலான கதைகள் பேசி வருகின்றன. அப்படியிருக்கையில் வெல்லிங்டன் என்ற வலுவான அடித்தளத்தை கையில் எடுத்துக்கொண்டு கோரைப் புற்களைக் கொண்டு வீடு கட்டியிருக்கிறார் சுகுமாரன். வெல்லிங்டன் (ஜகதளா) பகுதியில் வாழ்ந்து வந்த பழங்குடி மக்களின் இடம்பெயர்ச்சிக்கான வலுவான அரசியல் பின்னணிகளை வெளிக்கொணர ஆசிரியர் முற்படவில்லை. ஒரு சராசரி கதையை மட்டுமே ஆசிரியர் கூறியிருக்கிறார். அதனால் கதை எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர்களின் வாழ்வாதாரங்களை மருந்துக்கு கூட எங்கேயும் விவரிக்கவில்லை, ஏனெனில் அதெல்லாம் முதல் நூறு பக்கங்களிலேயே சுருக்கமாக முடிந்துவிடுகிறது.

பாபுவுக்கும் கௌரிக்குமான உறவோ அல்லது பாபுக்கும் சகுந்தலாவிற்குமான உறவோ மேலோட்டமாகவே கூறியிருப்பது நாடகத்தன்மையை தான் அதிகரிக்கிறதே தவிர அதில் எந்தவொரு ஒட்டுதலும் இல்லை. இடையிடையே சர்க்கஸை பற்றிய இடைச்செருகல்கள் பெரும் அயர்ச்சியை கொடுக்கிறது. இந்நாவல் ஊர்வரலாறாக இல்லாமல் தன்வரலாறாகவே இருக்கிறது.
ஒரு நேர்காணலில் சுகுமாரன் இவ்வாறாக கூறியிருக்கிறார் ,
“பாபுவும் அவன் நண்பர்களும் புழங்கும் உலகத்தை சல்லிவன் உருவாக்கிய ஊரின் உருவாக்கக் கதையுடன் ஒப்பிட்டு பார்க்க முடியுமானால் நாவலின் இன்னொரு பரிமாணம் புரிபடலாம்”

சல்லீவன் ஒரு இயற்கை ஆர்வலர், சல்லீவனின் வரலாறு கண்டெடுத்த நீலகிரியை எந்தவித்திலும் பாபு ஆராய்ந்தாகவே தெரியவில்லை. பாபுவும் நண்பர்களும் விளையாடுகிறார்கள், பள்ளிக்கு செல்கிறார்கள், ஒரு படுகர் திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள், பட்டம் விடுகிறார்கள், திண்பண்டம் வாங்கி உண்ணுகிறார்கள், அக்கம்பக்கத்தில் நடக்கும் சண்டைகளை கவனிக்கிறார்கள், உதவிகளை செய்து கொள்கிறார்கள். அவ்வளவே ! இதை வேறு பரிணாமத்தில் எந்தவிதத்திலும் பார்க்க இயலவில்லை.

நாவலாசிர்களுக்கு தனக்கான வாசகர்களை தேர்ந்தெடுக்க எல்லாவிதமான உரிமையும் இருக்கிறது. எல்லா வாசகர்களுக்குமான கதை என்று எதுவே இல்லை. ஒரு சாராரை திருப்திபடுத்தும் கதை மற்றொரு சாராருக்கு அலுப்பூட்டுவதாக இருக்கின்றது. அதனால் இன்ன மாதிரி தான் கதையிருக்க வேண்டும் என்று வாசகர் எதிர்ப்பார்ப்பதை தவறென்றும் சொல்ல முடியாத சரியென்றும் சொல்ல முடியாத இரண்டும்கெட்டான் நிலை தான் வாய்த்திருக்கிறது. ஆனால் ஏதோவொரு விதத்தில் வாசகனை குறைந்தபட்சமாகவேனும் திருப்திபடுத்துவதாக இருக்க வேண்டும். அந்த அளவுகோலில் வெல்லிங்டனின் பின்னணி அரசியல் பற்றியும், பெருவாரியான மலை கிராமங்கள் அழிப்பும் பற்றியும், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்டு அவர்கள் இடம்பெயர்ந்ததை பற்றியும் சிறிதும் விமர்சிக்காமல் சுய வரலாற்றை போல் நாவல் விரிந்திருப்பதினால் என்னளவில் இந்நாவல் திருப்தியளிக்கவில்லை.

பதிப்பகம் – காலச்சுவடு
விலை – ரூ. 275

Tuesday, 9 September 2014

நண்பரின் மூன்று கடிதங்களுக்கான பதில்

தோழருக்கு,

வணக்கம். தங்களுடைய மூன்று இமெயில்களும் அடுத்தடுத்து கிடைக்கப் பெற்றும் என்னால் உடனடியாக பதில் எழுத முடியாமைக்கு வருந்துகிறேன். முன்பே சொன்னது போல படிப்பத்தை தவிர மற்றதில் ஈடுபாடு குறைந்து வருகிறது. சொல்லப் போனால் சோம்பேறித்தனம் மிகுதியாகிவிட்டது.

தங்களுடைய பதில்கள் கிடைக்கப்பெற்றதில் மகிழ்ச்சி. தங்களுக்கான பதிலை நான் ரொம்பவும் பொறுமையாக எழுதிக்கொண்டிருக்கின்றேன். உங்களுடைய பதில் கடிதம் ஒரு நாள் தாமதித்தே வந்ததில் மிகுந்த பதற்றமடைந்திருந்தேன், என் மீது உங்களுக்கு எந்தவித கோபமும் இருக்காது என்பதை அறிந்தும் கூட.

நான் – லீனியர் பாணியில் நீங்கள் அனுப்பியிருந்த கடிதம் எனக்கு பிடித்திருந்தது. நானும் அதே நான் – லீனியர் பாணியில் பதிலளிக்க முயன்று பார்க்கிறேன்.

வியாழக்கிழமை விரதம் குறித்து உங்களுக்கு அனுப்பியிருந்தேனா என்றே மறந்துவிட்டேன். மாதமொரு முறையாவது அதைக் கடைபிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

பதட்டம் , குழப்பம் , கோபம்…இதை இயல்பான சுழற்சி என்று கூறியிருக்கிறீர்கள். கோபம் வருவதை இயல்பாக எடுத்துக் கொள்ளலாம் நண்பா, ஆனால் எனக்கு சலிப்பு தான் மிஞ்சுகிறது என்று கூறினேன். இயல்புக்கு மாறி இவ்வாறு நான் இருப்பது தான் எனக்கு கவலை அளிக்கிறது.

அந்த கவிதை நிகழ்வில் நீங்கள் என்னைப் பார்த்தும் பேசாது சென்றது வருத்தத்தை அளிக்கிறது. நான் அன்று கோபமாக இருக்கவில்லை. நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். அன்றைய இரவு நான் மழையில் முழுவதுமாக நனைந்துவிட்டிருந்தேன். குளிரினால் உடல் விறைப்புற்று சுரணையற்றதாகியிருந்தது. அதனால் என் முகம் அப்படி தோற்றமளித்திருக்கலாம்.

திருவண்ணாமலைக்கு சென்றிருந்ததை குறிப்பிட்டிருந்தீர்கள். மிகுந்த மகிழ்ச்சி. திருவண்ணாமலைக்கு சென்று வருடங்களாகின்றது. பவுர்ணமி கிரிவலத்திற்கும் ஒவ்வொரு புத்தாண்டிற்கும் குடும்பத்தோடு திருவண்ணாமலை கோவிலுக்கு செல்வது வழக்கம். எனக்கு கிரிவலம் போவதை காட்டிலும் மலை ஏறுவது தான் பிடித்தமானது. கந்தராசிரமத்திற்கும் விருப்பாக்‌ஷியார் குகைக்கும் தவறாமல் சென்று விடுவோம். மூலிகை வாசம் காற்றில் நிறைந்திருக்கும் இந்த மலை பெரும் ரகசியங்களை விழுங்கி நிசப்தமாய் காலங்காலமாய் நின்றிருக்கிறது. இப்பொழுதெல்லாம் குடும்பத்தோடு வெளியே, முக்கியமாக கோவிலுக்கு செல்வதே அரிதாகிவிட்டது. பழமையான ஆலயங்களை தேடி தேடி சென்ற காலமெல்லாம் முடிந்தது என்றே அச்சப்படுகிறேன் நண்பா.

சித்தர்கள் மீது எனக்கு பெருநம்பிக்கை உண்டு. ஒருமுறையேனும் அந்த மலைவனத்தில் அவர்களை காணக் கூடும் என்று நம்பி வருகிறேன். கல்லறை தினத்தை பற்றி மேலும் சில தகவல்களை கூற இயலுமா. எனக்கு கல்லறை என்றால் பயம் அதிகம்.

முகநூலில் இருந்து எடுத்துக்கொண்ட விடுப்பு ஆரோக்கியமானது என்றா சொல்கிறீர்கள். சிரிப்பு தான் வருகிறது. இந்த விடுப்பு என்னை இன்னமும் தனிமை படுத்திவிட்டது. வெளியுலக தொடர்பற்றவள் போல் இருந்துவருகிறேன். இதைப் பற்றி அங்கு மீண்டும் வரும்பொழுது விரிவாக எழுதுகிறேன்.

தனித்திருத்தலை பற்றி நீங்கள் கூறியவை ஏற்புடையதாக இல்லை. நம்மை சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும் ஒரு நொடி வந்து போகும் தனிமை உணர்வை பற்றி தான் நான் கூறினேன். மற்றபடி செல்போன் இல்லாமலோ முகநூல் இல்லாமலோ இருக்கும் தனித்திருத்தல் அல்ல. இது நம்முள்ளே எப்பொழுதும் வியாபித்திருக்கும் தனிமையை பற்றியது. சிலருக்கு அது தெரியவதற்கு காலம் எடுத்துக்கொள்ளலாம். நம்மை விட இந்த உலகத்தில் யார் நமக்கு சிறந்த துணை ?

செயல்படும் எல்லாவற்றிலும் இருந்தேகூட மனதளவிலான விலகல் நல்லது என்றா சொல்கிறீர்கள். அய்யா நான் சாமியார் ஆக விரும்பவில்லை. ஏதோ ஒன்றில் எப்பொழுதும் பற்றுடனே தான் இருந்து வருகிறேன். பற்றற்ற வாழ்க்கைக்கான பக்குவத்தை அடைய இன்னும் பலகாலம் இருக்கிறது.
ஜே.கே புத்தங்களை படிக்க ஆரம்பிக்க வேண்டும். இதுவரை படித்ததில்லை. ஆனால் நீங்கள் பலமுறை ஜே.கேவை பற்றி என்னிடம் கூறியிருக்கிறீர்கள். மேலும் நான் எழுதுவது எல்லாவற்றையுமே என்னுடைய வலைதளத்தில் பதிந்து தான் வருகிறேன். Including இதற்கு முந்தய இமெயிலும் கூட. முன்பு சொன்னது போல கைக்கு கிடைக்கும் புத்தகமெல்லாம் படித்து வருகிறேன். பெரும்பாலும் மொழிப்பெயர்ப்புகள். தற்போதைய இலக்கியத்தில் தமிழில் சிறப்பாக மொழிப்பெயர்ப்பதாக நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள். ஜி.குப்புசாமியை கூறினால், ‘என் பெயர் சிவப்பு’ உங்களுக்கு இப்படிப்பட்ட வாசிப்பனுபவத்தை தான் தந்ததா என்று நான் உங்களை கிண்டல் செய்ய நேரிடலாம்.

சமீபத்தில் பெயரே இல்லாத ஒரு பழைமையான கோயிலுக்கு சென்றதாக கூறியிருந்தீர்கள். உடன் படமும் இணைத்திருந்தீர்கள். திருச்சிராப்பள்ளியில் நான் சுற்றாத இடம் இல்லை. ஆனால் இந்த கோவிலை நான் அறிந்திராதது. உங்களுடைய பதிலில் இது எந்த கோவில் என்று குறிப்பிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

இறுதியாக,

மீண்டும்,

மிர்த்தாதின் புத்தகம் பற்றி, நீங்கள் அனுப்பிய சுட்டியில் உங்கள் வாசிப்பனுபவத்தை படிததேன். வாசிப்பில் உங்கள் அளவிற்கு என்னால் ஈடு கொடுக்க முடியாது என்றாலும் என்னளவில் இந்த புத்தகம் வாழ்நாள் முழுவதற்குமான புத்தகம் என்பதை மறுக்க முடியாதது. உண்மையில் இது ஒரு முறை வாசிப்போடு நின்றுவிடக் கூடிய புத்தகமன்று; வாசித்துக் கொண்டே இருக்க வேண்டிய புத்தகம் தான்.

நட்புடன்,
கார்கி

Thursday, 4 September 2014

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு கடிதம்

நண்பா,

(இப்படி விளிப்பது சரியாக இருக்கிறதா என்று தெரியவில்லை, மன்னிக்கவும்).

நலமாக இருக்கிறீர்களா ? நான் இங்கு நலம். பேஸ்புக்கில் இல்லாததால் கொஞ்ச காலம் வெளியுலகம் காணாத பிள்ளை போல் இருக்கிறேன். ஆனால் படிப்பதற்கும் எழுதுவதற்கும் நிறைய நேரம் கிடைத்திருக்கிறது. எழுதுவதை விட நிறைய படிக்க பிடித்திருக்கிறது. அவ்வப்பொழுது என்னுடைய வாசிப்பனுபவங்களை Goodreadsசிலும், அலுவலக வலைபக்கத்திலும் பதிந்து வருகிறேன்.

திருமண வேலைகளும் அதை ஒட்டிய குழப்பங்களும், திருமணத்திற்கேயுரிய பிரச்சனைகளையும் கடந்த சில நாட்களாக சூழ்ந்து இருக்கின்றது. எல்லாவற்றையும் சரி செய்துவிடக்கூடிய திராணி இருக்கிறதா என்று அடிக்கடி சந்தேகம் ஏற்படுகின்றது

படிப்பது ஒன்று தான் இத்தகைய வாதைகளிலிலிருந்து இப்பொழுதைக்கு மீட்சி தருவதாக இருக்கின்றது. புத்தகங்கள் நிரம்பியிருக்கும் இந்த வீட்டில் இன்னது தான் என்று இல்லாமல் தோன்றிய புத்தகங்களை எடுத்து வாசித்துக் கொண்டிருக்கின்றேன் (யாரும் பரிந்துரைக்கும் புத்தகங்களை தேடி படிக்கும் பழக்கம் இன்னும் வாய்க்கவில்லை).

புது வீட்டில் குடியேறி இரண்டு மாதங்கள் முடிவடைந்துவிட்டது. இங்கு பூனைகள் ஏதுமில்லை என்று போன வாரம் வரை நினைத்திருந்தேன். ஆனால் சென்ற வாரம், கொடியில் காய்ந்து கொண்டிருந்து துணிகளை எடுப்பதற்காக சென்றிருந்தபொழுது கொழுத்த மஞ்சள் நிற பூனையை பார்த்தேன். நான் அதை பயப்படுத்த வேண்டாம் என்று நினைத்தபொழுதும் அது என்னைக் கண்டதும் சுவர்மேல் ஏறி பாய்ந்தோடி விட்டது.

இன்னொரு முக்கியமான விசயம் இங்கு பக்கத்து வீட்டில் ஒரு கிணறிருக்கிறது. சென்னையில் கிணறுகளை நான் பார்த்ததில்லை. அது வெகு ஆச்சிரியமாக இருந்தது. மார்வாடிகளும் பிராமணர்களும் நிறைந்த பழய வீடுகளை கொண்ட தெரு இது. இந்த இடம் கொஞ்சம் ஆசுவாசம் அளிப்பதாக இருக்கிறது.

வாசலில் ஒரு தாய் நாயும் அதனுடைய இரண்டு குட்டிகளும் காலை வேளைகளில் சோம்பலாக படுத்துக் கிடக்கும். பெரும்பாலும் மாலை நேரங்களில் அவற்றை பார்க்க முடிவதில்லை. எப்பொழுதாவது மீதமிருக்கும் பாலும் சோறும் போடுவேன். எங்களுக்கிடையேயான நட்பு இந்த அளவிலேயே முடிந்துவிடுகின்றது.

இப்பொழுது வியாழக்கிழமை விரதங்கள் அடிக்கடி இருப்பதில்லை.
பெரும்பாலும் பசி எடுத்துவிடுகின்றது அல்லது மனநிலை சரியில்லாமல் இருக்கிறது.

என்னளவில் பேச்சு குறைந்திருக்கிறது, வெளியே செல்வது குறைந்திருக்கிறது. படிப்பதும் எழுதுவதுமாக நாட்களை கடத்திக் கொண்டிருக்கின்றேன். அடுத்து என்ன என்கிற கேள்வி வரும்பொழுது தான் பெருங்குழப்பம் ஆட்கொள்கிறது. ஒரு குடும்பத்தை நிர்வாகிக்க தேவையான திறமை என்னிடம் குறைவாக உள்ளதாகவே உணர்கிறேன். அதனால் தான் திருமணம் என்பது என்னுடைய மனநிலைக்கு ஏற்று தான் செய்கிறேனா என்று அடிக்கடி குழம்பி போய்விடுகிறேன்.

நிறைய படிப்பதும் சில சமயம் வாதையாக இருக்கிறது, அதாவது உடல் வாதை. ஒரு கண்ணில் தூரப் பார்வை வந்தது போலிருக்கிறது. பேருந்திலும் படித்துக்கொண்டே செல்வதினால் இருக்கலாம். படிப்பதையும் விட்டால் என்னால் தூங்க தான் முடிகின்றது. வேறிதிலும் மனம் ஈடுபதுவதில்லை.

இப்பொழுதெல்லாம் கோபம் வந்தால் அடக்கிக் கொள்ள பழகிவிட்டேன். பெரும்பாலும் கோபம் வருவதில்லை, அதற்கு பதில் சலிப்பு தான் மிஞ்சுகிறது. இந்த கடித்ததிலேயே உங்களுக்கு தெரிந்திருக்கும் எந்த அளவிற்கு சலித்து புலம்பியிருக்கிறேன் என்று. சரி அது போகட்டும் விடுங்கள்.

உங்களுக்கு இன்னமும் பக்கத்து வீட்டிலிருந்து உணவு வருகின்றதா? நெடுநாட்களாக உங்களிடம் நான் கேட்க நினைத்து தவற விட்ட கேள்வியை எந்த வித தயக்கமும் இல்லாமல் கேட்கலாம் என்று தான் நம்புகிறேன். இந்த தனிமை நீங்களாக விரும்பி ஏற்படுத்திக் கொண்டதுதானா? தனிமை சில சமயம் கொடுமையானதாகவும் பிறிதொரு சமயம் விரும்பி ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் விசித்திரமாக இருப்பதும் விளங்க முடியாததாக இருக்கிறது இல்லையா?

தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டியதாக நான் நினைக்கும் ஒரே ஒரு விசயம், நீங்கள் Responsibilities எடுத்துக்கொள்ள வேண்டும். அது உங்களிடம் குறைவாக இருக்கிறது என்றே எண்ணுகிறேன். பிறருடைய வாழ்க்கைகான responsibilities பற்றி இங்கு நான் கூறவில்லை. At least உங்கள் வாழ்க்கைக்கானதை நீங்கள் கொஞ்சமாவது பொருட்படுத்த வேண்டும் என்றே விரும்புகிறேன்.

இன்னும் நிறைய பேச வேண்டும் என்று நினைக்கிறேன், உங்களிடமிருந்து பதில் வரும்பட்சத்தில் இன்னும் பேசலாம்.

இரண்டு கேள்விகள்,

’மிர்தாத்தின் புத்தகம்’ வாசித்திருக்கிறீர்களா ?

ஏதோவொரு பழமையான சிவன் கோவிலின் கருவறை வாசத்தை சமீபத்தில் சுமந்தீர்களா ?

பேரன்புடன்,
கார்கி

Monday, 1 September 2014

அமேசான் காடுகளில் வளரும் அரிய வகை மூலிகை

முன்னெச்சரிக்கை: சற்றே நீண்ட குறுங்கதை.  அலுப்பூட்டும் விதமாக அமைந்திருந்தால் அதற்கு காரணம் மதிய உணவு வேளை.
குஞ்சாயிக்கு எதுவுமே நறுக்கென்று இருக்க வேண்டும். அதாவது சின்னதாக. எல்லாமுமேவா என்று கேட்டால் அது எனக்கு தெரியாது. அதனால் தான் ஒவ்வொரு மாதமும் நகரத்தில் இருக்கிற பெரிய சலூனிற்கு சென்று தோள்பட்டையை தொடுமளவு முடிவெட்டிக் கொள்ளுவாள்.

(எனக்கு மட்டும் தெரிந்த ரகசியத்தை உங்களுக்கு சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொள்கிறேன்)

ஊரெல்லாம் தேடி இவன் தான் நமக்கு சரியான ஜோடி என்று மிஸ்டர் பெருமாளுடன் திருமண ஒப்பந்தம் செய்து கொண்டாள்; மிஸ்டர் பெருமாளின் பெற்றோர்களிடமும் தான். பெருமாளுக்கு குஞ்சாயியின் முடி காற்றில் அலைபாய்ந்து முகத்தை கூச செய்யாமல் இருந்தால் சரி என்பதால் குஞ்சாயியின் முடியை பற்றி கவலையேதுமில்லாமல் இருந்தது.

வெட்டியான ஒரு வார இறுதியில் ஆட்டுக்கால் சூப் குடிப்பதற்கென்றே மிஸ்டர் பெருமாளின் வீட்டுக்கு சென்ற குஞ்சாயியின் முடியை பார்த்ததுமே பெருமாளின் அம்மா முகம் சுளித்தாள் ’இதென்ன முடியை குட்டையா வெட்டிக்கிட்டு”

பெருமாள் தான் சமாதானப்படுத்தினான் ‘வெயில் காலமில்லையா தல கசகசப்பு தாங்கல… அதெல்லாம் கல்யாணதுக்குள்ள வளத்திடலாம்’

பெருமாளின் அம்மா ஊருக்கு வரும்பொழுதெல்லாம் ‘மண்டய பாரு.. மண்டைய பாரு..’ என்று இடித்துக் காட்டிக்கொண்டே இருந்தாள். அதுவுமில்லாமல் குஞ்சாயியின் மேல் வீட்டில் குடியிருந்த பல் டாக்டருக்கு குஞ்சாயியை விட கொஞ்சம் முடி ஜாஸ்தியாக இருந்தது பிரச்சனையாகிவிட்டது. மாதா மாதம் மேல்வீட்டிற்கு மல்லிக்கைப்பூ பந்து போக ஆரம்பித்தது.

குஞ்சாயிக்கு பெரும் மண்டைக் குடைச்சலாகிவிட்டது. அலுவலக நண்பர்களிடமும் பேஸ்புக்கிலும், முடி வெட்டிக்கொள்ள போகும் சலூனிலும் கூட முடி வளர்க்கும் டிப்ஸ் கேட்டு கலர் கலராக கண்டிசனரும் , ஷாம்பூவும் மாற்றி மாற்றி தேய்க்க ஆரம்பித்தாள். ஒரே மாதத்தில், தலையில் கையை உள்ளே விட்டு இழுத்தால் கையோடு ஒரு கொத்து முடி வரும்படி ஆகியிருந்தது குஞ்சாயி மண்டை.

ஆக கடைசியாக இது தான் வழி என்ற முடிவுக்கு வந்தவள்அமேசான் காடுகளில் வளரும் அரிய வகை மூலிகையை தேடி சென்றாள்.

இரண்டே மாதத்தில் முட்டுக்கு கீழே பின்னல் தொங்கியது. தலையில் இருந்து அடித்த ஆட்டுப் புழுக்கை நாற்றத்தை மறைக்க விதவிதமான ஃப்ளேவரில் ஹேர் ஸ்ப்ரே வாங்கி அடுக்கி வைத்தாள். கல்யாணத்திற்காக வாங்கிய ஆயிரம் ரூபாய் சவுரி முடி வீணாய் போனதே என்று குஞ்சாயி அம்மா அலுத்துக் கொண்டாள்.

சீரும் சிறப்புமுமாக கல்யாணம் முடிந்தது. இரண்டாவது வாரத்தில் தோளுக்கும் தொடாமல் முடியை வெட்டி விட்டு வந்தாள் குஞ்சாயி.

முடிந்தது.

பி.கு. அந்த ரகசியத்தைப் பற்றி நீங்கள் அதிகம் அலட்டிக் கொள்ள தேவையில்லை.

தாரணி குட்டி - 2

வீட்டிற்கு வந்து கதவை திறக்கும் முன் தாரிணி கதவை திறக்கவிடாமல் கையை பிடித்துக்கொண்டு சிரித்தாள். நானும் சிரித்தபடி விரலை கோர்த்துக்கொண்டேன்.
கண் சிமிட்டாமல் என்னை பார்த்து "நீ ஏன் ஷால் போடல ? " என்றாள் (மூன்றரை வயது குழந்தையிடம் ஷால் போட வேண்டும் என்று யார் சொல்லி கொடுத்திருப்பார்கள் !)
"இல்ல நான் மறந்து வச்சிட்டு போய்ட்டேன்" என்று துணிகள் காய்ந்து கொண்டிருந்த கொடியை சுட்டிக் காட்டிவிட்டு கதவை திறக்க முற்பட்டேன். 

"எங்க இன்னொரு அக்கா ?" என்று மறுபடியும் கையை பிடித்துக்கொண்டாள்.

"அவ ஊருக்கு போய்ட்டா " ஒற்றைக் கையில் கதவை திறக்க முயற்சி செய்தேன்.

"தனியாவா இருக்க ? " தலையாட்டலை பதிலாக எடுத்துக்கொண்டு தொடர்ந்தாள் , "பயமாயில்ல உனக்கு ? பேய் வந்து பிடிச்சிக்காதா ? "

"சாமி இருக்கு பேய் வந்து பிடிச்சிக்காது" என்று பூட்டை விலக்கி தாழை திறந்தேன்.

"அப்போ சாமி வந்து பிடிச்சிக்காதா ?" என் பதிலுக்கு காத்திராமல் கதவை பட்டென்று திறந்து உள்ளே நுழைந்தாள்.

நான் சிரித்துகொண்டே "சாமி நல்லது தான் பண்ணும் , பிடிச்சிக்காது " என்றேன்.

"சாமி எங்க இருக்கு? நீ காமி. உன்னை பிடிச்சிக்க வேண்டாம்ன்னு நான் சொல்லிட்டு போறேன்"

"........."

சாமிப்படங்கள் அடுக்கி வைத்திருந்த செல்ஃப் அருகே போனவள் இரண்டு வினாடி அங்கே நின்று பார்த்துவிட்டு என்னருகே மீண்டும் வந்தாள். "நாளைக்காச்சும் பைஃவ் ஸ்டார் வாங்கி கொடு நீ மறந்துட்ட.. " 
தலையசைத்தேன்,

"சரி கதவை பூட்டிக்கோ... பை"

ஆமென்!

சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிற
இயேசு
இதோ பிறப்பெடுக்கிறார்

இந்த நாய்கள் இன்னும் 
ஊளையிட்டுக்கொண்டே
இருக்கின்றன 

இறுக்கி போர்த்திய போர்வையின் விளிம்பில் சாத்தானை பிடித்துக் கொள்கிறேன் 

இதோ
சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிற
இயேசு
பிறப்பெடுக்கிறார்