தோழருக்கு,
வணக்கம். தங்களுடைய மூன்று இமெயில்களும் அடுத்தடுத்து கிடைக்கப் பெற்றும் என்னால் உடனடியாக பதில் எழுத முடியாமைக்கு வருந்துகிறேன். முன்பே சொன்னது போல படிப்பத்தை தவிர மற்றதில் ஈடுபாடு குறைந்து வருகிறது. சொல்லப் போனால் சோம்பேறித்தனம் மிகுதியாகிவிட்டது.
தங்களுடைய பதில்கள் கிடைக்கப்பெற்றதில் மகிழ்ச்சி. தங்களுக்கான பதிலை நான் ரொம்பவும் பொறுமையாக எழுதிக்கொண்டிருக்கின்றேன். உங்களுடைய பதில் கடிதம் ஒரு நாள் தாமதித்தே வந்ததில் மிகுந்த பதற்றமடைந்திருந்தேன், என் மீது உங்களுக்கு எந்தவித கோபமும் இருக்காது என்பதை அறிந்தும் கூட.
நான் – லீனியர் பாணியில் நீங்கள் அனுப்பியிருந்த கடிதம் எனக்கு பிடித்திருந்தது. நானும் அதே நான் – லீனியர் பாணியில் பதிலளிக்க முயன்று பார்க்கிறேன்.
வியாழக்கிழமை விரதம் குறித்து உங்களுக்கு அனுப்பியிருந்தேனா என்றே மறந்துவிட்டேன். மாதமொரு முறையாவது அதைக் கடைபிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
பதட்டம் , குழப்பம் , கோபம்…இதை இயல்பான சுழற்சி என்று கூறியிருக்கிறீர்கள். கோபம் வருவதை இயல்பாக எடுத்துக் கொள்ளலாம் நண்பா, ஆனால் எனக்கு சலிப்பு தான் மிஞ்சுகிறது என்று கூறினேன். இயல்புக்கு மாறி இவ்வாறு நான் இருப்பது தான் எனக்கு கவலை அளிக்கிறது.
அந்த கவிதை நிகழ்வில் நீங்கள் என்னைப் பார்த்தும் பேசாது சென்றது வருத்தத்தை அளிக்கிறது. நான் அன்று கோபமாக இருக்கவில்லை. நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். அன்றைய இரவு நான் மழையில் முழுவதுமாக நனைந்துவிட்டிருந்தேன். குளிரினால் உடல் விறைப்புற்று சுரணையற்றதாகியிருந்தது. அதனால் என் முகம் அப்படி தோற்றமளித்திருக்கலாம்.
திருவண்ணாமலைக்கு சென்றிருந்ததை குறிப்பிட்டிருந்தீர்கள். மிகுந்த மகிழ்ச்சி. திருவண்ணாமலைக்கு சென்று வருடங்களாகின்றது. பவுர்ணமி கிரிவலத்திற்கும் ஒவ்வொரு புத்தாண்டிற்கும் குடும்பத்தோடு திருவண்ணாமலை கோவிலுக்கு செல்வது வழக்கம். எனக்கு கிரிவலம் போவதை காட்டிலும் மலை ஏறுவது தான் பிடித்தமானது. கந்தராசிரமத்திற்கும் விருப்பாக்ஷியார் குகைக்கும் தவறாமல் சென்று விடுவோம். மூலிகை வாசம் காற்றில் நிறைந்திருக்கும் இந்த மலை பெரும் ரகசியங்களை விழுங்கி நிசப்தமாய் காலங்காலமாய் நின்றிருக்கிறது. இப்பொழுதெல்லாம் குடும்பத்தோடு வெளியே, முக்கியமாக கோவிலுக்கு செல்வதே அரிதாகிவிட்டது. பழமையான ஆலயங்களை தேடி தேடி சென்ற காலமெல்லாம் முடிந்தது என்றே அச்சப்படுகிறேன் நண்பா.
சித்தர்கள் மீது எனக்கு பெருநம்பிக்கை உண்டு. ஒருமுறையேனும் அந்த மலைவனத்தில் அவர்களை காணக் கூடும் என்று நம்பி வருகிறேன். கல்லறை தினத்தை பற்றி மேலும் சில தகவல்களை கூற இயலுமா. எனக்கு கல்லறை என்றால் பயம் அதிகம்.
முகநூலில் இருந்து எடுத்துக்கொண்ட விடுப்பு ஆரோக்கியமானது என்றா சொல்கிறீர்கள். சிரிப்பு தான் வருகிறது. இந்த விடுப்பு என்னை இன்னமும் தனிமை படுத்திவிட்டது. வெளியுலக தொடர்பற்றவள் போல் இருந்துவருகிறேன். இதைப் பற்றி அங்கு மீண்டும் வரும்பொழுது விரிவாக எழுதுகிறேன்.
தனித்திருத்தலை பற்றி நீங்கள் கூறியவை ஏற்புடையதாக இல்லை. நம்மை சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும் ஒரு நொடி வந்து போகும் தனிமை உணர்வை பற்றி தான் நான் கூறினேன். மற்றபடி செல்போன் இல்லாமலோ முகநூல் இல்லாமலோ இருக்கும் தனித்திருத்தல் அல்ல. இது நம்முள்ளே எப்பொழுதும் வியாபித்திருக்கும் தனிமையை பற்றியது. சிலருக்கு அது தெரியவதற்கு காலம் எடுத்துக்கொள்ளலாம். நம்மை விட இந்த உலகத்தில் யார் நமக்கு சிறந்த துணை ?
செயல்படும் எல்லாவற்றிலும் இருந்தேகூட மனதளவிலான விலகல் நல்லது என்றா சொல்கிறீர்கள். அய்யா நான் சாமியார் ஆக விரும்பவில்லை. ஏதோ ஒன்றில் எப்பொழுதும் பற்றுடனே தான் இருந்து வருகிறேன். பற்றற்ற வாழ்க்கைக்கான பக்குவத்தை அடைய இன்னும் பலகாலம் இருக்கிறது.
ஜே.கே புத்தங்களை படிக்க ஆரம்பிக்க வேண்டும். இதுவரை படித்ததில்லை. ஆனால் நீங்கள் பலமுறை ஜே.கேவை பற்றி என்னிடம் கூறியிருக்கிறீர்கள். மேலும் நான் எழுதுவது எல்லாவற்றையுமே என்னுடைய வலைதளத்தில் பதிந்து தான் வருகிறேன். Including இதற்கு முந்தய இமெயிலும் கூட. முன்பு சொன்னது போல கைக்கு கிடைக்கும் புத்தகமெல்லாம் படித்து வருகிறேன். பெரும்பாலும் மொழிப்பெயர்ப்புகள். தற்போதைய இலக்கியத்தில் தமிழில் சிறப்பாக மொழிப்பெயர்ப்பதாக நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள். ஜி.குப்புசாமியை கூறினால், ‘என் பெயர் சிவப்பு’ உங்களுக்கு இப்படிப்பட்ட வாசிப்பனுபவத்தை தான் தந்ததா என்று நான் உங்களை கிண்டல் செய்ய நேரிடலாம்.
சமீபத்தில் பெயரே இல்லாத ஒரு பழைமையான கோயிலுக்கு சென்றதாக கூறியிருந்தீர்கள். உடன் படமும் இணைத்திருந்தீர்கள். திருச்சிராப்பள்ளியில் நான் சுற்றாத இடம் இல்லை. ஆனால் இந்த கோவிலை நான் அறிந்திராதது. உங்களுடைய பதிலில் இது எந்த கோவில் என்று குறிப்பிடுவீர்கள் என்று நம்புகிறேன்.
இறுதியாக,
மீண்டும்,
மிர்த்தாதின் புத்தகம் பற்றி, நீங்கள் அனுப்பிய சுட்டியில் உங்கள் வாசிப்பனுபவத்தை படிததேன். வாசிப்பில் உங்கள் அளவிற்கு என்னால் ஈடு கொடுக்க முடியாது என்றாலும் என்னளவில் இந்த புத்தகம் வாழ்நாள் முழுவதற்குமான புத்தகம் என்பதை மறுக்க முடியாதது. உண்மையில் இது ஒரு முறை வாசிப்போடு நின்றுவிடக் கூடிய புத்தகமன்று; வாசித்துக் கொண்டே இருக்க வேண்டிய புத்தகம் தான்.
நட்புடன்,
கார்கி
No comments:
Post a Comment