Sunday, 29 December 2013

தற்கொலைக் குறிப்புகள் - 2



காதலிப்பதை போல சுலபமாக (சுதந்திரமாக ? ) இல்லை காதலிக்கப்படுவது. காதலிக்கப்படுவது பெரும் வாதையாக இருக்கிறது.சில நேரங்களில் காதலிக்கப்படுவதை விட தற்கொலை சுலபமானதாக இருக்கிறது; எந்த கட்டுப்பாடுமின்றி 'சுதந்திரமான' தற்கொலை.

இந்த தற்கொலை குறிப்பை இருஇரு வரிகளில் மடக்கி ஒரு காதல் கவிதையைப் போல எழுதி பார்த்து சிரித்துக் கொள்கிறேன். ச்சை தற்கொலை செய்து கொள்ளப் போகிறவளுக்கு என்ன சிரிப்பு. ஒரு ஸ்வெட்டரை எடுத்து அணிந்து கொள்கிறேன், காதலிக்கப்படுவதை போன்ற கதகதப்பு. குளிர் இதைவிட இதமானதாக இருக்கிறது. ஒரு வெறியோடு ஸ்வெட்டரை அவிழ்த்தெறிகிறேன். இந்த இருளிலும் அது விழுந்த இடம் நன்றாக தெரிகின்றது.

காதலிக்கப்படுவதை என்னால் தூக்கி எறியமுடிவதேயில்லை. ஒரு சர்ப்பம் போல் அது என் மேல் ஊர்ந்து கொண்டிருக்கிறது, இதன் வழுவழுப்பு எனக்கு பிடிக்கவேயில்லை. ஏன் இத்தனை கருணை இதற்கு.
"ஆதி வனத்திலும் இந்த சர்ப்பம் இருந்தது...
சர்ப்பத்தின் தீண்டலில் நெளியும் இந்த ஆதியின் வனம் பெரியது". எப்பொழுதோ எழுதியது. மறுபடி சிரித்துக் கொள்கிறேன். காதலிக்கப்படுவதை பற்றி நினைக்குபொழுதெல்லாம் ஒரு தற்கொலை குறிப்பை எழுதி விடுகின்றேன்.

ச்சை இதென்ன காதல் கடிதம் போல, தற்கொலை குறிப்பை நிரப்ப முற்படும்பொழுது முதல் தற்கொலை குறிப்பு நினைவுக்கு வருகிறது. காதலிக்கப்படும் ஒரு மழை நாளில் அதை கிழித்தெறிவதற்காக வைத்திருக்கிறேன். இந்த முறை யானியும் இல்லை மழையும் இல்லை. சுதந்திரமாக தற்கொலை செய்து கொள்ளலாம்.. காதலிப்பதை போல.

ஒரு தேவதையாக இருப்பது எனக்கு பிடிக்கவேயில்லை. இந்த கணம் சாத்தானாக வேண்டும். தேவக்குமாரனால் காதலிக்கப்படும் ஒரு சாத்தான். ச்சை காறி உமிழ்ந்து , கொடிக் கயிற்றை சுருக்கிடுகிறேன்.

சில்லிடும் இந்த இரவில் தற்கொலையை மட்டும் போர்த்திக் கொள்ள போகிறேன்.

காதலிக்கப்படுவது பெரும் வாதை !

Friday, 15 November 2013

தற்கொலைக் குறிப்புகள் - 1

                இந்த இரவை தற்கொலைக்காக தேர்ந்தெடுக்கிறேன், துரோகங்களும் பொய்களும் சில உண்மைகளும் நிறைந்திருக்கும் எல்லா இரவை போன்றதுதான் இந்த இரவும். கற்பனைகளிலேயே சுருக்கிட்டும், மாடியில் இருந்து விழுந்தும், கை நரம்பை அறுத்துக்கொண்டும் அந்த தற்கொலைக்கான ஒத்திகைகளை பார்க்கிறேன். எத்தனை பேர் என்னைப் போல இந்த இரவில் தற்கொலை செய்வார்கள் அல்லது முயல்வார்கள் ? 

                எல்லாருடைய கிண்ணத்திலும் ஒரு துளி துரோகமாவது கலந்திருக்கும். பாத்திரங்கள் துலக்காமல் சின்கை அடைத்து கிடக்கிறது, எப்படியும் இவை நாளையும் துலக்கப்படாது. பிரிக்கப்படாமல் வைத்திருக்கும் புத்தகங்களை ஒரு முறை நுகர்ந்தாவது பார்க்க வேண்டும். மறக்காமல் வங்கி கணக்கிலிருக்கும் பணத்தை அம்மாவுக்கு அனுப்ப வேண்டும். 

                யாருக்காவது குறிப்பு எழுத வேண்டும் ? எல்லா துரோகங்களையும் எழுத முடியாது, அல்லது யாரும் காரணமில்லை என்றாவது எழுத வேண்டும். நெருங்கிய நண்பனுக்கும் மட்டும் குறுஞ்செய்தியில் ஒரு குட்பை அனுப்ப வேண்டும். மிக முக்கியமாக தற்கொலைக்கான அத்தனை காரணங்களும் மறைக்கப்பட வேண்டும்; துரோகங்கள் நிறைந்த அந்த டயரி குறிப்புகளும். என் துரோகங்களை சுமந்தபடி தங்கை அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறாள். நாளை இவள் தான் செய்தி சொல்லியாக வேண்டும், முத்தம் கொடுக்க தோன்றியது. 

                 கடைசியாக ஒரு முறை ஈரக்காற்று உடலை சிலிர்க்க மழையில் நனைந்திட வேண்டும். மொட்டை மாடிக் கதவை திறந்து வெளியே செல்கிறேன். மழையில் கரைந்துவிட முடியுமா... கீழறையில் இன்னமும் யான்னியின் இசை ஒலித்துக்கொண்டே இருக்கிறது. விளக்கை அணைத்துவிட்டு படுக்கிறேன். எனக்கான துரோகங்கள் நாளைக்கும் மிச்சமிருக்கலாம்.

ஆஹச் சிறந்த கவிதை



செல்களை நிரப்பும் கடைசி சொட்டு துரோகமும், 
இருத்தலை உணர்த்தும் கூடுகளற்ற பறவைகளும், 
பிசுபிசுப்புகள் அடர்ந்திருக்கும் பின்னிரவுகளும், 
நிறமிழந்த பூக்களுக்கு தடவப்படும் வண்ணத்துப்பூச்சியின் சாயல்களும். 
வானில் பூக்கும் நட்சத்திரங்களும் (நம்புங்கள் வானில் தான் நட்சத்திரங்கள் பூக்கின்றன), 
வலசை போதல்களும், 
முகம் தெரியாதவர்களின் இறுதி ஊர்வலங்களும், 
ஒளியை விழுங்கும் இருளும், 
உப்பு தோய்த்த கண்களும், 
சிறகொடித்து பிச்சையெடுக்கும் பௌத்த கடவுளும்,
பூஞ்சை பூத்த காலி தேநீர் கோப்பைகளும், 
பூக்கோவும், வான்காவும், 
தேவக்குமாரன்களும் சாத்தான்களும், 
முக்கியமாக அந்த ஒற்றைக் கண் பூனையும்
பொறுங்கள், ஆஹச் சிறந்த கவிதை ஒன்று தயாராகிக் கொண்டிருக்கிறது !

Monday, 28 October 2013

இரவு மீள்தல்





இந்த இரவில் 
இன்னும் அன்பிற்கினிய இருவர் பிரியாமல் இருக்க வேண்டும் 
இன்னும் கூடடையாத பறவை திரும்பிட வேண்டும் 
இன்னமொரு தெரு நாய் 
அடிபடாமல் இருக்க வேண்டும் 
இன்னும் முடியாமல் இருக்கும் தலையணை நனைதல்கள் 
உறைந்திட வேண்டும் 
இன்னுமொரு தற்கொலை நடவாமல் இருக்க வேண்டும் 
இன்னும் பசியடங்காமல் இரத்த தீற்றல்களுடன் அலையும் ஓநாய்கள் 
அமைதியடைய வேண்டும் 
பேரன்புடன் இரட்சிக்கும் சாத்தானே 
இந்த இரவு மட்டும் இரவாகவே இருந்திட வேண்டும்

Wednesday, 9 October 2013

தேவதைகளின் நிச்சலனம்










சிறகு நனைத்த பறவையின்
மௌனத்தை
வெற்றிடங்களில் நிரப்புகிறாய்

நிரம்பி வழியும்
எல்லாவித கருணைகளிலிருந்தும்
ஒரு துளி விஷத்தை பிரித்தெடுக்கிறாய்

பைத்திய நிலைகள் அடர்ந்திருக்கும்
பின்னிரவுகளுக்கு
புன்னகையை பரிசளிக்கிறாய்

அன்பின் ரோமங்களை
படர விடுகிறாய்
அவை ஆயிரமாயிரம் காலம் பழமையானவை
 








Wednesday, 4 September 2013

ஒரு பார்வை ஒரு புன்னகை ஒரு மௌனம்



யாருமறியாமல் ரகசியமாய்
நீ தரும் 
கைக்குட்டைகளில் 
புதைத்து தருகிறேன்
என் வாசனைகளை 


--------------------------------------------------------------------------------------------

காரப்பொறிகளில் இருக்கும்
நிலக்கடலைகள் 
எனக்கு பிடித்தமானவை தான்
அதை உனக்கு
பொறுக்கித் தருவது 
அதைவிட பிடித்தமானதாக இருக்கிறது

--------------------------------------------------------------------------------------------

கையெழுத்திடும் போதெல்லாம்
நீ தட்டிவிட்டு 
கோணல்மாணலான எழுத்துக்களோடு 
நிறைந்திருக்கும் கையொப்ப ஏடு
நீ இல்லாத ஒரு நாளில் 
வெறுமையாய் 
என்னைக் கடந்து சென்றது


--------------------------------------------------------------------------------------------

கடைசியாக 
நாம் மௌனமாய் 
அமர்ந்திருந்த இடத்தை 
இன்று நான்
தனியே கடக்கும்பொழுது
நாம் விட்டுச்சென்ற மௌனம்
பல பாஷைகளில் 
பேசி சென்றது

--------------------------------------------------------------------------------------------


நம்மிடையேயான
புரிதல்களின் இடைவெளிகளில்
நிரம்பி வழிகிறது
ஒரு பார்வை
ஒரு புன்னகை
ஒரு மௌனம்



Friday, 18 January 2013

இது காதல் செய்யும் நேரம் – 10



உடம்பு கனமே இல்லாது காற்றில் மிதப்பது போல் இருந்தது . உண்மையிலுமே இறந்து விட்டோமா ? கடைசியில் ஒரு முறை கூட ஆதியை பார்க்க முடியவில்லையே … அவன் குரலை கூட கேட்க முடியாத தண்டனையை காதல் அவளுக்கு அளித்து விட்டதோ. கண்ணீர் இறங்கி தாடையை நோக்கி ஓடுகையில் திராவகம் போல் சுட்டது
கண்ணை கொஞ்சம் திறங்க.. இங்க பாருங்க .. இங்க பாருங்க .. நான் பேசுறது கேக்குதா… கண்ணை நல்ல திறந்து பாருங்க…
அரைகுறையாய் தெரிந்த மங்கலான முகத்திடம்.. “வலிக்..குது.. இத எடுங்க”… என்று அடி தொண்டையை துருத்திக்கொண்டிருந்த குழாய் ஒன்றை சுட்டினாள்.
“சரி சரி எடுதரலாம். கொஞ்சம் நேரம் இருக்கட்டும்.  நீங்கலாம் கொஞ்ச நேரம் வெளிய இருங்க.” கிணற்றுக்குள் இருந்து கேட்பது போல் குரல்கள் ஒலித்தன.
நினைவு திரும்பியபொழுது பாதி கண்களையே திறக்க முடிந்தது அதுல்யாவிற்கு. மங்கலாக தெரிந்த எல்லாம் அவளுக்கு ஒரு அச்சத்தை கொடுத்தாலும். தொண்டையில் துருத்திக்கொண்டிருந்த ஏதோ ஒன்று இன்னமும் அவள் உயிருடன் தான் இருக்கிறாள் என்பதை உணர்த்தியது.
கண்கள் அறை முழுதும் சுழன்றது.. ஒருவரும் அருகில் இல்லை , சற்று தொலைவில் வெள்ளை உடை உடுத்திய ஒருத்தி தான் தெரிந்தாள். சற்று பின்புறம் திரும்பியவாறு இருந்தமையால் அதுல்யா அவளை நோக்கி கை அசைத்தது அவளுக்கு தெரியவில்லை.
“அதுல்யா ” குரலை கேட்டவுடன் பக்கவாட்டில் திரும்பிய அவள் அவனை கண்டதும் பெருங்குரலெடுத்து அழ முயற்சித்து முடியாதது  போல  தாரை தரையை கண்ணீரை உகுந்தாள்.
“ஷ்ஷ் .. அழாதடா …” என்று கூறியவன் கண்ணிலும் வெள்ளம் பெருகிற்று.
“வலிக்குது டா.. எடுக்க சொல்லு டா … ” திணறினாள் அதுல்யா
“ஏன்டா இப்படி பண்ணின” … அழுகையுனூடே வார்த்தைகள் சிதறியது ஆதிக்கு. பின் சமாளித்து அழுகையை நிறுத்தியவன். செவிலியை அழைத்து ஏதோ கூறினான்.
பின் டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு. அவளை நோக்கி “படிச்சவங்களே இப்படி பண்ணலாமா மா ? என்ன பொண்ணுமா நீ ? பல்ஸ் ரேட் 17 க்கு வந்துடுச்சு. எல்லாரும் எப்படி தவிச்சு போய்ட்டாங்க தெரியுமா ? ஏதோ தெய்வம் தான் காப்பாத்துச்சு …” , இன்னும் டாக்டர் ஏதேதோ பேசிக்கொண்டே போக அதுல்யா மெல்ல ஆதியை நோக்கி திரும்பி “நம்ம காதல் தான் என்னை காப்பாத்துச்சு.. இல்லனா நான் …”
மேல அவளை பேச விடாமல் அவள் வாயை மூடினான் ஆதி
“என்ன நினைச்சுடி இப்படி பண்ணின …”
“உன் கல்யாணம் ”
“அடி அசடே .. நீ இல்லாம யார்கூட என்னக்கு கல்யாணம் ?”
“…” அதுல்யா மௌனமாய் இருக்க ஆதி தொடர்ந்தான்
“இவ்வளவு தான் என்மேல நம்பிக்கை… ? அது என் பிரெண்ட்ஸ் நாம இப்படி இருக்கறது பாத்து அப்படியாச்சு நாம சேர்ந்துடுவோம்ங்கற நம்பிக்கைல பண்ணி இருக்காங்க..அந்த எண்ணம் கூட உனக்கு இல்லையாடி ”
“…”
“என்ன நினைப்புல தான் இப்படி பண்ணின ? நீ செத்து போய்ட்டா.. நான் மட்டும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருப்பேன் நு நெனைச்சியா ..”
” இல்ல செத்து.. போய்… ஆவியா வந்த்.. து உன்னை..யும் கொன்னு ..டலாம்னு நினைச்சேன்..” சொல்லி விட்டு அதுல்யா முறுவலித்தாள்.
“அப்பாடா அப்பவாது என்னை உன்கூட கூட்டிகிட்டு போகணும்னு தோணுச்சே”
“இனி உன்னை விட்டு எங்கயும் போக மாட்டேன்”
“நான் மட்டும் உன்னை போக விட்டுடுவேன்னு நினைச்சியா ?”
“அப்போ ஏன்டா முன்னாடி போக விட்ட ?”
“ஏற்கனவே நாம அழுந்த பிடித்து தான் , மூச்சி திணறி போய் கிடந்தது நம் காதல் . இன்னும் அதை படுத்தி எடுத்தால் எங்கே நம் காதல் இறந்து விடுமோ என்று பயந்துதான் கொஞ்சம் விட்டு பிடித்தேன் ”
“..”
“இந்த காதல் நம்மை வாழ வைத்ததுக்கு நன்றியாக , இனி நம் வாழ்நாள் முழுதும் இந்த காதலை குறையாமல் , அழுத்தாமல், வெறுக்காமல் , மறக்காமல் நம்மோடு கூட்டிக்கொண்டே செல்வோம் என சத்தியம் செய் அதுல்யா ”
ஆதியின் கைகளின் மேல் கை வைத்த அதுல்யா கண்களில் இம்முறை வடிந்தது ஆனந்த கண்ணீர் என்பதை சொல்ல தேவை இல்லை.
“எனதருமை காதலியே இது அழுவதற்கான நேரமில்லை ” என்று ஆதி அதுல்யாவின் கண்களில் முத்தமிட்டு அவள் கண்ணீரை துடைத்தான்.
“பின்னே இது என்ன முத்தம் இடுவதற்கான நேரமா ?” புன்சிரிப்புடன் அதுல்யா வினவினாள்.
“ஆம்  என் காதல் சகியே, “இது காதல் செய்யும் நேரம்’ ” என்று உச்சி முகர்ந்து, காதல் ஊற்றில் நனைந்து கரைந்துகொண்டிருந்தனர்.

முற்றும்



பி. கு : மொக்க கதையா இருந்தாலும் இதையும் கதை என்று ஏற்றுக்கொண்டு தொடர்ந்து படித்து , இக்கதையை தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கம் அளித்த நண்பர்களுக்கு மிக்க நன்றி

இது காதல் செய்யும் நேரம் – 9




உள்ளே ஒவ்வொரு மாத்திரையும் செல்ல செல்ல அவள் மனது கனத்துக்கொண்டே வந்தது. ஐந்து அட்டைகளில் இருந்த மாத்திரைகளும் முடிவுற்றிந்தது, ஆனால் ஓயாமல் வடிந்து கொண்டிருந்த கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை.
ஆதி இப்படி மனம் மாறுவான் என்பதை அவள் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவே இல்லை. தன் முட்டாள்தனத்தை எண்ணி நொந்து கொண்டாள். திருமணம் வரை போகும் அளவு தான் வெறுப்பை ஏற்படுத்தி விட்டோமோ என்று கலங்கினாள். இந்த காதலே ஒரு மாயை தான் என்றும் அவளுக்கு தோன்றியது.
அவனில்லாத வாழ்கையை அவள் நினைத்துக்கூட பார்த்ததில்லை. அப்படி ஒரு வாழ்கை தேவையே இல்லை என்று துணித்து (!?) தான் இந்த முடிவை எடுத்துவிட்டாள்.
ஏதேதோ நினைவுகளுடன் கண்களும் சுழற்ற துவங்கியதில் சற்று பீதியடைந்தாள். அவரசப்பட்டு விட்டோமோ , இன்னும் ஒரு முறை அவனிடம் பேசி இருக்கலாம் என்று எண்ணம் வந்த பொழுது ஆதி முன்பொருமுறை அனுப்பிய கடிதம் நினைவுக்கு வந்தது. பரபரத்து எழுந்து தள்ளாடி நடையிட்டு அந்த கடிதத்தை எடுத்து பிரித்தாள்.
கடிதத்தின் முதல் வரியை கண்டதுமே பொலபொலத்து அழ துவங்கி, கண்ணீருடனே மேல படிக்கலானாள்.
அன்பு மனைவிக்கு
உன்மேல் சிறிதளவு கூட காதலே இல்லை என்று நீ நினைக்கும் உன் …. (என்ன சொல்வது ? நான் இன்னமும் உன் காதலுக்குரியவனா ?? ) எழுதிக்கொள்வது. இது தான் நான் உனக்கு எழுதும் முதல் கடிதம் , கடைசி கடிதமாகவும் இருக்கலாம் ஆனால் எவ்விதத்தில் என்று நீ தான் முடிவு செய்ய வேண்டும். என் காதலை புரிய வைக்க நானும் பல விதத்தில் முயன்று விட்டேன், அனைத்தும் பாதகமாய் தான் முடிந்தது , உனக்கு என் காதல் புரியவில்லை என்பதற்காக என் காதலை விட முடியாது. இந்த கடிதமும் கூட என் காதலை புரிய வைக்க தான்.
நீ என்னை எவ்வளவு நேசிக்கிறாய் என்பதை நான் அறிவேன் , உன்னை விட அதிகமாய் காதலிக்கிறேன் என்று மதிப்பீடு கூறி என் காதலை சுருக்க நான் விரும்பவில்லை. உனகெந்த அளவீடுகளில் என் காதல் தெரிகிறதோ அதைவிட கொஞ்சமாவது அதிகம் இருக்கலாம் என்று நம்புகிறேன். இதையாவது நம்புகிறாயா?
உன்னை நான் என் உயிரை விட மேலாக நேசிக்கிறேன் , அதை தவிர உனக்கு வேற என்னடி வேண்டும் ? நான் உன்னை தவிர வேறதுவும் வேண்டாம் என்று கூட நினைக்கிறேன், அது ஏன் உனக்கு புரிய மாட்டேன் என்கிறது?  நீ என்னை எப்படி; என்னவென்று நினைத்தாயோ எனக்கு அதெல்லாம் தெரியாது, நான் உன்னை என் மனைவி என்று தான் வகுத்து வைத்திருக்கிறேன் , இதை மாற்றதான் நீ விரும்புகிறாயா ? நான் உன்னை கொஞ்சம் தவிர்த்தாலே தவித்து போவாயேடி .. இத்தனை நாள் எப்படி உன்னால் என்னை பிரிந்திருக்க முடிகின்றது ? அவ்வளவு வெறுப்பா என் மேல். உன் கோவம் பல நேரங்களில் நியாமானது தான், உன் கோவத்தையோ வெறுப்பையோ என்மேல் காட்டடி, ஏன் நம் காதல் மேல் காட்டுகிறாய், காதல் மேல் உனக்கேனிந்த வெறுப்பு. பொல்லாக் காதல் உன்னை விட்டுவிட்டு என்னை அல்லவா வதைக்கின்றது.
நீ போ யார் வேண்டாம் என்று சொன்னது , என் காதலையும் என் உயிரையும் திருப்பி கொடுத்து விட்டு போடி; என் உயிரே நீதான் என்பதை மட்டும் மறந்து விடாதே.
உன்னை நான் எந்த விஷயத்திலும் நான் வெறுத்ததில்லை , அது என்மேல் நானே சுடு நீரை கொட்டிக்கொள்வது போல் தான். நான் உன்கிட்ட எதுவுமே மறைததில்லையேடி , நீ மட்டும் இன்னும் ஏன்டி மறைக்கிற என்மேல இருக்கற காதலை ?
உனக்காக எது வேணா செய்வேன் , உயிரை கூட கொடுப்பேன் அப்படி எல்லாம் எனக்கு டயலாக் விட தெரியாது , யதார்த்தமாய் இருக்கு தான் எனக்கு தெரியும் . சுத்தி வளைக்காம சொல்லனும்னா நீ இருந்தா என் வாழ்கை .. இல்லை நம்ம வாழ்கை சந்தோஷமாக இருக்கும். இந்த காதல் தரும் சந்தோஷத்தை விட வேறென்ன நமக்கு வேணும் ?
துளி அளவு வெறுப்பை கூட என்மேல் நீ காட்டினாள் நெஞ்சம் வெடிக்கிறது.
என்மேல் தவறுகளே இல்லை என்று நான் சொல்லவில்லை , தவறிந்தாலும் கூட சுட்டி காட்டி திருத்த வேண்டிய நீயே இப்படி உன்னகென்ன என்று பொறுப்பில்லாமல் விட்டு சென்றாயே இது நியாயமா ? இதற்கு மேல் என்ன சொல்வது ? நீ விரும்பும்படி நான் இருக்கவே விழைகிறேன். நான் தவறே செய்திருப்பின் மனம் திறந்து மன்னிப்பு கோருகிறேன். மன்னிப்பாயா? நம் காதல் தான் கெஞ்சி கதறுகிறது, அதை தவிக்க விடாதேடி. நான்  சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீரிலும் உனக்கான என் காதல் வழிந்தோடுவது உனக்கு தெரியவில்லையா ?
உன்னை நான் வெறுத்திருப்பேன் என்று கனவிலும் நினையாதே , உயிர் போகும் வலி அது. என் காதலை தவிர உன்னிடம் தருவதற்கு வேறொன்றும் இல்லை ; என் உயிரை தான் எப்பொழுதோ எடுத்து சென்று விட்டாயே ?
மனம் திறந்து பேசுவோம்.. நம் காதல் உன்னை என்னிடம் கொண்டு  வந்து சேர்பதாய் எனக்கு உறுதி அளித்திருக்கிறது.
இதற்கு மேலும் உனக்கு புரிய வைக்க கூடிய எந்த கூறுகளும் என்னிடம் இல்லை . காதல் ஒன்று தான் மிச்சமிருக்கிறது . அதுவும் உனக்காக மட்டும் தான் இருக்கிறது. வேறு யாரிடமும் உனக்கான என் காதலை ; நம் காதலை, பகிர முடியாது.
“நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி – கண்ணம்மா
தன்னையே சசியென்று சரணம் எய்தினேன்”
உனக்காக காத்திருக்கிறேன் ..
காதலுடன். “
கடிதத்தின் எழுத்துக்களும் அதுல்யாவுடன் இணைந்து கரைந்து கொண்டிருந்தன.
ஆதியோ இல்லை அவளோ அங்கே ஜெயித்து விடவில்லை.. காதல் தான் அங்கே ஜெயித்திருந்தது. அவனை இன்னமும் தன்னுள் பிணைத்து வைத்திருந்தது காதலின் ஓர் இழை தான் என்பதை அதுல்யா உணர்ந்திருந்த தருணம் அவள் வாய் ஓரத்தில் நுரை தள்ள துவங்கி இருந்தது


நேரம் வரும் காத்திருப்போம்…..

அடுத்த பகுதியில் நிறைவுறும்!
நின்னையே ரதியென்று – பாரதியாரின் நின்னையே ரதிஎன்று பாடலின் வரிகள்

இது காதல் செய்யும் நேரம் – 8




பூனே, இரவு ஒன்பது மணி,
“ஸ்ஸ்ஸ் எவ்வளோ டிராபிக் “, வியர்த்து வடிந்த முகத்தை துடைத்துக்கொண்டு உள்ளே வந்து தன் ப்ளாட் கதவை அடைத்தாள் அதுல்யா.
கீழே சிதறி கிடந்த தபால்களையும், செய்தித்தாளையும் அள்ளி எடுத்த மேசையின் மீது கொண்டு வைத்தாள். முகம் கழுவி உடை மாற்றி விட்டு சோபாவில் அமர்ந்து கடிதங்களை பிரித்தாள். ரெண்டு மூன்று கடிதங்கள் பேங்கில் இருந்து வந்திருந்தது, வேறு யார் இப்பொழுது கடிதமெல்லாம் எழுதுகிறார்கள் என்று சலிப்புடன் மறுபடியும் மேசை மீது எறிந்த பொழுது ஒரு கடிதம் நழுவி கீழே விழுந்தது. ச்சு கொட்டி குனிந்து எடுத்து அந்த கடிதங்களுடன் எறிய சென்ற பொழுது , உரை மேலிருந்த பெயரையும் விலாசத்தையும் கண்டு புருவம் சுருக்கினாள்.
தான் காண்பது உண்மைதானா இல்லை ஏதேனும் பிரமையா என்று குழம்பி போனாள். கண்ணை கசக்கி கொண்டு மறுமுறை பார்த்தாள்.
அனுப்புநர் பெயர் இடத்தில் “ஆதித்யா” என்ற பெயரை கண்டதும் அவள் முகம் மலர்ந்து சற்றென்று சுருங்கியது . கடிதத்தை கிழிக்க முயன்றவள்  பின் ஏதோ தோன்றியவளாய் அமைதியாய் மேசை மீது வைத்து விட்டாள். கடிதம் மேசை மீது இருக்க நினைவு பின்னோக்கி சென்றது.
முதன் முதலாக ட்ரைனிங் முடிந்து அவள் ஆதி ப்ராஜெக்ட்டுக்கு  மருள மருள விழித்துக்கொண்டு வந்தபொழுது ஆதி அவளிடம் தன்னை மேனேஜர் என்று சொல்லி படுத்தி எடுத்தது, உண்மை தெரிந்த நாளில் அவனை துரத்தி துரத்தி அடித்து நட்பானது , நட்பு  கசிந்து காதலானது , போன் பேச்சுக்கள் , கெஞ்சல் கொஞ்சல்கள் , தனியே அவனுடன் கழித்த சந்தோஷ தருணங்கள் எல்லாம் நினைவுக்கு வந்து ஒரு புன்சிரிப்பை உதிர்த்தாள். காலம் தான் எவ்வளோ வேகமாக சென்று விட்டது, ஆயிற்று ஒன்றரை வருடங்கள் அவனை காதலிக்க ஆரம்பித்து  என்று நினைக்கும் போதே பெருமூச்சு விட்டாள். இன்னும் அவனை காதலிக்கிறோமா என்ற எண்ணம் தோன்றியபொழுது சட்டென்று தலையில் தானே தட்டிக்கொண்டு இதென்ன மடமையான ஒரு கேள்வி என்று வெக்கினாள்.
ஆமாம் அதுல்யா வாய் பேச்சு தானே ஒழிய அவளுக்கும் ஆதியின் மேல் தீராக் காதல் தான், இருந்தும் தன்மானத்தை கொண்டு தன் காதலை வீணே மறைத்துக்கொண்டு மருகிக்கொண்டு இருக்கிறாள் பேதை பெண்.
ஆதியின் நினைவுகளில் இருந்து சிரமப்பட்டு வெளி வந்தாள். கடிதத்தை பிரிக்க மனம் ஆவல் கொண்டது, இருந்தும் அடக்கிக்கொண்டு விட்டாள். எங்கே படித்தால் மனமுருகி அவனிடம் சரணடைந்து விடுவோம் என்பதை அறிந்தே தவிர்த்தாள். அவனுக்கு இந்த தண்டனை தேவை தான் எப்படி எல்லாம் தன்னை தவிக்க விட்டான் , எவ்வளவு அழுதிருப்பாள் அவனுக்காக, அப்படியேனும் அவள் காதலை அவன் உணரட்டும்.
சரிதான் ! யார் எதை உணர்வது ??
அந்த கடிதத்தை பிரிக்கும் காலம் வெகு விரைவில் வரும் என்பதை அதுல்யா அப்பொழுது அறிந்திருக்கவில்லை.
இரண்டு மாதங்கள் சென்றிருக்கும் அந்த கடிதத்தையே மறந்து விட்டிருந்தாள் அதுல்யா. அன்றிரவு, வழக்கம் போல் வந்திருந்த செய்தித்தாள்களை அடுக்கி வைக்க எடுத்தபொழுது அதன் ஊடே சிக்கி கொண்டிருந்த ஒரு மொட மொடப்பான சரிகை வேலைபாடுகள் கொண்ட அட்டையை விடுவித்து பார்த்தாள்.
திருமண பத்திரிக்கை ! யாருடையது ? மணமக்களின் பெயர்களை கண்ட அதுல்யாவிற்கு பூமியே தலை கீழாய் கவிழ்ந்தது போல தலை சுற்றிக்கொண்டு வந்தது.
“ஆதி வெட்ஸ் வீணா ” மீது அதுல்யாவின் கண்ணீர் சொட்டு சொட்டாய் படர்ந்திருந்தது. கையறுந்த நிலையாய் கதறி அழுதாள். சத்தியமாய் அவள் இதை எதிர்பார்க்கவில்லை. கண்ணீரே வற்றி போகும்படி அழுது தீர்த்து விட்டாள். உலகமே இருண்டு விட்டது போல் உணர்தாள். காலம் கடந்து புத்தி வந்து என்ன பயன். தான் என்ன நினைத்து செய்தோம் அது இப்படி எதிர்வினையாய் அமைந்து விட்டதே என்று கலங்கினாள்.
அப்பொழுதும் இல்லை இது கனவு தான் என்று தனக்குத்தானே நம்பிக்கொண்டாள், ஆனால் திருமண பத்திரிக்கை வந்து கண்ணை உறுத்தவே அவளின் மாய எண்ண பிம்பங்கள் உடைந்து நொறுங்கின.
இதை பேசியே தீர்த்துக்கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்தவளாய் போனை எடுத்து அவனுக்கு டயல் செய்தாள். போனை எடுத்தவுடன் குரல் வராமல் விம்ம தொடங்கினாள்.
கரகரப்பான ஒரு ஆண் குரல் அவளின் விம்மலுக்கு தடை போட்டது
“ஹலோ யாரு ?? ஆதி இல்லைங்களே, பத்திரிக்கை கொடுக்க போனவன் இன்னும் திரும்பவில்லை, போனையும் எடுத்துகிட்டு போகல.. வந்தவுடனே சொல்றேன்”
போனை கடாசி எறிந்து விட்டு துக்கம் பீறிட கதறி அழுதாள். அவன் மேல் அவள் கொண்ட காதல் அப்படி அழுதே கரைந்து போகட்டும்  என்பது போல் அழுது தீர்த்தாள். சுயநினைவே இல்லாதது போல் அப்படியே வீற்று கிடந்தாள்.
திடீரென எழுந்து ஏதோ முடிவுக்கு வந்தவள் போல அலமாரியை நோக்கி சென்றாள். எதையோ வெகு நேரம் துழாவி தேடி எடுத்தாள். கையில் க்ளோபிரமின் மாலியேட் சில்வர் சரிகை தாளினுள் மின்னியது.
பிரித்து கையில் அடுக்க துவங்கினாள். பின் தண்ணீரை எடுத்து அதனை விழுங்க துவங்கினாள்
ஒன்று .. இரண்டு … மூன்று …..


நேரம் வரும் காத்திருப்போம்…..

இது காதல் செய்யும் நேரம் – 7



தலையில் கை வைத்து அமரந்திருந்த ஆதி யாரோ மேஜையின் மீது வேகமாக கை வைப்பதை உணர்த்து நிமிர்ந்து ஒரு வினாடி அதிசயித்தான் .
” என்ன நினைச்சுக்கிட்டு இருக்க மனசுல ?”
கடுங்கோபத்துடன் வந்து விழுந்த வார்த்தைகளில் திணறி போன ஆதி பதில் சொல்ல வாயெடுக்கும் முன் , அதுல்யா அவனை பேசாதிருக்குமாறு கைகளால் சைகை செய்துவிட்டு பேசலானாள்
” நான் என்ன உனக்கு அவ்வளோ கேவலமா போய்டேனா ? நீ எது சொன்னாலும் உன் பின்னாடியே வந்து சுத்திக்கிட்டே இருக்கனுமா , நான் என்ன சூடு சொரணை இல்லாம இருக்கேனா ? இல்ல லவ் பண்ணிட்டா உனக்கென்ன நான் அடிமையா பதில் எதுவும் பேசாம இருக்கறதுக்கு”
“அதுல்யா கொஞ்சம் பொறுமையா பார்த்து பேசு இது ஆபீஸ் ”
“போதும் இத்தனை நாள் நான் பொறுமையா இருந்ததெல்லாம் .. சத்தியமா இனி உன் பக்கம் கூட திரும்ப மாட்டேன். கெட் லாஸ்ட்னு தானே சொன்னே அப்படியே போய்டுறேன் . தயவு செஞ்சு விட்டுடு ”
அதுல்யா பொரிந்து தள்ளிவிட்டு அவன் பதிலுக்கு கூட காத்திருக்காமல் வேகமாய் ஆதி கண்முன் இருந்து மறைந்து விட்டாள்.
எல்லாரும் தன்னையே வெறித்து பார்ப்பது தெரிந்து அவமானமாய் இருந்தது ஆதிக்கு. இந்த பெண் என்ன இப்படி ஒன்றையுமே புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாளே . என்ன சொல்லி தான் சமாதானப்படுத்துவது என்று நொந்து கொண்டான்.
தன் மீதும் தவறிருப்பதை ஆதி உணரத்தான் செய்தான் , அவனும் அவ்வாறு சொல்லி இருக்கவே கூடாது , என்ன செய்வது சூழ்நிலை அவ்வாறு அமைந்து விட்டது. எல்லா முறையும் போய் சமாதானபடுத்துவது போல் இம்முறையும் எப்படியேனும் அவளை நிலைமையை உணரச்செய்துவிடலாம் என்று எண்ணியது எவ்வளோ முட்டாள்தனம் என்பதை ஆதி அப்பொழுது அறிந்திருக்கவில்லை.
நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்றை நினைத்து.. இல்லை .. முடிவே  பண்ணி வைத்திருக்கும், என்பதை போல தான் ஆதியின் நிலைமையும் அமைந்திருந்தது. எவ்வளவோ முறை அதுல்யாவை பார்த்து தன்னால் இயன்ற அளவு சமாதானப்படுத்த செய்த முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போனது . ஆதியின் எந்த கெஞ்சலும் கொஞ்சலும் எடுபடவே இல்லை.
காதலில் தன்மானத்தை தான் பார்க்க முடியுமா என்ன ? அது ஒருவருக்குரியதல்லவே ! கடைசி வரை காதலை காப்பதில் தானே தன்மானமிருக்கிறது ? அதை சிலர் எப்பொழுதும் புரிந்துகொள்வதில்லை..
அந்த நிகழ்விற்கு பின்னர் அதுல்யா மிகவும் இறுகி போய் இருந்தாள், யாரிடமும் அதிகம் பேசுவதில்லை .. புன்னகைக்க கூட மறந்து விட்டிருந்தாள். தினம் தினம் அவனை பார்த்து வேதனையில் மனம் வெம்புவதை விட வேறிடத்திற்கு மாற்றல் வாங்கினால் நிம்மதியாக இருக்கும் என்று சென்றே விட்டாள்; அவள் தேடும் நிம்மதி இங்கே தான் இருக்கிறது என்ற உண்மையை அவள் புரிந்துகொள்ளும் காலம் எப்பொழுதோ ?
ஆதியின் நிலைமையோ இன்னும் தலை கீழ் கோல்டன் ஈகலும் எம்சியுமே வாழ்க்கையாகி விட்டிருந்தது ஆச்சரியமே !! வேலைக்கு கூட சரி வர போவதில்லை.  ஒரு நாள் அவனை மேடவாக்கத்தில் இருந்த பார் ஒன்றில் பாட்டிலும் கையுமாக பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
“மச்சி தாங்க முடியல டா.. செத்து போய்டலாம் போல இருக்கு டா .. நரக வேதனையா இருக்கு டா.. எல்லாம் என் தப்பு தான் டா ..” தலையில் அடித்து கொண்டு கதறி அழுதவனை பார்த்து ஆதியின் நண்பர்கள் கலங்கி விட்டனர். பலவாறு அவனை தேற்ற முயற்சித்தனர் , ஒன்றும் உதவவில்லை.. இன்னும் ஒடிந்து தான் போனான்.
ஆனாலும் அதுல்யாவை இப்பொழுது தொந்தரவு செய்வதில் ஆதிக்கு சற்றும் விருப்பம் இல்லை. இனி அவளை இறுக்கி பிடிப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை. அவளாகவே உண்மையை உணரும் காலம் வரும் என்று காத்திருந்தான்….
மூன்று மாதங்களுக்கு பிறகு ,
“என்னடா பேசினாளா..?” வண்டியை ஒட்டிகொண்டிருந்த தீபக் சற்று பின்புறமாக திரும்பி ஆதியை நோக்கி வினவினான்.
“ஹ்ம்ம் இல்லடா . பிங் பண்ணினா ஒரு ரெஸ்பான்சும் இல்லடா .. நம்பர கூட மாத்திடாடா , அவ விநெட்டுக்கு கூட எத்தன தடவ டா கால் பண்றது.” கண்களில் எட்டி பார்த்த கண்ணீரை அடக்க மிகவும் சிரமப்பட்டு அதுமுடியாமல் வார்த்தைகள் தழும்பியதை உணர்ந்த தீபக் அவனிடம் ,
“டேய் விட்டு தொலை டா .. இன்னும் எத்தனை நாளுக்கு தான் அழுதுகிட்டே இருக்க போற . அவ நல்ல ஜாலியா தான் டா இருக்கா .. நீ ஏண்டா இப்படியே இருந்து உன் வாழ்கையை கெடுத்துக்கற “
” விடரதுக்காடா லவ் பண்ணினேன் ?  விட்டுட்டு என்ன பண்ண சொல்ற ? வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி , குடும்பம் நடத்தி … ச்சே நினைக்கவே அருவருப்பா இருக்கு டா. தொட்ட என்ன ? தொடலைனா என்ன? காதல்னு வந்துட்டா எந்த விஷயத்துலயும் ஆண் பெண் வித்யாசம்லாம் கிடையாது டா எல்லாருமே ஒன்னு தான் . ஏதோ விரக்தில பேசுறேன்னு நினைக்காத டா , இது தான் காதலோட யதார்த்தம். ” ஆதிக்கு வார்த்தைகளின் ஊடே கண்ணீர்  வழிந்தது
“அப்போ லவ்ல தோத்துப்போன …” வாக்கியத்தை அத்துடன் நிறுத்தினான் தீபக்.
“பைக்க அப்படி கொஞ்சம் ஓரமா நிறுத்துடா “
கண நேர அமைதிக்குப்பின் ஆதி
” நீ என்ன சொல்லவரனு தெரியுது … லவ்ல தோத்த யாரும் வேற கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கறதில்லையா அதானே ?”
ஆம் என்பது போல் தலை அசைத்தான் தீபக்.
“அவங்கள்லாம் யதார்த்தத்தை பொய் பொய்னே மனசுக்குள்ள வரையறுதுக்கிட்டு அவங்களை அவங்களே ஏமாத்திக்கிட்டவங்கடா …”
“ஹ்ம்ம் என்னமோ சொல்ற… இப்போ என்ன தான் முடிவு பண்ணி இருக்க ?”
“ஒண்ணுமே புரியல டா “
சற்று அமைதிக்கு பின் , தீபக் ஆதியை நோக்கி
” இப்படி பண்ணி பாரேன் டா ”



நேரம் வரும் காத்திருப்போம்…..

Wednesday, 16 January 2013

ஓட ஓட ஓட தூரம் கொறையல

பாவாடை நுனியில்

கடிக்கப்பட்ட 

பாதி மிட்டாய்களின்

பிசினிலிருந்து எடுக்கபடுகிறது 

நம் நட்புக்கான அஸ்திவாரம் 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கடலும் கடல் சார்ந்த இடமும் 

வனமும் வனம் சார்ந்த இடமும் 

மலையும் மலை சார்ந்த இடமும்

என கூடும் பொழுதுகளில் 

விரிகிறது 

நம் நட்பும் நட்பு சார்ந்த இடமும் 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கொடுக்காபுளிக்கு ஸ்லேட்டுக்குச்சி 

தீப்பெட்டி அட்டைக்கு மஞ்சள் ரிப்பன் 

பொட்டுக்கடலைக்கு அச்சுவெல்லம் 

அட

நம்மிடமிருந்தே 

உலகிற்கு அறிமுகமானது 

பண்டமாற்றம் 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


கல்லாங்கா , லகோரி 

கோலிகுண்டு , கிட்டி புல்

தட்டாமாலை , ஐஸ்பாய் 

விளையாட்டுகளுக்கும் 

சலிக்கிறது 

நம்மோடு 

விளையாடி விளையாடி 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

காட்டுக்குள் இருக்கும் 

அய்யனார் கோவிலருகே 

சமைக்கப்படும் 

கூட்டாஞ்சோறு 

தீயில் எரிகிறது

உன் வீட்டு  ஜாதியும் 

என் வீட்டு மதமும் 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆலம் விழுதோடு போராடி 

ஆற்று நீரில் 

எருமைகளோடு ஊறி 

புழுதிக்காட்டில் பிரண்டு 

....... போராடி ஊறி பிரண்டு 

திளைக்கிறது நட்பும் கூட 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன் வீட்டிற்கு

நான் கூட்டிவந்த 

நிலாவிற்கும்  

என் வீட்டிற்கு 

நீ கூட்டிவந்த 

நிலாவிற்கும்  

ஏழு வித்தியாசம் 

சொல்லும் 

நம் நட்பு 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மாங்காய்களும் 

குருவி முட்டையும் 

கள்ளி பழமும் 

திருட திருட 

நட்பும் சேர்ந்தே 

இனிக்கிறது 


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மயில் றெக்கையும் 

சோளத்தட்டையும் 

புளியங்கொட்டையும்

பொறுக்கி பொறுக்கி ....

பொறுக்கி பொறுக்கி ....

ச்சீ ச்சீ

பொறுக்கியான நட்பு 

நம் நட்பு 


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எதை நீ எடுத்தாயோ

அது இங்கிருந்தே 

எடுக்கப்பட்டது 

எதை நீ கொடுத்தாயோ 

அது இங்கிருந்தே 

கொடுக்கப்பட்டது 

ஆம் 

நட்பிலிருந்தே

கொடுக்கப்பட்டதும் எடுக்கப்பட்டதும் 


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இவ்வாறான 

உவகை ஊட்டும்

பொழுதுகளில் 

பால்வெளியில் மிதக்கிறது 

நட்பும் 

காற்றைப் போலவே 




பி . கு : தொலைந்து போன பால்யத்தை பற்றி எழுதுவது மிகவும் சுவாரசியமானது. ஒவ்வொருவருள்ளும் பால்யத்தின் சிறு துளி ஈரம் ஒட்டிக் கொண்டு இருக்கும். அதுவும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு அது ஒரு வரப்பிரசாதம் போன்றது. கிரிக்கெட்டும் , ப்ளே ஸ்டேஷன்னுமாக உருண்டு பிரளும் 
இக்கால குழந்தைகளுக்கு ஒரு முறையேனும் விளையாடி காட்டவேண்டும் கிட்டிப்புல்லும் , பம்பரமும் , கோலி குண்டும் ....................

 நான் தொலைத்த பால்யமும் , பால்ய கால நட்பிற்கும் இந்த கவிதை சமர்ப்பணம்.