Tuesday, 4 February 2014

ஹ்ம்ம்ம்



ப்ரீத்தி தூரத்தில் நான் வரும்போதே பார்த்துவிட்டாள் என்னைப் பார்த்ததும் முகம் விரிய சிரித்தாள். சரியான பல்வரிசை இல்லை, ஒரு தெற்றுப்பல்லும். ஆனாலும் சிரிக்கும்பொழுது அழகி தான். கைகளில் கத்தையாக கல்யாண பத்திரிக்கை. அருகில் சென்றதும் "கார்கீகீகீ" கட்டிக் கொண்டாள். 

"இப்ப தான் வழி தெரியுதா தங்கம்"

"அவ்வ் செல்லம், சரி சரி விடு. வா கேஃபிடேரியா போகலாம் இங்க வெயில் தாங்கல"

அவள் கைகளில் இருந்த பைகளை வாங்கிக் கொண்டேன். ஒரு சுற்று இளைத்திருக்கிறாள். ஹேர்ஸ்டைலையும் மாத்திவிட்டிருக்கிறாள். கண்களை சுற்றி மெலிதாக கருவளையம். கைகளை கோர்த்துக் கொண்டேன்.

"எவ்வளவு நாள்" சிரித்தேன்.

"ம்ம்ம், ஒரே அலைச்சல்டீ இல்லனா முன்னமே வந்திருப்பேன்"

"ம்ம் ம்ம் வீட்ல இப்ப எல்லாம் ஓகே தானே"

"எங்க ? அப்பாவ பத்தி பிரச்சனையே இல்லடி, உனக்கு தான் தெரியுமே. அம்மா தான் இன்னும் புலம்பிக்கிட்டே இருக்காங்க"

"அம்மான்னா அப்படி தான்"

"...."

"ப்ரண்ட்ஸ் எல்லாருக்கும் கொடுக்க ஆரம்பிச்சிட்டியா"

"ம்ம் அப்படியே ஒவ்வொருத்தரா பார்த்து கொடுத்துட்டே வரேன். ரொம்ப அலைச்சலா தான் இருக்கு.. பாப்போம்"

"என்ன சொல்றாரு என் மாமா " நாக்கை கடித்துக் கொண்டு சிரித்தேன்.

"அவரு என்னத்த சொல்றாரு.. "

கொஞ்சம் பொறாமையாக இருந்தது. இரண்டு வருட சலிப்பில்லாத போராட்டம். நியாயமாக நான் சந்தோஷப்பட வேண்டும். பலமுறை நானே ப்ரீத்தியின் அம்மாவை சமாதானப்படுத்தியிருக்கிறேன். தீபக்கை பற்றியும் கவலைப்பட தேவையில்லை, ப்ரீத்தியை ரொம்ப நன்றாகவே பார்த்துக்கொள்வான். என்ன, எனக்குத்தான் 'தீபக்' என்கிற பெயர் பிடிக்கவே பிடிக்காது. ப்ரீத்தியிடமே நேரடியாக பலமுறை இதை கூறியிருக்கிறேன். "டீ என் மாமாவை கார்த்திக் இல்லனா அருண் ன்னு பேர் மாத்திக்க சொல்லுடீ" அவள் நீயே சொல்லிக்கம்மா என்று சலித்துக்கொள்வாள். ப்ரீத்திக்கு எல்லாமே சலிப்பு தான். அடிக்கடி பெருமூச்சும் விட்டுக்கொள்வாள். எனக்கு எல்லாவற்றையும் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும். அவள் சலிப்புறும் வேளைகளில் வம்பிழுத்து வாங்கிக்கட்டிக்கொள்வது எப்பொழுதும் நடப்பது தான்.

ப்ளாக் காஃபியை எடுத்துக்கொண்டு வெளியே பெஞ்சில் அமர்ந்தோம். ஒரு பத்திரிக்கையை எடுத்து சிரித்துக்கொண்டே நீட்டினாள். 'மிஸ். பூனைக் காதலி அண்ட் பூனை ஃபேமிலி", அழகான கையெழுத்து. தடவிப்பார்த்து சிரித்துக்கொண்டேன். கொஞ்சம் சத்தமாக சிரித்தேன்.

"ஏன்டீ சிரிக்கிற"

"காலேஜ் பத்தி நினைச்சேன்... எண்ணை வழிய தலைய படிய சீவி.. ம்ம்.. இப்ப ஆளையும் ஹேர்ஸ்டைலையும் பாரு" தலையைக் கலைத்துவிட்டேன்.

"ஏய்ய்.. " தலையை சரிப்படுத்திக் கொண்டாள்.

பத்திரிக்கையை பிரித்து பார்த்தேன். "கார்கி".. என்ன என்பது போல திரும்பி பார்த்தேன். நடுவில் இருந்த பையை எடுத்து மறுபக்கம் வைத்துவிட்டு கிட்ட நெருங்கி அமர்ந்து கைகளை கோர்த்துக்கொண்டாள். தலையை கவிழ்த்து அமர்ந்திருந்தாள். ஏதோ சொல்ல வந்து வாயை திறந்தவள் உடனே மூடிக்கொண்டாள். நான் எதுவும் பேசாமல் கட்டடத்தை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தேன்.

"அந்த ஒரு கில்டினெஸ் இன்னும் என்னை கஷ்டப்படுத்திக்கிட்டே இருக்குடீ"

"..... ஹ்ம்ம்ம்"

"பயமா இருக்குடீ"

"ச்சீ நீயென்ன லூசா, என்ன பயம் உனக்கிப்போ" அவள் எதைப் பற்றி பேசுவாள் என்று தெரியும்.

"தப்பு தான்டி அது .. புரியுது.. ஆனா ஐ ஆம் ஹெல்ப்லெஸ்"

"லூசு எனக்கு தெரியும்டீ ஆனா இன்னும் அதை ஏன் மறக்காம இருக்க ? அஞ்சு வருஷமாகிடுச்சு. அவளே மறந்திருப்பா. சொல்லப்போனா உன்னையே அவளுக்கு ஞாபகம் இருக்காது. அண்ட்ஒன் மோர் திங் அவங்களே பிரிஞ்சிட்டாங்க"

"உனக்கு தெரியுமா? நீ பார்த்தியா" அவள் குரலில் கொஞ்சம் கடுகடுப்பு ஏறியிருந்தது.

"தெரியாது, ஆனா சொல்லிக்கிட்டாங்க. சரி உனக்கு பயப்பட என்ன இருக்கு இதுல ? சின்னப்புள்ளதனமா இருக்கு"

"தெரியல.. ஹ்ம்ம்ம்"

கொஞ்சம் கைகளை இறுக்கிக்கொண்டேன். இருவரும் எதுவுமே பேசவில்லை. ஒவ்வொரு நிகழ்வும் மனதிற்குள் மங்கலாக வந்து சென்றது. அவளுக்கும் அதே தான் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். ப்ரீத்தி படிகளில் அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு அழுதது மட்டும் தெளிவாக நினைவிருக்கிறது. என்னால் கல்லூரி படிகளில் அமர்ந்துகொண்டு அவ்வாறு அழுதிருக்கவே முடியாது.

அன்று ஜெபாவை நிம்மி தாங்கிப்பிடித்து நின்றுக்கொண்டிருந்தாள். அவளும் அழுதழுது களைத்திருந்தாள். ஜெபா ப்ரீத்தியை விட்டு தனித்திருந்து நான் பார்த்ததேயில்லை. அவர்களுடன் பழகிய ஒன்றரை வருடங்களில் இருவரும் ஒருமுறைக்கூட சண்டை போட்டுக்கொண்டதில்லை. ப்ரீத்திக்கும் எனக்குமாவது அடிக்கடி சண்டை வரும். ஜெபாவை போல் அவ்வளவு பொறுமையாக என்னால் ப்ரீத்தியிடம் இருக்கவே முடியாது. ஜெபாவுடன் என்னை பேசவே விடமாட்டாள். கொஞ்சம் அதிகமாக பேசி சிரித்துவிட்டால் போதும், ஜெபா அழுது தீர்த்து கெஞ்சும் வரை ப்ரீத்தி பேசவே மாட்டாள்.

ஜெபாவின் நோட்டுப் புத்தங்களில் பல இடங்களில் 'ஜெ.பி' என்று கிறுக்கியிருக்கும். சில நாட்களாக ஜெ.பி 'ஜெ.கி' தான் பல இடங்களில் கண்ணில் பட்டது. கிரண் ஆந்திரா பையன். கொச்சை தமிழில் பேசுவான். ஜெபா சொன்னபொழுது ப்ரீத்தி தான் அவளை கட்டிப்பிடித்து முத்தியெடுத்து விட்டாள். அதன் பிறகு பெரும்பாலான நேரம் என்னுடைய அறையிலேயே ப்ரீத்தி இருக்கத் தொடங்கினாள். எதையுமே நான் கேட்டுக்கொண்டத்தில்லை. நண்பர்களுக்கிடையில் சண்டை இருக்கும் பொழுது மூன்றாவது நபராக உள்நுழைவதை நான் எப்பொழுதும் விரும்பியதே இல்லை.

ஜெபா ஒருமுறை அவள் வீட்டிற்கு எங்களை அழைத்து சென்றாள். ப்ரீத்தியை அடிக்கடி அழைத்து செல்வாள். முதல்முறையாக என்னையும் அழைத்து சென்றாள். அவளுடைய வீடில்லை, பெரியப்பாவின் வீடு அது. பணம் வலுத்த இடம். காலை உணவிற்கு இடியாப்பமும் பாயாவும் சாப்பிட்டது நன்றாக நினைவிலிருக்கிறது, அதற்குமுன் நான் பாயா சாப்பிட்டதேயில்லை. மாலை பீச்சிற்கு எல்லாரும் சென்றோம். ப்ரீத்தி கடலில் இறங்கவேயில்லை, ஜெபாவின் அண்ணருகே நின்று கொண்டாள். அன்றிரவு வெகு நேரம் நானும் ஜெபாவும் மெதுவான குரலில் பேசிக்கொண்டிருந்தோம். ப்ரீத்தி எப்பொழுதோ தூங்கிவிட்டிருந்தாள்.

அதன் பிறகான செமஸ்டர் லீவிற்கு நான் ஊருக்கு கிளம்பிவிட்டேன். ப்ரீத்தி ஜெபா வீட்டிலேயே இரண்டு நாட்கள் இருந்து விட்டுதான் கிளம்பினாள். ஊரிலிருந்து திரும்பி வந்ததும் அவர்களின் அறைக்கு சென்றேன். ஜெபா கட்டிலில் குப்புற படுத்திருந்தாள். ப்ரீத்தியை அறையில் இல்லை. நிமிர்ந்து என்னை பார்த்த ஜெபா விசும்பியபடி தோளில் வந்து சாய்ந்துகொண்டாள். "பாருடி இந்த **** எங்க அண்ணன் கிட்ட எல்லாத்தையும் சொல்லீட்டாடீ" குழறி குழறி வந்து விழுந்த வார்த்தைகள் எனக்கு முதலில் புரியவேயில்லை "என்னாச்சு ஜெபா" தோளை பிடித்து நிமர்த்தினேன். ஓவென்று அழத் துவங்கிவிட்டாள். கட்டிலுக்கு அழைத்து சென்று அமரவைத்து தலையை தடவிக் கொடுத்தேன். இடுப்போடு என்னை அணைத்துக்கொண்டவள் அழுகையை நிறுத்தவில்லை. கொஞ்ச நேரத்தில் அழுகை அடங்கி கேவலெடுத்தது. நான் அவளிடமிருந்து விடுவித்துக்கொண்டு தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து கொடுத்தேன்.

தண்ணிரை மடமடவென்று கவிழ்ந்துக் கொண்டவள் என்னை நிமர்ந்து பார்க்காமலேயே "அவ இனிமே இந்த ரூம்ல இருக்க கூடாது கார்கி, இல்ல வார்டன்ட பேசி எனக்கு வேற ரூம் வாங்கிக்கொடு"

"ஜெபா அவசரப்படாத அவ வந்ததும் பேசிக்கலாம்"

"இனி அவ என் மூஞ்சிலேயே முழிக்க கூடாது, அவட்ட ஒரு மயிரும் பேச முடியாது. எல்லாத்தையும் போன்லயே கேட்டுட்டேன்."

"...."

அன்றிரவு ப்ரீத்தி அறைக்கு வந்தபொழுது ஜெபா பைத்தியம் மாதிரி கத்திக்கொண்டு ப்ரீத்தியின் புத்தங்களையும் பெட்டியையும் வெளியே விசிறியடித்தாள். ப்ரீத்தி அவளையே வெறித்துப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள். வார்டன் வந்து கத்தியவுடன் எல்லாரும் கலைந்து சென்றனர். நான் ப்ரீத்தியின் பைகளையும் புத்தகங்களையும் எடுத்துபோய் உள்ளே வைத்தேன். ப்ரீத்தி அங்கேயே நின்று கொண்டிருந்தாள். ப்ரீத்தி என்னுடைய அறையில் தரையில் படுத்துக்கொண்டாள். யாரும் அவளுடன் பேசியிருக்கவில்லை. சாப்பிடவும் வரவில்லை. என்னுடைய தட்டிலேயே அவளுக்கு உணவு எடுத்து வந்து கொடுத்துவிட்டு படுத்துவிட்டேன். ஊரிலிருந்த வந்த களைப்பும், இந்த ஆர்ப்பாட்டங்களும் தந்த சோர்வில் நானும் உறங்கிவிட்டேன்.

காலையில் சீக்கிரமே முழிப்பு வர , தட்டுத்தடுமாறி எழுந்து டியூப் லைட்டை போட்டுவிட்டு கட்டிலில் வந்து அமர்ந்தேன். ப்ரீத்தி ஒருமாதிரி ஒருக்களித்து படுத்திருந்தாள். அருகில் கருஞ்சிவப்பில்.. கண்களை அழுந்த துடைத்துக்கொண்டு அருகில் சென்று குனிந்து பார்த்தேன். இடது கை மணிக்கட்டில் பிளந்து ஒரு மாதிரி கொழகொழவென்று ரத்தம் காய்ந்திருந்தது. தலை ஒரு மாதிரி சுற்றியது. எப்படி வார்டன் அறைக்கு சென்றேன் எப்படி ஆஸ்பத்திரிக்கு சென்றோம் எதுவுமே நினைவில்லை. ரூமுக்குள் நுழையவே பயமாக இருந்தது. கூட்டுகிற அக்காவை கூப்பிட்டு அறையை கழுவிட சொல்லியிருந்தார் வார்டன். கடிதங்கள் செல்போன் எல்லாம் வார்டனுடைய ரூமில் இருந்தது. பத்து மணி போல் கிளம்பி சாவியை எதற்கும் வார்டனிடம் கொடுக்கலாம் என்ற சென்றபொழுது ப்ரீத்தி அங்கே சாய்ந்து படுத்திருந்தாள்.

"அம்மா வராங்களாம் ப்ரீத்தி.. இந்தா சாவி""

"...."

"சாப்ட்டிய்யா"

"...."

அதற்குள் உள்ளே வந்த வார்டன் "என்னம்மா"

"ஒன்னுமில்ல மேம், சாவி கொடுக்க வந்தேன்". அவளை ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு வெளியே வந்தேன்.

ப்ரின்சிபால், டீசி, வார்னிங் என எல்லாம் முடிந்து ப்ரீத்தி வந்தபொழுது க்ளாசிலும் ஹாஸ்டலிலும் யாரும் பேசவில்லை. ரொம்ப நாள் தனியாகவே தான் இருந்தாள். அடுத்த இரண்டு வருடங்களும் ஜெபாவிடமும் ப்ரீத்தியிடமும் பேசுவதை குறைத்துக்கொண்டேன். வேறு சில டேஸ்காலர் தோழிகள் நெருக்கமாகி இருந்தார்கள். ஹாஸ்டலை காலி செய்வதற்கு முதல் நாள் மஹியிடம் ஒரு கடிதத்தை கொடுத்து ஜெபாவிடம் கொடுக்க சொல்லியிருந்தாள் ப்ரீத்தி.

"ஓய்...பழசையெல்லாம் விடுடீ." அவள் கைகளை திருப்பி பார்த்தேன். தழும்பு கொஞ்சம் மறைந்திருந்தது.

"ஹ்ம்ம்ம்"

"....."

"சரிடீ நான் கொரட்டூர் வரை போகனும், கெளம்புறேன். அப்புறம் பாப்போம் என்ன ?"

"ம்ம் ஓகே டீ"

பையிலிருந்து இன்னொரு பத்திரிக்கையை எடுத்தாள் "ஜெபா கிரண்" அதே அழகான எழுத்தில் எழுதியிருந்தது. அவள் முகத்தை ஆராய முடியவில்லை. குனிந்து யோசித்தபடி இருந்தவள் பத்திரிக்கையை மறுபடி பைக்குள் வைத்தாள்.

"அவங்க மாமா பையன் ஒருத்தன் இருந்தான்ல .. ம்ம் கல்யாணம் ஆகிடுச்சுடீ அவளுக்கு"

"ஹ்ம்ம்ம்"

No comments:

Post a Comment