பேரன்புமிக்க லாஷ்லி,
நான் சந்தோஷமாக இருக்கிறேன், மிகவும். இதை நீ உணர்கிறாயா லாஷ்லி ? எனக்கு எல்லாவும் மறந்து போயிருக்கிறது லாஷ்லி, எல்லா துன்பங்களும் எல்லா துரோகங்களும். நாம் இருவருமே ஒருவருக்கொருவர் மீட்பராகியிருக்கிறோம் இல்லையா ? இதற்காக தான் இத்தனையையும் கடந்து வந்திருக்கிறோம் லாஷ்லி. எல்லாமே பழகியிருந்தபோதிலும் இந்த நொடி இன்பமாக இருக்கிறது, எனக்காக நீயும் உனக்காக நானும் என்கிற இந்த நொடி அத்தனை இன்பமாக இருக்கிறது லாஷ்லி.
நீ எப்பொழுதும் நம்மை பற்றியே பேசுகிறாய்.. நான் மற்றவர்களை பற்றியும். நம்மை பற்றி பேச என்ன இருக்கிறது லாஷ்லி. நீயும் நானும் எப்பொழுதும் பிரிந்திருந்தோம் ? இந்த உறவு காலம்காலமாய் தொடர்ந்து வந்திருப்பது போல எது நினைக்கச் செய்கிறது ? விலகி நின்று ஒருவரை ஒருவர் பார்க்க இனி ஒன்றுமே இல்லை. நீ விரும்புகின்றவற்றை நானும் விரும்புகின்றேன், எந்த ஒரு கட்டாயமுமின்றி. நீ காதலிப்பவர்களை நானும் காதலிக்கிறேன் லாஷ்லி, இதை சொல்லிக்கொள்வதில் என்க்கொன்றும் வெட்கமில்லை. இந்த வெளிப்படையான காதலை தானே நாம் இருவரும் விரும்புகின்றோம், எல்லாவற்றையும் தாண்டி கட்டுப்பாடுயில்லாத இந்த வெளிப்படையான அன்பு தானே நம்மை பிணைத்திருக்கிறது.
பூனைக்குட்டியாய் உன் கால்களை உரசி சுற்றி வர வேண்டும் லாஷ்லி. உன்னுடன் இருக்கும்பொழுது தான் நான் என்னை சுதந்திரமானவளாக உணர்கிறேன், பூனையைப்போல. இரு பூனைகளிடைய படுத்துறங்கிய ஒரு இரவில், கருப்பையில் சுருண்டு ஒளிந்துகொள்வது போல் அவ்வளவு பாதுகாப்பாய் உண்ர்ந்தேன். பூனையாய் வாழ விதிக்கப்பட்டிருப்பது பெரும் பாவம் என்று எப்பொழுதும் நினைத்துக்கொண்டிருந்தேன். சாத்தானின் விரல்கள் இந்த பூனையை தீண்டும் வரையிலும் கூட அவ்வாறே நினைத்திருந்தேன். சாத்தானால் மீட்பராகிய இந்த பூனையின் வாழ்வு ஆசிர்வதிக்கப்பட்டது லாஷ்லி.
இந்த பிறந்தநாளில் மட்டுமில்லாமல் இனி எல்லா நாளின் முதல் நொடியிலிருந்து முடிவுறும் நொடிவரை நீ என்னை நிறைத்திருக்க வேண்டும், நான் உன்னை நிறைந்திருக்க வேண்டும். வேறெதுவும் ஒரு துளியேனும் நம்மை நிறைக்கக் கூடாது. 'நம்மிடையே' என்றொரு வார்த்தையும் இனி வேண்டாம். விலகி இருப்பது எனக்கு பிடித்தமானது இல்லை. பிடித்தமில்லாத ஒன்றை நான் எப்பொழுதும் செய்வதில்லை. எவரிடமிருந்தும் விலகியிருப்பதை நான் விரும்புவதேயில்லை. மற்றவர்களை பற்றி நினைக்கும்பொழுது விலகுவது ஒரு சாத்தியமாகவாவது இருக்கிறது. ஆனால் நம்மிடையே அந்த வார்த்தை நுழைவதை கூட எனக்கு விருப்பமானதாக இல்லை லாஷ்லி.
உன்னுடைய வாசனை என் மீது எப்பொழுதும் பரவியிருக்கிறது லாஷ்லி. என் குரலும் கூட உன் குரலாகத் தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது. நீயும் நானும் வேறில்லை லாஷ்லி.. வேறில்லை. இப்பொழுது ஒன்றாக இருக்கின்றோம். இனி எப்பொழுதுமே. இந்த இரவில் இதுகாறும் நினைவுகளை மட்டுமாவது கிளறிக்கொண்டிருந்த மைக்கேலின் புகைப்படத்தை கிழித்தெறிந்துவிட்டேன். ஜூலியா என்று யாருமே உலகில் இல்லை லாஷ்லி. ஜென்னி மட்டும் தான், நம்க்கான உலகத்தில் 'லாஷ்லியும் ஜென்னியும்' மட்டும் தான். ஜென்னி.. ஜென்னி.. என்று என் பெயரை நானே உரக்க கூவிக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது. ஜென்னியை என்றுமே நீ கைவிட மாட்டாய் லாஷ்லி. ஜூலியாவைப் போல் ஜென்னி என்றுமே தொலைந்து போக முடியாது.
இது நாள் வரை கடவுளிடம் வேண்டிக்கொள்ள பெரிதாய் ஒன்றுமே இருந்ததில்லை லாஷ்லி. ஆனால் எப்பொழுதும் நம்பிக்கை இருந்திருக்கிறது. இந்த வாழ்வு நமக்கானது லாஷ்லி, இதை நாம் கொண்டாடப் போகிறோம். தனியாக பயணம் செய்ய நீயோ நானோ எப்பொழுதும் முடிவெடுத்ததில்லை. ஒரு தொலைதூர பயணத்திற்காக எப்பொழுதுமே நாம் காத்திருக்கிறோம், இல்லயா ? லாஷ்லி, இனி வேதனைகள் இல்லை, வலிகள் இல்லை, கண்ணீர் இல்லை. புன்னகையை மட்டுமே என்றென்றும் சுமந்து செல்லப் போகிறோம்.
கைகளை கோர்த்துக்கொள் லாஷ்லி, இந்த இரவு நீள வேண்டும் .
என்றும் தீரா முத்தங்களுடன்,
உன் ஜென்னி
No comments:
Post a Comment