Thursday, 8 May 2014

மார்ஷலுக்கு - 5


பிரியத்திற்குரிய மார்ஷல்,
பேரன்பின் கடலில் என்றும் நாம் திளைத்திருக்க கர்த்தர் நம்மை ஆசிர்வதிப்பாராக. இது கடைசி கடிதம் இல்லை மார்ஷல். அப்படியானதொரு கடிதத்தை என்னால் உனக்கு எழுதிட முடியாது. அப்படியானதொரு கடிதம் இருக்கும்பட்சத்தில் நீ எனக்கு பதில் கடிதம் எழுதக் கூடிய சாத்தியமில்லாமல் போயிருக்கும்.

வெளிச்சத்தில் நடந்து பல நாட்கள் ஆகிவிட்டது மார்ஷல். இந்த கோடை அத்தனை சிறப்பானதாக இல்லை. நாமொன்றும் கோடையை கொண்டாடுபவர்கள் இல்லையே ! தனிமைக்கும் இருட்டுக்கும் பழகியவர்களுக்கு கோடை அத்தனை சிறப்பானது இல்லை தான் மார்ஷல்.விலகியிருப்பது உனக்கு விருப்பமானது இல்லை என்பதை நாம் அறிவேன். கோடை முடியும் நாளுக்காக நான் காத்திருப்பேன் மார்ஷல். மழைநாளின் குடைக்காக காத்திருப்பவள் இல்லை. மழையை பருகி வளர்ந்தவர்கள் நாம். மழை உன்னை என்னிடம் கொண்டு வந்து சேர்க்கும் நம்பிக்கை இருக்கிறது மார்ஷல்.

தனிமையை பழகியவளுக்கு இப்பொழுதெல்லாம் ஒரு நிமிட தனிமை கூட பெரும் வாதையாக இருக்கிறது மார்ஷல். இந்த வீடெங்கும், இதன் அறைகளெங்கும், இதன் சுவர்களிலும், சாளரங்களிலும், வீடெங்கும் நிறைந்திருக்கும் புத்தகங்களிலும் லாஷ்லியின் மணம் எப்பொழுதும் வீசிக்கொண்டே இருக்கிறது. மிச்சமிருக்கும் வாழ்க்கையை வாழ இந்த மணம் ஒன்று போதும். பேரன்பின் மணம்.

லாஷ்லியுடனானதாக தொடங்கும் பகல்களும் முடியும் இரவுகளும் முடிவற்றதாக நீண்டு கொண்டே இருக்கிறது. இந்த காதல் என்னை புதிதாக்கியிருக்கிறது மார்ஷல். வாழ்க்கை புதிதாக இருக்கிறது என்று சொல்வதற்கில்லை. வாழ்வது புதிதாக இருக்கிறது அல்லது வாழ்க்கையின் புது அத்தியாயத்தில் வாழ்கிறேன் மார்ஷல். நம்பிக்கை அளிக்ககூடியதாக இருக்கிறது மார்ஷல் இந்த வாழ்க்கை. இது உனக்கு சந்தோசம் அளிக்க கூடியதாகவே இருக்கும். இறந்தகாலத்தின் நீட்சியை போலில்லை இந்த வாழ்க்கை. ஆனால் எதையோ உணர வேண்டி இந்த நீட்சி தேவைப்படுகிறது. நாம் பேரன்பில் திளைத்திருக்கிறோம் மார்ஷல்.

சாத்தான் இப்பொழுதெல்லாம் நம்மை வெறுப்பதை கண்டு சிரித்துக்கொள்கிறோம் இல்லையா மார்ஷல் ? சாத்தனை போல் ஒரு பைத்தியக்காரன் இவ்வுலகில் இல்லை மார்ஷல். பெருங்காதலில் அவன் சுற்றி அலைகிறான் மார்ஷல். தேவதைகளை நீ சந்தித்து வருகிறாய் தானே.? தேவதை தானே அவள் ? சாத்தானை காதலிப்பவள் தேவதையாக தான் இருக்க முடியும். சாத்தானும் தேவதையும் தேவக்குமாரனும் …………பூனையும்; எவ்வளவு இடைவெளி பார்த்தாயா மார்ஷல். இப்பொழுது அழுவது போன்ற பாவனையுடைய உன் முகத்தை பார்க்க வேண்டும் மார்ஷல்.

இங்கு பூனைகள் இல்லை மார்ஷல். பூனைகளை தொலைத்தவளாகியிருக்கிறேன். தனித்திருக்கும் செந்நிற குட்டி பூனையும் என்னைத் தேடி வருவதில்லை மார்ஷல். அவன் வளர்ந்துவிட்டான். இனி அவனுக்கு நான் தேவையில்லை. அவனுக்கான உணவை அவனே தேடிக்கொள்வான். இது உலக நியதியில்லையா மார்ஷல் ? தனக்கு தேவையானதை தனித்து தேடிக்கொள்ளும் பக்குவம் வரும்பொழுது விலகி நடப்பது குற்றமில்லை மார்ஷல்.

எப்பொழுதும் எனக்கான கடிதத்தை நான் உன்னிடம் கோரியதில்லை. நீ தூரமாகயிருக்கிறாய் என்பதை அடிக்கடி உணர்த்த தேவையில்லை. தூரத்தை விளக்கிவிடும் ஆற்றல் ஒரு பதில் கடிதத்தில் இருக்கிறது மார்ஷல்.

வானம் நிறைந்த நட்சத்திரங்களை ஆசுவாசமாக பார்க்கும் நாள் வெகு அருகில் உள்ளது என்று நம்புகிறேன் மார்ஷல்.
முத்தங்களுடன்,
ஜெனி