Saturday, 30 June 2012

நினைவுகள் - 7


இந்த மாற்றம் தேவை தானா என்று தோன்றும் அளவு நெருக்கம் இதனுடன். ஆயிற்று ஒன்றரை வருடங்கள் சைதாப்பேட்டையில். வாழ கற்றுக் கொடுத்த இடம்! நிறைய சோகம்.. நிறைய சந்தோஷம்.. நிறைய பாடங்கள்...நிறைய தனிமை..நிறைய அழுகை...பிரிவு , வலி, சண்டைகள்.. இன்னும் நிறைய நிறைய... நிறைய நிறைய...நிறைய நிறைய. வந்த புதிதில்  ”சைதாப்பேட்டை” - பெயரிலேயே ஒரு பயம் காட்டிய இடம்;“கலீஜான இடம், ரவுடிகள் ஏரியா, கொசுக் கடி, தண்ணீர் பிரச்சனை...” இன்னும் என்னனவோ என்று எண்ணி தான் வந்தேன். ஆனால் நான் நினைத்ததுக்கு நேர் மாறாய் அமைந்தது இந்த இடம் எனக்கு. சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை அளித்த இடம். இங்கு நான் சுற்றாத இடம் இல்லை! ஒவ்வொரு மூலையையும் அத்துப்படி. பேருந்து ஏற நெடுந்தொலைவு தினமும் நடந்து செல்லும் பாதை , வழி நெடுக கன்னத்தில் போட்டுக் கொள்ளும் கோவில்கள், டைலர் அண்ணா, மளிகை கடை, மாவு கடை ,சமையல் அக்கா, மசால் பூரி கடை, ரயில்வே ஸ்டேஷன், ஆட்டோ அண்ணன், எதிர்பார்த்து வரும் எல்லா நேரமும் ஏமாற்றும் ஏடிம், வாட்ச்மான் அண்ணா, வேப்ப மர நிழல், பட்டம் விடும் சிறு நண்பர்கள்.......இந்த செடிகள், இந்த மாடி, இந்த வாசல், இந்த வீடு !!!!  ஏற்றுக் கொள்ள முடியாத மாற்றம்.!! இடம் மாறுதல் எனக்குள் பெரிய மாற்றத்தை எப்பொழுதும் ஏற்படுத்தியது இல்லை! நான்கு வருடங்கள் உருண்டு பிறண்ட கல்லூரி விடுதி பிரிவே எனக்கு பெரிய சோகத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் பெரும் பாறாங்கல் பாரம் மனதுள் அழுத்துகிறது, ஒரு நிமிடம் பாக் பண்ணி வைத்திருக்கும் பிரித்தெரிந்துவிட்டு அமைதியாய் உக்கார்ந்து கொள்ளலாம் என தோன்றுகிறது. ஆனால் இந்த மாற்றம் எனக்கு தேவையானது தான்!! இங்கு திரும்பி வருவேனா என்பது நிச்சயமில்லை. ஆனால் வரும்படி நேர்ந்தால் , இதை விட்டு இனியொரு முறை பிரிவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.


#Bye Bye சைதாப்பேட்டை!!!! :’(

இது காதல் செய்யும் நேரம் – 2



முன்குறிப்பு : இது கதையை பற்றிய முன்குறிப்பு அல்ல!
எனக்கு காதலையோ காதலர்களையோ வர்ணிக்க தெரியாது, அதனால் தயவு செய்து வர்ணனைகளை எதிர்பார்க்காதீங்க. என்னை பொறுத்த வரைக்கும் காதலர்கள் அழகோ அழகில்லையோ காதல் என்னைக்குமே அழகானதுதான், அதை வர்ணித்து ஒரு வரையறைக்குள் கொண்டு வர எனக்கு தெரியவில்லை.




மூக்கு நுனியும் காதுகளும் சிவக்க முகத்தை சரேலென்று திருப்பிகொண்டாள், அவள் திரும்பிய அதே நொடி அவளை ஆதி பார்த்து விட்டான்.”போச்சுடா இன்னைக்கு ரணகளம் தான் ” என்று மனதுள் நினைத்து கொண்டான்.ஆத்திரமும் அழுகையும் ஒன்று சேர,அதுல்யா கையில் இருந்து ஓட்ஸ் பிஸ்கட் நொறுங்க துவங்கி இருந்தது.
அவளின் நிறுத்தம் வந்ததும் திரும்பிக்கூட பார்க்காமல் இறங்கி விடு விடுவென்று நடக்க துவங்கினாள்.அவளை சமாதானப்படுத்தவில்லை என்றால் வரும் பின்விளைவுகளை அறிந்த ஆதி அவளின் நிறுத்தத்திலேயே இறங்கி நடக்க துவங்கிய நேரத்தில் அவள் ஓட துவங்கி இருந்தாள்.
இனிபொறுப்பதில்லை என முடிவு செய்து, வேக நடையிட்டு அவள் கைகளை பிடித்தான்.
“அதுல்யா கொஞ்சம் நில்லு, இப்போ என்ன ஆச்சுனு இவ்வளவு கோவப்படுற?”
“இன்னும் என்ன ஆகனும், முதல்ல கைய விடு”
அவன் பிடியிலிருந்து கைகளை விடுவிக்க அவள் திணறினாள், அவள் திமிர இவன் பிடி இறுகியது
“மரியாதையா கைய விட்டுடு.. ச்சு கடுப்பேத்தாத… உன் மூஞ்சிய பாக்கவே பிடிக்கல, விடு…” கைகளை வேகமாக உதறி நடக்க தொடங்கினாள்..
“ஹே ஏன்டி இப்படி படுத்துற.. சாரி டி .. ப்ளீஸ் டி , கொஞ்சம் நின்னு நடந்தது என்னனு கேட்டுட்டு அப்பறம் கோவப்படு”
“ஒன்னும் தேவை இல்ல..தயவு செஞ்சு என்ன விட்டுடு . நானும் உன் வழிக்கு வரல, நீயும் என்னை தொல்ல பண்ணாத. போதும் டா சாமி நான் பட்டதெல்லாம்” அவனை நோக்கி கையெடுத்து கும்பிட்டாள்.
அவளின் குவித்த கரங்களை பிடித்து ” சாரி மா புரிஞ்சிக்கோ.. நிலைமை அப்படி…”
“அப்படி என்ன !@#$% வேலை உனக்கு; காலைல இருந்து எத்தன போன் கால், எத்தனை தடவ பிங் பண்ணினேன் ” அதுல்யா வெடித்து அழ துவங்கி இருந்தாள்.
“ஹே அழாத டி..எல்லாரும் பாக்குறாங்க, முதல்ல நீ உள்ள வா”  பிடி விலகாமல் அவள் கைகளை இறுக்கி பக்கத்திலிருந்த உணவு விடுதி ஒன்றில் நுழைந்தான்.
“காலைல இருந்து கம்யுனிகேட்டர் வொர்க் ஆகல டா செல்லம், சத்தியமா! நம்பு ! யாருக்குமே பிங் பண்ண முடியல”
“ஒரு போன் பண்ணி இருக்கலாம்ல, அட்லீஸ்ட் நான் பண்ணினப்போ அட்டென்ட் பண்ணி இருக்கலாம்ல”
“போன் சார்ஜ் போட்டுருந்தேன் வீட்லயே மறந்து வச்சிட்டு வந்துட்டேன் மா”
“….”
“தேவை இல்லாம சண்டை போடாத டி.. புரிஞ்சிக்கோ”
“… ஹ்ம்ம் சரி விடு இனிமே இப்படி பண்ணாத”
“அட ராமா நான் என்ன பண்ணினேன்!!” மனதிற்குள் சிரித்துக்கொண்டான்.
சட்றென்று அதுல்யா முகம் மாறி ” அதெல்லாம் விடு , என்ன பஸ்ல அந்த ‘ஜாவா சுந்தரேசி’ கிட்ட இளிச்சு இளிச்சு பேசிக்கிட்டு இருந்த?”
கடவுளே அடுத்த ஏவுகணையா!!
ஆதி முழித்த முழியை பார்த்து அதுல்யா சிரிக்க தொடங்கினாள், அப்படா தப்பித்தோம் என்று அந்த சிரிப்பில் கலந்து கொண்டான் ஆதி , மகிழ்ச்சியை அழிக்க போகும் புயல் ஒன்று கரையை கடக்க காத்திருக்கின்றது என்பதை அறியாமல்……

பின்குறிப்பு: இந்த பகுதி எழுதி முடிக்கும் பொழுது.. ஒரு மாதிரி வழ வழவென்று (வள வள இல்லை) மனதில் ஒட்டாதது போல் இருந்தது, எங்கே தவறு என்று நீங்க சொன்னா  . அடுத்த முறை திருத்திக்கொள்கிறேன்.\

நேரம் வரும், காத்திருப்போம் ….

நினைவுகள் -6

இந்த ஜீன் மாசம் பொறந்தவங்க சரியான கிறுத்துருவம் பிடிச்சவங்களா இருப்பாங்க போல. எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து எங்க அம்மா பிறந்தநாள் கொண்டாடி நான் பார்த்ததே இல்லை, அதை பற்றி நாங்க கவலைப் பட்டதும் இல்லை. அம்மாவுக்கு பிறந்தநாள்னா வாழ்த்துவோம், அம்மா ஏதாவது பலகாரம் செஞ்சு தருவாங்க. இந்த அளவு மட்டுமே அவங்க பிறந்தநாள் எங்களுக்கு. கடந்த நாலு வருஷமா தான் ஏதோ திடீர்னு கொண்டாட ஆரம்பிச்சிடோம், ஏதாவது கிஃப்ட் வாங்குறது, கேக் வாங்குறது இப்படியே போகுது. ஆனா இந்த அம்மாக்கள் கிட்ட மட்டும் எதையுமே மறைக்கவே முடியாது, எப்படியாச்சும் கண்டுபிடிச்சிடுறாங்க!!!! ஒவ்வொரு முறையும் நாங்க ஸ்ர்ஃப்ரைசா எதாவது பண்ணலாம்னு முயற்சி பண்ணுவோம், ஆனா அவ்ங்க சரியா முதல் நாள் அதே பொருளை எங்க கிட்ட எடுத்து வந்து காமிச்சு ”ஹேய் இது எனக்கா டீ!!!!” அப்படினு கூவுவாங்க, எங்களுக்கெல்லாம் புஸ்ஸுனு ஆகிடும். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கூட அவ்வளோ பெரிய கேக் நானும் என் தங்ச்சியும் போய் வாங்கி வந்து மாடியில ஒளிச்சு வச்சா அன்னைக்குனு பார்த்து மழை பிரிச்சி மேயுது. நானும் என் தங்கையும் அடிச்சு பிடிச்சு மாடிக்குப் போய் கேக்க எடுத்துட்டு வந்தோம் ஆனா வீட்டுக்குள்ள எடுத்து வர முடியல , வெளியே ஒரு சேர்ல வச்சிட்டு வந்தோம், கொஞ்ச நேரத்துல எங்க அம்மா கத்துறாங்க.. “அய்யையோ நாய் கேக்க நக்கிக்கிட்டு இருக்கு”னு ... அவ்வ்வ்வ் “அய்யோ ராமா” எங்களால முடியல. சரி விசயத்துக்கு வரேன் நேற்று கடை கடையா ஏறி இறங்கி ஒரு புடவை அவங்க கிட்ட இல்லாத கலர் இல்லாத டிசைன்( அது கொஞ்சம் கஷ்டம் தான் :P) வாங்கினோம். அவங்க எப்பவுமே தொடாத ஒரு எடத்துல ஒளிச்சு வச்சோம். காலைல என் தங்கச்சி கத்தினதுல தான் எழுந்தேன். எங்க அம்மா கைய்ல நாங்க வாங்கி வந்த புது புடவையோட நிக்குறாங்க :’( :’(

“ஜாக்கெட்ல டிசைனே இல்ல டி” - அடங்கொக்கமக்கா

# ஆங் ஜுன் 8 எங்க அம்மாவுக்கு பிறந்தநாள் :)

நினைவுகள் -5



சில பேரு இருக்காங்க பாருங்க இந்த எக்ஸாம் டைம்ல தான் எக்கச்சக்க சக்க சக்க செண்டிமெண்ட் பார்பாங்க. எக்ஸாம் அன்னைக்கு இட்லி சாப்பிட கூடாது, மை போட கூடாது (மை இடுறதுக்கும் எக்ஸாம் எழுதுறதுக்கும் என்ன சம்பந்தம் ?? ), சாப்பிட கூடாது (இதுலலாம் நான் காம்ப்ரமைஸ் பண்ணிக்கவே மாட்டேன் ... எக்ஜட்ரா எக்ஜட்ரா .. நான் அப்படி எல்லாம் இல்லைங்க , என்ன எல்லா எக்ஸாம்க்கும் ஒரே டிரஸ் தான் போட்டுகிட்டு போவேன் அவ்வளோ தான் :D :D காலேஜ் முதல் வருஷத்துல ஆரம்பிச்ச பழக்கம். அப்போ மூணு டிரஸ் ராசியான டிரஸ் எடுத்து வச்சிடுவேன் எக்ஸாம்குன்னு , அதனால மாத்தி மாத்தி போட்டாலும் தெரியாது. அப்படியே படி படியா மூணு ரெண்டாச்சு , கடைசி வருஷத்துல ஒன்னு ஆச்சு. கடைசி வருஷம் மூணே மூணு பரீட்சை, ஆனா என்னோட துரதிர்ஷ்டம் ரெண்டு எக்ஸாம் அடுத்தடுத்து. ஆனா அதுக்கும் முன்னாடியே என் நண்பர்களுக்கு இந்த விஷயம் தெரிஞ்சு போச்சு. அதுக்கெல்லாம் கவலை படுற ஆள் இல்லை அப்போ. ஆனா இப்போ இங்க கம்பெனிக்கு வந்த பிறகும் அந்த பழக்கத்தை மாத்திக்கவே முடியல. போன சனி, ஞாயிறு ரெண்டு நாள் தொடர்ந்து MS எக்ஸாம். வழக்கம் போல ராசியான டிரஸ் போட்டாச்சு , ரெண்டாவது நாள் தான் ரொம்ப குழப்பமாகிடுச்சு , ஆபிஸ் நண்பர்கள் ஆச்சே கண்டுப்பிச்சா அசிங்கமாகிடுமேனு ஒரே கவலை. சரி வர்றது வரட்டும்னு துணிஞ்சு களத்துல இறங்கியாச்சு. என்னோட சீட்டும் கடைசிங்கறதால பிரச்சனை இல்லை. ரொம்ப சீக்கிரமாவே போய் உக்கார்ந்துகிட்டேன். யாரும் கேட்டுட கூடாது கடவுளே அப்படின்னு வேண்டிகிட்டு இருந்தேன். "Excuse Me" நிமிர்ந்து பார்த்தேன் , பக்கத்து சீட் பொண்ணு..பக்குனு ஆகிடுச்சு. இந்த பொண்ணு நேத்தும் இதே டிரஸ் தானே போட்டுட்டு வந்தா ????!!!!!!!!!!!!

#என்னை போல் ஒருத்தி

Tuesday, 19 June 2012

நினைவுகள் - 4

நேற்று கம்பெனி பேருந்தில் பயணம் செய்தபொழுது, பேருந்தின் கையொப்ப தாளில் தமிழில் பெயரை எழுதி கையொப்பமிட்டேன்.. அது குற்றமா? பேருந்தில் இருந்து இருந்து இறங்கியவுடன், என்னுடன் எப்பொழுதும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கும் ஒரு தோழி என்கிட்ட கேட்டாங்க, " ஏங்க தமிழ்ல பேர் எழுதி சயின் போட்டு இருந்தீங்க?"
"தமிழ்ல எழுத ஆசையா இருந்துச்சுங்க அதான்", 
"இல்ல எல்லாரும் அதப்பத்தி தான் பேசிகிட்டு இருந்தாங்க "
"ஓ சரி"
"உங்களுக்கு தமிழ்ல எழுத ஆசையா இருந்துச்சுனா வீட்ல போய் எதாவது பேப்பர்ல எழுதி பார்க்க வேண்டியதுதானே" (நக்கலான சிரிப்புடன்)
"ஏங்க நான் என்ன கிளைண்டுக்கு தர போற பிசினஸ் ரிப்போர்ட்லயா தமிழ்ல எழுதினேன் இல்ல ஸ்டேடஸ் ரிப்போர்ட்ல எழுதினேனா? இதுனால எதுவும் ஆகாதுங்க" (பயங்கர கோவத்தோட)
"அட அட என்ன ஒரு தமிழ் பற்று" (அதே நக்கல் சிரிப்பு)
"தமிழ் நம்மளோட மொழிங்க, என்னோட மொழில எழுதுறது எனக்கு ஒன்னும் அசிங்கம் இல்லங்க" (அதே பயங்கர கோவம் )
அமைதியாக சென்றுவிட்டாள் அந்த பெண்.....

ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது.. இனி நிறுத்திவிட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.. ஆம் இனி பேருந்து கையொப்ப ஏட்டில் கைஎழுத்திடுவதையே!!!

இது காதல் செய்யும் நேரம்



இது என் முதல் முயற்சி, என்னுடைய இந்த முயற்சிக்கு ஊக்கம் அளித்த என் நண்பர்களுக்கு நன்றி. எனக்கு தெரிந்த தமிழில் இந்த கதையை சொல்கிறேன்;தமிழ் ஆர்வலர்கள், தமிழ் நேசிப்பாளர்கள் இதை மன்னிக்க வேண்டும். பிழை இருப்பின் தயவு செய்து கூறுங்கள் கண்டிப்பாக திருத்திக்கொள்கிறேன் .
இந்த கதையில் வரும் சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே.யாருடைய மனமும் புண்படும் நோக்கில் இதை எழுதவில்லை.


300 பில்லியன் டர்ன் ஓவர்களை தாண்டி கொண்டிருக்கும் அந்த தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் இயந்திரங்களும் மனிதர்களும் வித்தியாசமின்றி இயங்கிகொண்டிருந்த மூன்றாவது தளத்தின் ஒரு மூலையில் மட்டும் ஏசியின் குளிரை தாண்டி அனல் கனன்று கொண்டிருந்தது..
காலைல இருந்து பிங் பண்ணிக்கிட்டு இருக்கேன் ஏன் ரிப்ளை பண்ணவே மாட்டேன்குறான். கவலை மனதை பிசைய கணிணித்திரையில் தெரிந்த நேரத்தை வெறித்தபடி நகத்தை கடித்துக்கொண்டிருந்தாள்.
ஒரு நிமிட காத்திருப்பிற்கு பின், “எவ்வளோ நேரம் தான் வெயிட் பண்ணறது” சலித்துக்கொண்டாள் .நண்பர்களின் அழைப்பு வரவே கணினியை லாக் செய்துவிட்டு கேபினை விட்டு வெளியே வந்தாள்.
அக்செசில் சொருகிய கார்டில் “அதுல்யா சங்கரன்” தேய தொடங்கி இருந்தது.
“ஓய் எவ்ளோ நேரம் வெயிட் பண்ணறது?” பொய் கோபத்துடன் தீபக் கேட்டான்
பதில் பேசாமல் மௌனமாக, போகலாம் என்ற சாக்கில் நடந்தாள் அதுல்யா.
“என்னாச்சு லூசு எதாவது பிரச்சனையா?? ஏன் அமைதியா இருக்க? “ஸ்ரீனி  அக்கறையுடன் கேட்டான்.
“ஒன்னும் இல்ல லேசா தலை வலி”
“டேய் அவங்க ‘உயரதிகாரி’ எதாவது காய்ச்சி இருப்பாங்க, அதான் இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி வருது” என்று சொல்லி திவ்யா சிரித்தாள்
“சத்தியமா ஒன்னும் இல்ல பேசாம வாங்க”
சாப்பிட்டு முடிக்கும் வரை நண்பர்களின் கலாட்டக்கள் எதிலும் கலந்து கொள்ளாமல், சாதத்தில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். உணவு உள்ளே செல்லாமல் தொண்டையை அடைத்தது.
இன்னும் சிறிது நேரம் அங்கு இருந்தால் திரைட்டு இருக்கும் கண்ணீர் வெளியே வந்துவிடும் என்பதை அறிந்து, வேலை இருக்கு என்று கூறி கிளம்பி விட்டாள்.
“என்னடா ஆச்சு இதுக்கு? காலைல நல்லாதானே இருந்தா”  இது தியாகு.
“தெரியலையே மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்” நண்பர்கள் கோரசாக சொல்லி சிரித்தாலும் அனைவர் மனதிலும் அவளுக்கு என்னாச்சு என்ற எண்ணமே ஓடி கொண்டிருந்தது.
கேபினுக்குள் நுழைந்த அதுல்யா கணினியை அன்லாக் செய்தவாறே பொத்தென்று இருக்கையில் அமர்ந்தாள்.திரையில் “ஹரிஷ் ஸ்ரீதர்” சாட் விண்டோ ஒளிர்ந்தது..
ச்சு கொட்டி சலிப்புடன் அதை மூடிவிட்டு  கம்யுனிகேட்டரில் ”ஆதித்யாஅரவிந்தனை” தேடி சொடுக்கினாள், ஆப்லைன் முகத்தில் அறைந்த நொடி அதுல்யாவிற்கு தலை விண் விண்ணென்று தெறிக்க துவங்கியது…

அதே சமயம், அந்த அலுவலகத்தின் இரண்டாவது மாடியில், குப்பைதொட்டியை கவிழ்த்து அதன் மேல் கால்களை நீட்டி, இரண்டு கைகளையும் தலைக்கு பின் கோர்த்து கணிணியை வெறித்துக்கொண்டிருந்தான் ஆதி என்கிற ஆதித்யா.. காதுகளின் உள்ளே “செந்தாழம் பூவின்” ஒலித்து கொண்டிருந்தது.
வீநெட் அலறியது “டேய் ஆதி என்னடா ஆப்லைன்ல இருக்க?”
“ஆமாம் டா என்ன பிரச்சனைனே தெரியல மச்சி காலைல இருந்தே யாருக்கும் பிங் பண்ணவே முடியல அதான் கடுப்பாகி சைன்அவுட் பண்ணிட்டேன்”
“நான் கூட ட்ரீட்க்கு பயந்து ஆப்லைன்ல போய்டியோனு பயந்துட்டேன் ஹி ஹி ஹி ”
“அடச்சே அதெல்லாம் இல்ல மச்சி இன்னைக்கு நைட் கண்டிப்பா பார்ட்டி உண்டு”
தலைவலி தாங்க முடியாததால் ஆறு மணிக்கே அதுல்யா கிளம்பிவிட்டாள். கிளம்பும் முன் மறுமுறை கம்யுனிகேட்டரில் ஆதியை தேடினாள், அதே நிலையை தான் காட்டியது.
பேருந்துக்கு அவசரமாக ஓடி ஏறி பார்த்தால் பேருந்து நிரம்பி வழிந்தது முன் சீட் மட்டுமே காலியாக இருக்க அதிலேயே அமர்ந்தாள்.
மதியம் சாப்பிடாததால் பசி தாங்க இயலாமல் கைப்பையில் வைத்திருந்த ஓட்ஸ் பிஸ்கட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள். பிஸ்கட்டில் இருந்த உப்புடன் ஆதி மேல் வந்த எரிச்சல் கலந்து கரிக்க தொடங்கியது.
தண்ணீர் குடித்தால் தேவலாம் போல இருந்தது, கைப்பையில் காலி பாட்டில் தான் இருந்தது. சரி பின்னாடி திரும்பி தண்ணீர் கேக்கலாம் என்று நேர் எதிர் பின்பக்க சீட்டை நோக்கி திரும்பினாள்….
அங்கே ஆதி ஒரு பெண்ணுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தான்…

நேரம் வரும், காத்திருப்போம்….