Wednesday, 1 January 2014

மார்ஷலுக்கு - 1



அன்பின் மார்ஷல்,

தேவகுமாரனின் குறைவில்லா கிருபையால் என்றென்றும் நலமோடு வாழ ! புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மார்ஷல். நாம் சந்தித்து ஒரு வருடம் ஆகப்போகிறதா ? ஆதியிலிருந்தே இந்த உறவு நம்மிடையே நிலைத்திருப்பதாய் நான் நம்புகிறேன். மார்ஷல் உனக்கு நினைவிருக்கிறதா ? நம் முதல் சந்திப்பு ? நாம் பெரிதும் நேசிக்கும் புத்தகங்களிடையே கைகுலுக்கிய அந்த முதல் சந்திப்பு. அந்த கைகுலுக்கலில் தான் எத்தனை உயிர்ப்பு. காலம்காலமாக தொடர்ந்து வந்த நேசத்தை நாம் இருவரும் அறிவோம் மார்ஷல்.

அதன் பிறகு எத்தனை சந்திப்புகள்... சந்திப்புகள்... சந்திப்புகள், அமைதியாய் சில, ஆர்பாட்டமாய் சில. சந்தேகமில்லாமல் நீ என்னுள் நிறைந்திருக்கிறாய் மார்ஷல். வண்ணத்துப்பூச்சியின் சாயம் நம்மேல் எப்பொழுதும் படர்ந்திருக்கிறது. இன்று நேற்றல்ல, காலம்காலமாய் மார்ஷல். நமக்கு பிடித்தமானதை நம் இருவரை தவிர அதிகமாய் யாரும் அறிந்திருக்க முடியாது மார்ஷல். அறிந்துகொள்ளும் இடைவெளியை நாம் ஏற்படுத்திக்கொண்டதில்லை.

பேரிரைச்சலுடன் கடந்து செல்லும் இரயிலொன்றை இரவு அமைதியாக பார்த்து நின்றிருக்கிறது. உதிராத அந்த மஞ்சள் நிற மனோரஞ்சித மலரின் வாசனை இப்பொழுது இந்த வெளியை நிரப்பியிருக்கிறது. அதோ எதன் மீதோ பாயத் தயாரான அந்த ஒற்றைக் கண் பூனை ஒரு கணம் நின்று திரும்பி பார்க்கிறது மார்ஷல். நீ இங்கே தான் இருக்கிறாய் மார்ஷல். இந்த உணர்வுகளெங்கும் நிரம்பியிருக்கிறாய். எதையோ திருப்பி தந்துவிட முனைகிற இந்த இரவில் தான் நீ இருக்கிறாய் மார்ஷல்.

பூனைகளை நமக்கு ஏன் தெரியுமா பிடித்திருக்கிறது மார்ஷல் ? நம்மை தவிர வேறு யாரையுமே நாம் இலட்சியம் செய்வதில்லை மார்ஷல். பூனைகளை மட்டுமே நமக்கு பிடித்திருக்கிறது.

மார்ஷல், நான் எப்பொழுதுமே பூனையாகவே இருக்க விரும்புகிறேன். ஆனால் எல்லாரும் என் மேல் ஏன் அன்பாக இருக்கிறார்கள் மார்ஷல் ? இவ்வளவு அன்பாக ? பயமாக இருக்கிறது மார்ஷல், உன் அதே பயம் ஒரு அட்டை போல் என்மேலும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. இந்த அன்பு வேண்டாம் மார்ஷல். இந்த அன்பை நிராகரிக்க முடியாமல் நான் தவிக்கும் தவிப்பை நீ மட்டுமே அறிவாய். பயமாக இருக்கிறது.

பிரிவின் பெருந்துயரினை எப்பொழுதும் நாம் மட்டுமே உணர்ந்து கொண்டிருக்கிறோம் மார்ஷல்.

நீ என் குழந்தையாக பிறந்திருக்க கூடாதா மார்ஷல். ஒரு தாயின் வெதுவெதுப்பை நான் எப்பொழுதும் உனக்கு தந்ததில்லையே.
மார்ஷல்.. மார்ஷல்....(அழுகிறேன்)

நாளை மறுநாள் விடியும்போது புத்தாண்டு மார்ஷல். இந்த கைகளை கோர்த்துக் கொண்டு ஊர் சுற்றி வர வேண்டும். உன்னை குழந்தையாக்கி தோளோடு அணைத்து...கொண்டாட வேண்டும் மார்ஷல், அந்த நாளை கொண்டாட வேண்டும்.

அழுதுவிடு மார்ஷல். என்னை பாரமாக்காதே. மடிபுதைந்து அழுது கரைந்துவிடு மார்ஷல்.

மார்ஷல், நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதுமில்லை.

முத்தங்களுடன்,
ஜென்னி

3 comments:

  1. பிரிவின் பெருந்துயரினை எப்பொழுதும் நாம் மட்டுமே உணர்ந்து கொண்டிருக்கிறோம்
    ... ம்ம்ம்..... ஆழமான வரிகள்

    ReplyDelete
  2. யாருங்க நீங்க.. வாய்ப்பே இல்ல. நல்லா எழுதறீங்க

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ் நன்றி :)

      Delete