Wednesday, 8 January 2014

மார்ஷலுக்கு - 2



மார்ஷல்,

கூட்டங்களினிடையே இருப்பது எனக்கு பிடிக்கவேயில்லை. வெகு சில நாட்களா தான் இதை உணர்கிறேன். எனக்கு கூட்டங்கள் எப்பொழுதுமே பிடித்தமில்லை மார்ஷல். கூட்டத்தை பார்த்து நான் பயந்த நாட்கள் தான் அதிகம். தற்கொலை எண்ணங்களை விலக்கி வைக்கவே நான் கூட்டங்களை தேடி தேடி கலந்து கொண்டேன் என்பதை நீ அறிவாய் மார்ஷல். பயம் இப்பொழுது அதிகமாய் இருக்கிறது.. மிக அதிகமாக.

எப்படி ஒரு இடைவெளியை ஏற்படுத்தினாய் மார்ஷல் ? நாம் கூட்டத்தினிடையே கலந்தோமா இல்ல அது நம்மிடையே கலந்ததா ? வேண்டாம் , இந்த கூட்டமும், அன்பும், தற்கொலையும். போலியாய் இருக்கிறது மார்ஷல். தொலைந்து போவது வருத்தமில்லை.. உன்னை நானும் என்னை நீயும் தொலைத்து விடக் கூடாது மார்ஷல். அன்பை சுமப்பது பெரும் கொடுமை இல்லயா மார்ஷல், அத்துனை பேர் அன்பையும். கூட்டங்களின் கருணைகளையும் , நேசங்களையும் என்னால் சுமக்க இயலவில்லை.. ஒரு துளி துரோகம் வேண்டும் மார்ஷல்; வாழ்கையை வாழ. கூட்டம் என்னை துரோகிக்கவில்லை மார்ஷல். அது தான் எனக்கு பயமாக இருக்கிறது, அன்பு தான் எனக்கு பயமாக இருக்கிறது.

மைக்கேலின் பிறந்தநாளை மறந்துவிட்டேன் மார்ஷல். எப்படி மறந்தேன் ? நான் மறந்திருக்கவே கூடாது மார்ஷல். இரண்டு நாட்கள் கழித்து இது நினைவுக்கு வந்திருக்கவும் வேண்டாம். இந்த கூட்டத்தினால் தான் மறந்து தொலைத்தேன். ஒரு வாழ்த்து செய்தி கூட அனுப்பவில்லை. மைக்கேல் என்னிடம் எதுவும் கேட்கப் போவதில்லை. அவனின் ஜூலியா நானில்லை இப்பொழுது. அவனுக்கு தெரியும் நான் சூழப்பட்டிருப்பது. வெள்ளம் போல் நுழைந்து இந்த அன்பு என்னை மூழ்கடிக்கிறது என்று மைக்கேலிடம் நான் எப்படி சொல்வேன் மார்ஷல்.

மார்ஷல், தெரியுமா ? அவன் எதையுமே மறப்பதில்லை. ஒவ்வொரு முறையும் அவன் முன் குறுகி நிற்கிறேன். எல்லாம் இந்த பாழாய் போகிற கூட்டமும் ... அன்பும். அன்பு ஏன் மார்ஷல் இவ்வளவு கொடுமையாக இருக்கிறது ?

மைக்கேலை பற்றி பேசும்பொழுதெல்லாம் உடல் சிலிர்க்கிறது. நானும் அவனும் தனித்திருந்தோம். எங்களை சுற்றி யாதொரு கூட்டமுமில்லை. மைக்கேலுக்கு கடிதம் எழுத வேண்டும் மார்ஷல். நீ இப்பொழுது சிரிக்கிறாயா மார்ஷல் ?

என்னால் யாரையுமே புறக்கணிக்க முடியவில்லை மார்ஷல். புறக்கணிக்கப்படுவது பெரும் வாதை. மைக்கேல் எனக்கு செய்ததை போல. என்னால் யாரையுமே புறக்கணிக்க முடியாது மார்ஷல்.

பூனைகளாக இருக்க பிரயத்தனப்படுகிறோமா மார்ஷல் ? அது நம் இயல்பு தானே. இயல்பை மறக்கடிக்கும் கூட்டங்கள் நமக்கு வேண்டாம் மார்ஷல். பூனைகளிடம் உன்னை பற்றி பேசுகிறேன், உன்னிடம் பூனைகளை பற்றி பேசுவது போல. அல்லது இரண்டுமே !

தனித்திருப்போம் மார்ஷல், எப்பொழுதும் போலவே. தேவக்குமாரனும் பூனையும் சாத்தானும் தேவதைக்காரனும் அப்புறம் ஓடிப்போனானே அந்த கம்யூனிஸ்ட்டும்.

இந்த பூனைக்கு வெதுவெதுப்பான அணைப்பு தேவைப்படுகிறது மார்ஷல்.

ப்ரியங்களுடன்,
ஜென்னி

1 comment:

  1. என்னால் யாரையுமே புறக்கணிக்க முடியவில்லை மார்ஷல். புறக்கணிக்கப்படுவது பெரும் வாதை.- அருமை... நிறைய எழுதுங்கள்

    ReplyDelete