Wednesday, 29 January 2014

மார்ஷலுக்கு - 3



பேரன்புமிக்க மார்ஷல்,

புனித மேய்ப்பரின் கருணை எப்பொழுதும் உன் பாத்திரத்தில் நிறைந்திருக்க. 

அந்த கடைசி செய்தி எவ்வளவு வலி மிக்கது மார்ஷல். அந்த செய்தியை நான் அனுப்பி இருக்கவே கூடாது. அதற்கு முன்னால் ஒரு குழந்தையை அள்ளி எடுத்து முத்தமிட்டிருக்கலாம் அல்லது லாஷ்லியின் வதைக்கும் சிரிப்பு நிறைந்திருக்கும் அந்த புகைப்படத்தை எடுத்து பார்த்திருக்கலாம் அல்லது தனித்தலையும் ஒரு தெரு நாய்க்குட்டியை நெஞ்சோடு அணைத்திருக்கலாம் அல்லது சுய இன்பம் கொண்டிருக்கலாம் அல்லது வலசை போகும் பறவை உதிர்த்துப்போகும் சிறகுகளை உள்ளங்கையோடு சேர்த்து வைத்திருக்கலாம் அல்லது, அல்லது உன் தோளில் சாய்ந்து அழுதிருக்கலாம் மார்ஷல்... அந்த கடைசி செய்தி அவ்வளவு வலி மிக்கது.

ஏன் விஷம் கலக்கப்பட்ட தேநீர் கோப்பைகளை நான் எப்பொழுதும் ஏந்தியிருக்கிறேன் மார்ஷல் ? ஏன் இந்த தேநீரில் எப்பொழுதும் துரோகங்கள் மட்டுமே கலந்திருக்கிறது மார்ஷல் ? இந்த நிலவினடியில் நடந்து செல்லும் இந்த நொடி ஆயிரமாயிரம் துரோகங்களை சுமந்து செல்லவில்லையா ? இரவு நம்மை துரோகிக்கவில்லையா மார்ஷல் ? அழுகைகளை புதைத்துக் கொள்ளும் இந்த இரவு நம்மை துரோகிக்கவில்லயா ? ஏன் மார்ஷல் இந்த இரவு பல நேரங்களில் ராப் சாம்பியின் இசையைக் கொண்டிருக்கிறது ? துரோகத்தின் கடைசி துளி வரை ருசித்துப் பார்க்கிற ஓநாயின் அலறல்களால் நிறைந்திருக்கிறது? இரவு அமைதியில்லை மார்ஷல். இரவை மட்டும் கடந்துவிட்டால் போதும், பகல் துரோகங்களை எளிமையாக சுமக்கிறது.

மைக்கேல் ஒரு பைத்தியக்காரன் மார்ஷல். மைக்கேலை இன்னமும் நான் அப்படி தான் எண்ணிக் கொண்டிருக்கின்றேன். மைக்கேலுக்கு என் யோனி குறித்த கவலைகள் அதிகம் மார்ஷல். என்னைப் பற்றி யோசிப்பதற்கு வேறேதுவுமில்லை அவனுக்கு. ஒரு 'ஆணை' போலவே எப்பொழுதும் என்னை காதலித்திருக்கிறான்; களவாடுவதும், களவாடப்படுவதும், அவ்வளவு தான் .. அது மட்டும் தான் மைக்கேல். கண்களில் நுழையும் சோப்பு நுரையின் எரிச்சலை போல அவன் துரோகங்களை தேய்த்தெடுக்க வேண்டும் என்று நினைப்பவன்.

மைக்கேல் ஒரு முட்டாள் மார்ஷல். என்னால் ஒரே நேரத்தில் மைக்கேலையும் லாஷ்லியையும் காதலிக்க முடிகிறது மார்ஷல். அவன் சத்தியமாக முட்டாள் தான். அவனால் இரு ஜூலியாக்களின் அன்பை சுமக்க முடியாது. என் கைகளில் நிறைந்திருக்கும் இந்த தழும்புகள் ஜூலியாவை நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கிறது மார்ஷல். நான் இனியொரு முறை ஜூலியாவாக இருக்கவே முடியாது யாருக்கும்.(அழுகிறேன்)

மைக்கேல் கனவுகளை திருடுபவன் மார்ஷல். வெட்கமுற வைக்கும் கனவுகளை இப்பொழுதெல்லாம் என்னுளேயே புதைத்துக் கொள்கிறேன். நெடுநாட்களாக தொடர்ந்து வரும் கனவொன்றில் மைக்கேல் எப்பொழுதும் உடனிருக்கிறான். அந்த அறையின் மங்கலான வெளிச்சம் வெற்றுத் தரையில் நீண்டிருக்கும் முழங்கால்களின் வெண்மை பளிச்சிட்டு காட்டிக் கொண்டிருக்கிறது, மைக்கேலின் மார்பில் சாய்ந்திருக்கிறேன். எங்கிருந்தோ வந்த வண்ணத்துப்பூச்சிகள் முழங்காலின் மேல் அமர்ந்தன. மெல்லிய ஆரஞ்சு வர்ணத்தில் கரும்பொட்டுகள். அவற்றில் ஒன்றை வருடிக்கொடுத்த பொழுது ஒவ்வொன்றாய் மறையத் துவங்கிய நிமிடத்தில் அதே ஆரஞ்சு வர்ண கருப்பொட்டுகள் என் உடலெங்கும். மைக்கேலும் அங்கிருக்கவில்லை. பெயர் தெரியாத இந்த வனத்தில் அதன் பின் எப்பொழுதும் தனித்திருக்கிறேன் மார்ஷல்

நான் ஏன் படிக்கிறேன் மார்ஷல் ? ஏன் எழுதுகிறேன் ? ஏன் பாடல்களில் கரைந்துவிட துடிக்கிறேன் ? எவற்றிலாவது அவனை தொலைத்து என்னை மீட்டெடுக்கும் யுக்திகளில் மறுபடி மறுபடி நானே தொலைந்து போகிறேன் மார்ஷல்.

ரயில் பயணங்களில் யாருடைய பாதங்களிலோ கடலை தொலிகளை உதிர்த்துவிட்டு வருவது போல் நினைவுகளை எங்காவது உதிர்த்துவிட்டு வரவேண்டும் மார்ஷல், நான் மீண்டு வரவேண்டும்.

எல்லாவற்றிலும் இருந்து விடுபெற்றுக்கொள்வதற்கு முன்னால் ஒரு பெருமூச்சு தேவைப்படுகிறது மார்ஷல்

முத்தங்களுடன்,
ஜென்னி

1 comment:

  1. அந்த கடைசி செய்தி எவ்வளவு வலி மிக்கது மார்ஷல். அந்த செய்தியை நான் அனுப்பி இருக்கவே கூடாது,,,

    என்னை மீட்டெடுக்கும் யுக்திகளில் மறுபடி மறுபடி நானே தொலைந்து போகிறேன்

    இரவை மட்டும் கடந்துவிட்டால் போதும், பகல் துரோகங்களை எளிமையாக சுமக்கிறது.

    ஆழமான உணர்வுபூர்வமான வரிகள்... நிறைய எழுதுங்கள்..

    ReplyDelete