Tuesday, 4 February 2014

தாரணி குட்டி - 1

கதவை கஷ்டப்பட்டு தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தாள் தாரணி குட்டி. அம்மா தான் கதவை திறந்து வைத்திருக்க வேண்டும், இந்த நேரத்தில் ப்ளாடில் எந்த வீட்டிலும் கதவு திறந்திருக்காது. ஓடி வந்து மடியில் புதைந்து கொண்டாள். நான் அவளின் கைகளைக் கோர்த்துக்கொண்டேன். 

உள்ளறையில் இருந்து வந்த அம்மா "என்ன கொஞ்சல் உரசல்லாம் பலமா இருக்கு" என்று கேட்டார்.

"உன் பேர் என்னடி" 

"தாடனி" 

"என்னது"

"தாஆஆடனி" இம்முறை கொஞ்சம் உரக்க கூறினாள்.

நான் தாரணியின் வாயசைப்பை ரசித்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். அம்மா நகரும் வரை அவளையே பார்த்துக் கொண்டு நின்றவள் என் கால்களில் ஏறி நின்றாள். நான் கால்களை தூக்கி நெற்றியோடு முத்தமிட்டு அவளை கொஞ்சிக்கொண்டிருந்தேன். கால்களில் ஏறி நின்று குதிக்க ஆரம்பித்தாள். அப்பாவின் ஞாபகம் வந்தது. அப்பா எப்பொழுது வீட்டிற்குள் நுழைந்தாலும் ஓடி சென்று தொப்பையோடு அணைத்துக்கொண்டு கால்களில் ஏறி நிற்பேன். அப்பா அப்படியே என்னை கால்களில் ஏந்திக்கொண்டு வீடு முழுக்க நடந்து வருவார்.

தாரணியை கீழே இறக்கிவிட்டு உள்ளறையில் இருந்து சொப்பு ஜாமான் இருந்த ஒரு அட்டையை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தேன். முன்னெப்பொழுதோ ஒரு குழந்தைக்கு கொடுக்க வாங்கி வைத்திருந்தது.

அட்டையை திருப்பி திருப்பிப் பார்த்தவள் "எனக்கா ?" என்று கேட்டாள்.

"ம்ம் உனக்கு தான் "

"பிரிச்சிக் கொடு"

பிரிக்க ஆரம்பித்தபொழுது அம்மா வந்து என் கையில் இருந்ததை வாங்கி அவளிடம் கொடுத்து "உன் அம்மாக் கிட்ட போய் பிரிச்சிக் கொடுக்க சொல்லு" என்று சொன்னாள்

"அம்மா வேண்டாம் நீயே பிரிச்சிக் கொடு" என்னிடம் நீட்டினாள்.

"அம்மா தான் நல்லா பிரிச்சி தருவாங்க, அம்மாட்டயே கொடு"

தலையசைக்க கூட இல்லை. அமைதியாக அட்டையை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டு வெளியே போய்விட்டாள்.

"அம்மா கதவை திறம்மா.. அம்ம்ம்மா கதவை திறம்மா" தாரணி வீட்டுக் கதைவை தட்டிக்கொண்டிருந்தது கேட்டது.

No comments:

Post a Comment