இரண்டு ஆண்டுகளில் லூட்டன் நகரத்து தெருக்கள் பரிச்சயமாகி இருந்தன. பெருநகரத்திற்குரிய காலை நேரத்து பரபரப்பு சாலைகளை நிரப்பிக்கொண்டிருந்தன. டவுன் சென்டரை தாண்டும் பொழுது கால்கள் கொஞ்சம் ஒத்துழைத்தன. டோவர் செல்லும் ரயிலுக்காக காத்திருந்தேன். இன்னொரு கிளாஸ் பால் குடித்திருக்க வேண்டும். இரவு முழுவதும் பசியுடன் சேர்ந்து இருமலும் வயிற்றை இறுக்கிப் பிடித்திருந்தது இப்பொழுது தான் வலியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
ஏபல் வந்திருக்காவிட்டால் இன்னும் இரண்டு நாட்களுக்கு சீண்ட ஆளின்றி ஜன்னல்கள் அடைத்து கிடக்கும் அந்த இருட்டு அறையில் மயங்கி கிடந்திருப்பேன். அவளுக்கு கதவை திறந்துவிட்டபொழுதே ஜூரத்தில் அருகில் இருந்த நாற்காலியில் மயங்கி சரிந்தேன். கெட்டிலை அவசர அவசரமாக எடுத்து வந்து தண்ணீரை வாயில் புகட்டினாள். தண்ணீரை அருகில் கிடந்த என் டிஷர்டில் ஊற்றி முகத்தை அழுந்த தேய்த்த பொழுது தான் எனக்கு சிறிது உணர்வு வந்தது. ரக்பி செல்லும் ரயில் நினைவுகளை கலைத்து சென்றது.
நான் டோவர் கண்டிப்பாக செல்ல வேண்டுமா என்கிற குழப்பம் மீண்டும் தலைதூக்கியது
ஜெர்கினுள் நுழைத்திருந்த க்ளவுஸ் கைகளை தாண்டி குளிர் ஊசியாய் ஊடுருவிக் கொண்டிருந்தது. ஆர்னிக்காவை இன்று எப்படியாவது பார்த்தே ஆக வேண்டும். ஆர்னிக்காவின் பெயரை உச்சரித்தபொழுதே மனது தகிக்கத் தொடங்கியது. கொஞ்சம் வலுப்பெற்றிருந்த கால்கள் மீண்டும் நடுக்கம் கண்டன. நல்லவேளையாக டோவர் செல்லும் ரயில் வந்து சேர்ந்தது.
உட்காரத் தோன்றவில்லை. ஸ்காட்டிஷ்தனமான பெண்ணொருத்தி என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு பத்திரிக்கையினுள் மூழ்கிவிட்டாள். குனிந்து என்னை ஒருமுறை பார்த்துக்கொண்டேன். நான்கு நாட்களாக ஒரே உடையை அணிந்திருக்கிறேன். ஏபல் வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன் செண்ட் பாட்டிலை தேடி எடுத்து மேசையின் மீது வைத்துவிட்டு தான் சென்றாள்.
அவளை அசட்டையாக நானும் ஒரு பார்வை பார்த்துவிட்டு காலியாக இருந்த எதிர் இருக்கையில் சென்று அமர்ந்தேன். இன்றாவது ஆர்னிக்காவை பார்த்துவிட வேண்டும். பனிப்பொழிவு கொஞ்சம் குறைந்திருந்து. கண்டிப்பாக வீட்டிலிருக்க மாட்டாள். பள்ளியிலிருந்து அவள் திரும்பும் வரை வீட்டிற்கு வெளியே காத்திருக்க வேண்டியது தான்.
ஜூலியா கண்டிப்பாக வீட்டிலிருப்பாள், கூடவே கேல்வினும். எனக்கு வீட்டுக்கு செல்ல விருப்பமில்லை. ஜூலியாவிற்கு நான் செல்வதில் வெறுப்பேதும் இருக்காது ஆனால் தேவையில்லாமல் தர்மசங்கட சூழ்நிலையை உருவாக்க எனக்கு விருப்பமில்லை. இன்னும் ஒரு மணி நேரம் ஆகும், ஏதாவது புத்தகமாவது எடுத்து வந்திருக்கலாம். நாக்கு வறண்டு ஒட்டிக்கொண்டது. இந்த ரயில் ஆஷ்போர்டிலும் நின்றது. மக்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தனர். எல்லார் முகத்திலும் சிறு புன்னகை படர்ந்திருந்தது போல தோன்றியது. ஆர்னிக்காவின் புன்னகை நினைவிற்கு வந்தது. தெற்றுப்பல் தெரிய விரித்து சிரிக்கும் அந்த மெல்லிய உதடுகளுடன் கண்களும் சிரிப்பை பிரதிபலிப்பது போல மின்னிடும்.
ஆர்னிக்காவின் புன்னகையை நினைத்து சிரித்துக்கொண்டபொழுது அந்த ஸ்காட்டிஷ் பெண் மீண்டும் ஒரு முறை கண்களை உயர்த்தி என்னை பார்த்துவிட்டு பத்திரிக்கையினுள் தலையை புதைத்துக்கொண்டாள். இன்று அவளை பார்க்கும் வாய்ப்பிருந்தால் என்னை பார்த்து புன்னகைப்பாளா ? சிறு புன்னகைக்கான பாரம் பெரும் சுமையென நெஞ்சில் எழுந்தடங்கியது.
டோவர் நிலையத்தில் ரயில் நின்றபோது மணி பத்துக்கும் மேல் ஆகியிருந்தது. ஆர்னிக்காவின் பள்ளி வெஸ்ட் மார்ஷில் இருந்தது. பலமுறை ஒன்றாக பயணம் செய்த பள்ளிக்கு இன்று தனியே அவளை காண செல்ல வேண்டும். மங்கிய சூரிய ஒளி ரோட்டில் சீராக பரவியிருந்த பனியை ஒளிரச் செய்து கொண்டிருந்தது. உதடுகள் உலர்ந்து போயிருந்தன. எதாவது குடித்தால் பரவாயில்லை. பையில் கை விட்டு பார்த்துக்கொண்டேன். காஃபி குடிக்கும் அளவுக்கு பணமிருக்க வேண்டும். சர்ச் ரோட்டில் இருக்கும் காஃபி கடையை நோக்கி நடந்தேன். மனம் முழுக்க ஆர்னிக்காவின் நினைவுகள் ஆக்ரோஷம் கொண்ட கடலைப் போல கொந்தளித்துக் கொண்டிருந்தன.
கேஃபில் கூட்டமில்லை. ஒரு ப்ளாக் காஃபி வாங்கி வந்து ஒரு மூலையில் அமர்ந்தேன். ஆர்னிக்காவுக்கு கார்னர் கபேயில் கிடைக்கும் லேட்டே காஃபி மிகவும் பிடித்தமானது. விலை அதிகமானது என்றாலும் ஆர்னிக்காவிற்காக செலவழிப்பதில் நான் என்றும் யோசித்ததேயில்லை. வீட்லிருந்து நடந்து செல்லும் தூரத்தை விட கொஞ்சம் அதிகமான தூரம் தான். கைகளை கோர்த்துக் கொண்டு பனி கொட்டத் துவங்கியிருக்கும் முன் மாலையில் ஷூவினால் தரையில் படந்திருக்கும் பனியை நிரடிக்கொண்டே பேசி செல்வோம்.
லூட்டன் வந்ததிலிருந்து எந்த ஒரு கேஃபிற்கும் நாங்கள் செல்வதில்லை. அவள் குறிப்பாக எங்கேயும் வெளியே செல்வதை விரும்பி இருக்கவில்லை. ஏபலின் வீட்டிற்கு மட்டும் அவ்வப்பொழுது கூட்டிச் செல்வேன். அமைதியாகவே இருப்பாள். இந்த இரண்டு ஆண்டுகளின் தனிமை அவளை அமைதியாக மாற்றி விட்டிருந்தது. ஜன்னல்களை எப்பொழுதும் அடைத்தே வைத்திருக்கும்படி வீட்டு ஓனர் கூறியிருந்தாள். சுத்த மிடில்செக்ஸ் ஊர்க்காரி என்று அடிக்கடி பீற்றிக்கொள்பவள் எதற்கு லூட்டனில் வீடு வைத்திருக்கிறாள் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வேன். ஆர்னிக்காவிற்கு அந்த வீடு சுத்தமாக பிடித்தமில்லை. ஆனால் குறைந்தபட்சம் நான் ஒரு நிரந்த வேலை தேடிக்கொள்ளும் வரையிலாவது அந்த குறைந்த வாடகை வீட்டில் இருந்தாக வேண்டிய கட்டாயத்தை புரிந்துகொண்டிருந்தாள். . இருளுக்கும் தனிமைக்கும் மெதுவாக தன்னை பழக்கபடுத்திக்கொண்டிருந்தாள். எனக்காக ஆர்னிக்கா இவ்வளவு பொறுத்துக்கொண்டு இருக்க வேண்டிய நிலை என்னுடைய இயலாமையை குத்திக் காட்டிக்கொண்டே இருந்தது
காலி கோப்பையை கொஞ்ச நேரம் உருட்டிக்கொண்டிருந்தேன். மதிய உணவு இடைவேளையில் அவளை சந்திக்க் முடியுமா என்று பார்க்க வேண்டும். பேருந்திற்காக காத்திருக்காமல் நடக்கத் தொடங்கினேன். டோவரில் நாங்களிருந்தபொழுது சைக்கிளிலேயே சென்றுவிடுவாள். லூட்டனுக்கு உடனே மாற்றல் வாங்குவது அவ்வளவு எளிதல்ல என்பதால் இத்தனை நாள் லூட்டனிலிருந்து டோவருக்கு மாதாந்திர ரயில் பாசில் வந்து கொண்டிருந்தாள். இந்த வாரம் முழுவதும் அவளுடைய பழைய சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றிருந்திருப்பாள் என்பதை நினைத்த பொழுது கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. ஜூலியாவிடம் கேட்டுக்கொண்டு எப்படியாவது அந்த சைக்கிளை லூட்டனுக்கு அனுப்பிவிட சொல்ல வேண்டும். ஊருக்குள்ளேயாவது ஆர்னிக்காவுக்கு உபயோகமாக இருக்கும்.
பள்ளியை அடைந்தபொழுது சரியாக உணவு இடைவேளை முடியும் மணி அடித்தது. உணவை உண்டு முடித்த பிள்ளைகள் பாதி உண்டு முடித்திருந்த நண்பர்களை அவசரப்படுத்திக்கொண்டிருந்தனர். மரத்தடியில் ஹைட் அண்ட் சீக் விளையாடிக்கொண்டிருந்த சிலர் அப்படியே வகுப்பிற்கு ஓடினர். சில நிமிடங்களில் வளாகமே அமைதியானது. ஆர்னிக்காவின் வகுப்பிற்கு போகலாமா ? தயக்கமாக இருந்தது. மெதுவாக நடை வைத்தேன். இரண்டாவது திருப்பத்தில் அவள் வகுப்பு இருந்தது.
நேரெதிரே நிற்பதற்கு கூச்சமாக இருந்ததால் வலது ஓரமாக ஒதுங்கி நின்றேன். ஒரு நிமிடத்திற்கு பின் ஆர்னிக்கா தலையை குனிந்தபடி வெளியே வந்தாள். சீருடை அணிந்திருக்கவில்லை. ஒரே சீருடையுடன் தான் வீட்டிற்கு சென்றிருந்தாள். அங்கிருந்த அவளுடைய உடைகள் எல்லாவற்றையும் லூட்டனுக்கு வரும்பொழுது எடுத்து வந்துவிட்டோம். கையுறைகளும் அழுக்காக இருந்தன. ஒரே வாரத்தில் மெலிந்திருந்தாள். சோர்வுற்றிருந்த கண்களுக்கு கீழ் மெலிதாக கருவளையம்.
”ஆர்னிக்கா..” நான் அழைத்தது அவளை எட்டாமலேயே காற்றில் கரைந்து போனது. முகத்தை வெளிப்பக்கமாய் திருப்பிக்கொண்டாள். நான் அவளையே உற்று பார்த்துக்கொண்டிருந்தேன். கைகளை மெதுவாக பற்றினேன். கைகளை வலுவாக உதறிவளுக்கு ஏதுவாக நான் பிடியை தளர்த்தினேன். அவளின் வகுப்பாசிரியை என்ன என்பது போல் ஒரு பார்வை பார்த்து வெளியே வந்தாள்.
”பார்க்கு பக்கம் கூட்டிப் போங்கள்” என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பாராமல் திரும்பி சென்றாள். ஆர்னிக்கா எனக்காக காத்திருக்காமல் விடுவிடுவென்று முன்னால் நடக்கத் துவங்கினாள்.
பெஞ்சில் ஈரம் படிந்திருந்தது, அதில் உட்காரலாமா வேண்டாமா என்று தவிப்போடு பார்த்துக்கொண்டு நின்றாள். ஜெர்கினை கழற்றி பெஞ்சின் மீது போட்டேன். “உட்காரு ஆரூ” திரும்பி என்னை முறைத்தவள் எதுவும் சொல்லாமல் எனக்கு முகம் காட்டாமல் அமர்ந்தாள்.
“இன்னும் கோவம் தீரலயா ஆரூ”
“…” பதிலேதும் பேசாமல் என்புறம் மெதுவாக திரும்பியவள் தயக்கத்தோடும் உரிமையோடும் என் கழுத்தில் புறங்கையை வைத்தாள். பிறகு நெற்றியிலும் வைத்தாள். ஒரு வாரத்திற்கு பின் ஆர்னிக்காவின் ஸ்பரிசம் என் மீது பட்டதும் உடல் சிலிர்த்தடங்கியது. அப்படியே அவள் கைகளை கோர்த்து முத்தமிட்டேன்.
“நீ வீட்டுக்கு போ… நான் சாயந்திரம் வந்திடுவேன்” நடுக்கமான குரலில். ஆர்னிக்கா அழுதுவிடுவாளோ என்று எனக்கு பயமாக இருந்தது. மெதுவாக அவள் முதுகுபுறமாக அணைத்தேன். எதிர்ப்பேதும் காட்டாமல் அமைதியாய் இருந்தவளின் முன் தரையில் அவள் முகம் நோக்கி மண்டியிட்டு அமர்ந்தேன்.
“ஆர்னிக்கா ஒரு நிமிஷம் என்னைப் பாரு” அவள் முகத்தை என்னை நோக்கி திருப்பினாள். அவள் கைகளை என் கைகளினுள் புதைத்துக்கொண்டு , “ஆரூ, நீ வருத்தப்பட தேவையில்லை. தப்பு என்மேல தானே. நான் உனக்குன்னு எதுவுமே பண்ண முடியல அந்த இயலாமைல தான் அப்படி பேசினேன். ஜூலியாகிட்ட நீ இருந்தா உனக்கு கொஞ்சம் சவுகரியமா இருக்கும்னு நினைச்சேன். உனக்கு தேவையானத என்னால சரியான நேரத்துல என்னால வாங்கி தர முடியலேயேங்குற குற்றவுணர்ச்சி எனக்கு எப்பவும் வந்துட கூடாதேங்குற சுயநலமும் அதுல இருந்துச்சு. இந்த வயசுல உனக்கு ஏன் இவ்வளவு தெளிவு, இவ்வளவு பொறுமை. எனக்கு இதுதான் வேணும்னு எதையாவது கேட்டு அடம் பிடிக்க மாட்டியான்னு மனசு ஏங்கும். தனிமையை தவிர உனக்கு வேற என்ன கொடுத்திருக்கேன் ஆர்னிக்கா. ஆனா இந்த ஒரு வாரம், நீயில்லாத ஒவ்வொரு நாளும் நீ அனுபவிச்ச மொத்த தனிமையோட வலியையும் எனக்கு கொடுத்திருச்சு ஆரூ. அந்த வீடு முழுக்க உன்னோட வாசம் விரவியிருக்கு ஆரூ. நீ நம்ப மாட்ட, இந்த ஒரு வாரம் முழுசும் உன்னோட அறையில உனக்கு பிடித்தமான பொருள்களுக்கிடையில தான் நான் தூங்கி எழுந்தேன். அங்கிருந்த எல்லா பொருளும் நீ எங்க நீ எங்கன்னு என்னை கேள்வி கேட்டுக்கிட்டே இருந்துச்சு. பயமா இருந்துச்சு. எதாவது ஒரு பொருளை நீ தொலைச்சிட்டு ஜூலியாக்கிட்ட நீ சொல்ல பயப்படுவியே, அதே பயம். அந்த அறையெங்கும் நிரம்பியிருந்தது உன் உணர்வுகள் தான் ஆர்னிக்கா”
கைகளைக் கடந்து கண்ணீர் ஓடியது.
”சரி. அப்பாவை நீ மன்னிக்க மாட்டியா ஆரூ ?” அவள் முகத்தை கையில் ஏந்தி பிடித்துக் கொண்டு கேட்டேன்.
கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆர்னிக்கா அழ ஆரம்பித்தாள், “அப்பா .. ஸாரி ப்பா….நீ பாவம்ல தனியா என்னை பார்த்துக்க முடியாதுன்னு தானே அப்படி சொன்ன…..நான் தான் என்னை விரட்டுறன்னு கோவப்பட்டுட்டேன்…..இனிமே போக மாட்டேன் ப்பா.. “
முதுகை தடவிக்கொடுத்து முகத்தை நிமிர்த்தி இருவரும் மாறி மாறி முத்தித்துக் கொண்டோம். இலைகள் உதிர்ந்த மரக்கிளைகளினூடே பொழிந்த பனி தலையை ஈரமாக்கிக்கொண்டிருந்தது.
No comments:
Post a Comment