அந்த பெண்ணின் கண்களில் சோகம் இருக்கிறது. கண்டிப்பாக இருக்கிறது. யாருடைய பொருளையே பறித்துக் கொண்ட பதற்றம் என்னை பெரும் பாரமென அழுத்துகிறது. சாண்ட்ரா, இந்த பகலை மட்டும் கடத்தி விடு ! இரவு என்னை பூனையாக்கிவிடும்.
இந்த பகல் பூனைகளால் நிறைந்திருக்கிறது சாண்ட்ரா.. திரும்பும் இடமெங்கும் பூனை.. பூனைகள். நான் எப்பொழுதும் பூனையாகவே இருந்து வந்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது ஆக நிஜமாய் ஒரு பூனையாய் மாறுவதை உணர்கிறேன். நான் பூனையாகும் ஒரு நாளில் இது போல் என்னை அள்ளியெடுத்து அணைத்துக் கொள்வாயா சாண்ட்ரா ?
யாரோ ஒருவர் நம்மை வெறுத்துவிடும் கணம் எப்பொழுதும் நமக்காக காத்திருக்கிறது. வெறுப்பு அளிக்கும் பயம் ஒரு பூனையாய் உன் மேல் சுருண்டு கொள்ள செய்கிறது. அணைத்துக்கொள், இந்த அணைப்பு தரும் கதகதப்பு போதும். வெறுப்பு அளிக்கும் பயத்தை யாருக்கும் நாம் கொடுத்திட வேண்டாம் சாண்ட்ரா
உனக்கு ஏன் பூனைகளை பிடித்திருக்கிறது சாண்ட்ரா? பூனைகள் மீட்பராய் இருப்பதை நீயும் அறிந்திருக்கிறாயா ? தொலைந்து போன தன் பூனை ஒன்றை தேடி அலையும் தேவகுமாரனின் கதையை நீ அறிந்திருக்க மாட்டாய் சாண்ட்ரா. அந்த பூனை மீட்பராய் இருந்தது என்று பூனையை தவிர அனைவரும் நம்பினர். பூனை தான் ஒரு சாதாரண பூனை என்றே பல காலமாய் நம்பியிருந்தது. அது ஒரு பூனை போல வாழ்வதற்கே விரும்பியிருந்தது. ஆனால் தேவகுமாரன் தேடுவதும் அச்சாதாரண பூனையை தான் சாண்ட்ரா. தேவகுமாரனுக்கு எஞ்சியிருப்பது அற்புதங்களை நிகழ்த்திய பூனையின் தடங்கள் மட்டுமே. சாதாரண பூனை அற்புதங்களை நிகழ்த்த முடியுமா சாண்ட்ரா?
பூனைகளை காதலிக்காத ஒரு நாளில் நானும் பூனையாகிவிடுவேன்.
லவ் யூ Sandra Bierman
லவ் யூ Sandra Bierman
ஓவியங்கள் - Sandra Bierman






No comments:
Post a Comment