தலையிலிருந்த நீர் இன்னும் சொட்டிக்கொண்டே இருந்தது. ஈரம் காயும் முன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற வெறி உந்தித் தள்ள அவசரமாக கத்தியை தேடினேன். அடுப்பிற்கு அடியில் இருந்த கத்தி என் தற்கொலை குறிப்பை போலவே மொன்னையாக இருந்தது. இது நேரம் எடுக்கும். எனக்கதற்கு அவகாசம் இல்லை.
வீட்டை விட்டு வெளியே வந்தபொழுது வெயில் அவ்வளவாக இல்லை. குப்பைத் தொட்டியில் ஒரு தலையில்லா குழந்தை பொம்மை கிடந்தது. இல்லை, நிற்க வைத்தது போல குப்பைகளிடையே கிடந்தது. ஒரு நிமிடம் நின்று பார்த்துக்கொண்டே இருந்தேன். அவ்வளவு துயரமாக இருந்தது, அதன் கைகளை பிடித்துக் கொள்ள வேண்டும் போல. கத்தியும் தற்கொலையும் நினைவிற்கு வர பேருந்தி நிறுத்தத்தை நோக்கி அவசரமாக நடந்தேன்.
அழுக்கு ஜீன்சும் பரட்டைத் தலையுமாய் பைக்கின் மீது அமர்ந்திருந்தவன் பார்த்துக்கொண்டே இருந்தான். நான் அவனை நோக்கி நடந்தேன். பைக்கை அவசரமாக கிளப்பிக்கொண்டு நகர்ந்தான். முத்தம் கொடுக்க தான் சென்றேன். தற்கொலைக்கு முன்னதான முத்தம்; சிறு முத்தம்; தற்கொலைக்கு முன் தெரியாத ஒருவருக்கு கொடுக்கும் முத்தம். தெரிந்தவர்களுக்கு தான் எத்தனை முத்தங்கள் கொடுத்திருக்கிறோம்.
பாக்கெட்டில் இருந்த ஜெம்சு மிட்டாய்கள் ஒவ்வொன்றாய் தரையில் சிதறடித்துக் கொண்டே அருகிலிருந்த அந்த கடையில் நுழைந்து கத்தியை தேர்வு செய்யத் தொடங்கினேன். துரோகங்களை போல் அறுக்கும் ஒரு கத்தி இல்லவே இல்லையென்று கடையின் பணிப்பெண் சாதித்தாள். தற்கொலையை தற்கொலைப் போலவே நடத்திடும் கத்தியாவது கிடைக்குமாவென்று பரபரத்தேன். அவள் உதடு பிதுக்கிய நேரம் தலையின் ஈரம் குறைவது போல உணர்ந்தேன்.
எப்பொழுதும் செல்லும் பார்க் தான். உள்ளே நுழையாமல் வெளிவாசல் ஓரத்திலிருந்த திண்டில் வாயில் சிகரட்டை சொருகியவாரு ஏறி அமர்ந்தேன். இன்னொரு முனையில் தனியாக அமர்ந்திருந்தவன் ஒருமுறை திரும்பிப் பார்த்தான். புன்னகைக்கவில்லை. லைட்டரை எடுத்து பொருத்தினேன். "நீ புகைப்பாயா ?" முகத்தை திருப்பாமலேயே அமைதியாக கேட்டான். "தற்கொலைக்கு முன் புகைக்க வேண்டும்......நெஞ்சு நிறைய..... நண்பன் சொன்னான்" நானும் அவனை திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் அவன் புன்னகைத்தது போல் இருந்தது. தொண்டையிலிருந்து தலைக்கு புகை ஏறி இரும்மத் தொடங்கினேன். "முதல் முறையாக இருக்கும்..... நெஞ்சு நிறைய புகைப்பது" வாய்விட்டே சிரித்தான். திண்டிலிருந்து குதித்து திரும்பி பார்க்காமல் நடந்தேன்.
என்னுடைய எந்த பிம்பத்தை விட்டு வந்தேன் ?
வாசல் முகப்பில் இருந்த குப்பைத் தொட்டியில் இன்னும் அந்த தலையில்லாத பொம்மைக் கிடந்தது. குப்பைத் தொட்டியின் அருகிலேயே அமர்ந்து முகத்தை மூடி பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினேன்.
தற்கொலைகளை தலையில்லாத பொம்மைகளே முடக்கிப் போடுகின்றன
தற்கொலைகளை தலையில்லாத பொம்மைகளே முடக்கிப் போடுகின்றன"
ReplyDeleteதெரிந்து இருந்தால் அவற்றை ஒளித்து வைத்து இருப்பேனே :)