பேரன்புமிக்க மார்ஷல்,
கர்த்தரின் பெருங்கருணையில் வாழும் நம்மையும் நம் அன்பிற்குரியவர்களையும் வாதை என்றும் அணுகாதிருக்க என் பிரார்த்தனைகள் எப்பொழுதும்.
வார்த்தைகள் குறைந்து போயிருக்கின்றன மார்ஷல், சந்திப்புகள் குறைந்து போயிருக்கின்றன. தனிதனியாக பயணம் செய்கின்றோம். விலகி இருப்பது உனக்கு பிடித்தமானதுதானா மார்ஷல் ? பிடித்தமில்லாத ஒன்றை நாம் எப்பொழுதும் செய்வதில்லையே.
பிரிவை பற்றி எது உன்னை யோசிக்க வைக்கிறது மார்ஷல் ? நான் உன்னை எப்பொழுதும் கைவிடுவதில்லை என்பதாக முடிந்த நம் முதல் கடிதம் உனக்கு நினைவிருக்கிறதா மார்ஷல் ? வார்த்தைகளால் விளையாடுபவர்களா நாம் ? அப்படி பல மனிதர்களை நாம் கடந்து வந்துவிட்டோம் மார்ஷல். "எப்பொழுதும்" என்பது குறிப்பிடத்தகும் நேரமா ? பொம்மையை அணைத்து நீ உறங்கிய ஒரு நாளில், எப்பொழுதோ உன்னை கருவில் சுமந்த நினைவு வருகிறது மார்ஷல்.
வன்மம் நிறைந்த இந்த உலகை பார்த்து நான் பயந்த நொடிகளிலெல்லாம் நான் ஆதரவு கொண்ட தோள்களை இனி தேட வேண்டாம் என்று நான் எப்பொழுதும் எண்ணியதில்லையே மார்ஷல். ஜென்னி என்று யார் என்னை அழைத்தாலும் மார்ஷல் தானே இந்த ஜென்னியை கண்டெடுத்தவன். மார்ஷலை மறந்து போகக் கூடியவள் என்றா ஜென்னியை எண்ணுகின்றாய் ?
"என்ன பெயர் வைக்கலாமென
யோசித்து குழம்பினேன்
வழிப்போக்கனாய் வந்த கடவுள் சொன்னான்
உன் பெயர் ஜெனஸிஸ் என
ஜெனீ ஜெனீ ஜெனீ ஜெனீ
ஜெனீ ஜெனீ ஜெனீ ஜெனீ
ஜெனீ
உச்சி முதல் பாதத்தின் விளிம்பு வரை
முத்தித்து கதறினேன்" (ஸீரோ டிகிரி)
இது நினைவிற்கு வருகிறது மார்ஷல் (அழுகிறேன்). உன்னை விட்டு நான் விலக நீயும் நானும் வேறில்லை மார்ஷல் . இனியொரு முறை இதே வார்த்தையை என்னை கூற வைக்காதே.
ஒவ்வொரு முறையும் என் முன் அழுது நீ பலமற்றவன் என்று நிரூப்பித்துக்கொண்டே இருக்கிறாய். ஒவ்வொரு முறையும் நான் சோர்ந்து விழும்போதெல்லாம் ஆறுதலாக தாங்கிய கைகள் பலமற்றவை இல்லை என்பதை நான் எப்பொழுதும் நம்பிக்கொண்டிருக்கின்றேன். இனியொரு முறை என் முன் அழாதே மார்ஷல், இனியொருமுறை அழவே அழாதே, ஆண்கள் அழுவதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது என்பதை அறிந்தவன் நீ. பலமற்றவனாக இருக்கும்பொழுதிலும் நீ விழும்வரை நான் பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்
பொய் உரைத்துவிட்டேன் மார்ஷல். சிறியதோ பெரியதோ, பொய் பொய் தானே. இதை நீ மறந்து சென்றாலும் நான் எப்பொழுதும் சுமந்து கொண்டே திரிகிறேன். உண்மையை நாம் சுமந்து செல்ல தேவையேயில்லை மார்ஷல். பொய் தான் எவ்வளவு கனம். என்றென்றைக்குமான வலியாய் ஒரு பொய் மனதில் நின்றிருக்கும். அந்த பொய்யை நீயும் மறக்க தேவையில்லை மார்ஷல். எல்லாவற்றையும் தாண்டி மறைப்பதற்கு என்று நம்மிடையே நுழைந்த தடமாக இந்த பொய் ஒன்றேனும் இருந்துவிட்டு போகட்டும். மிட்டாய்களை சுற்றி இருக்கும் சரிகைத்தாளை போல தான் மார்ஷல் நினைவுகளும், பிடித்தவர்கள் தரும்பொழுது சேமித்துவைத்துக்கொள்கிறோம் இன்பமாயினும் துன்பமாயினும். பிடிக்காதவர்கள் தரும்பொழுது புறக்கணிக்கின்றோம்.
இந்த வாழ்வு நமக்கான எல்லாவற்றையும் தந்திருக்கிறது மார்ஷல். நமக்கு சரியானவற்றை தான் நாம் தேர்ந்தெடுக்கின்றோம், இருந்தும் மதிப்பீடுகளுக்கிடையே தான் நாம் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நம்முடைய தேவைகள் எதுவென்று எப்பொழுதும் நமக்கு புரிந்திருக்கின்றது. மற்றவர்களுக்கு ஏன் மார்ஷல் நாம் புரிய வைக்க முற்பட வேண்டும். ஆனால் இவ்வுலகம் நம்மை அவ்வாறு வாழ விடாது மார்ஷல். இவர்களிடையே எவ்வளவு கவனமாக இருக்க வேண்டியுள்ளது மார்ஷல். ஒரு நொடியில் எல்லாவற்றையும் கலைத்துப்போடும் திறமையானவர்களிடையே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் மார்ஷல்.
யாரையும் இதுவரை நாம் வெறுத்ததில்லை மார்ஷல். அப்படி ஒரு வன்மம் தோன்றியிருந்தாலும் உடனே மறுதலிக்கின்றோம், ஏனெனில் வெறுப்பதில் நாம் தான் தோற்றுப்போகிறோம் இல்லயா மார்ஷல் ? ஒரு நொடியிலும் கூட வெறுப்பு மறைந்து அது குறித்து குற்றவுணர்ச்சி கொள்கிறோம். நம்மால் யாரையுமே வெறுக்க முடியாது மார்ஷல். பூனைகள் போல விலகி தான் செல்கிறோம், உண்மை தான் மார்ஷல் பூனைகள் யாரையும் வெறுப்பதில்லை. காயப்படுவோம் என்கிற பயம் தான் விலகி ஓட வைக்கிறது மார்ஷல்.
எல்லாருக்கும் பிரியமானவர்களாய் நாம் எப்பொழுதும் வாழந்துவிட முடியாது என்பதை நான் எப்பொழுது மார்ஷல் நம்பபோகிறேன். என்னவொரு ஒரு பேராசை அது ? ஏங்கி நிற்பதெல்லாம் பணம் பசியை தாணடி அன்பிற்காக என்பதை உலகமும் எப்பொழுதும் நம்பபோவதில்லை மார்ஷல். இந்த நகரம் நம்மை அச்சப்படுத்துகிறது, இந்த நகரத்து மனிதர்கள் அச்சமூட்டுகிறார்கள். மனிதர்கள் யாருமற்ற தீவிற்கு என்றாவது ஒரு நாள் சென்றுவிட வேண்டும் என்று பல முறை பேசியிருக்கிறோமே மார்ஷல். இந்த மனிதர்கள் அத்தனை பேர் மீதும் காட்ட வைத்திருக்கிற அன்பை கடலினடியில் கொண்டு புதைக்க வேண்டுமா மார்ஷல் ?
வரைய முடியாத தூரங்களிலேயே இந்த உலகம் வாழ விரும்புகிறது. ஒருவர் வாழ முடியாத வாழ்வை நாம் வாழ்ந்துவிட்டாலே நம்மை சுற்றி அசூயை சூழந்துகொள்கிறது இல்லயா மார்ஷல் ? இங்கிருந்து எடுத்து செல்வதற்கும் இங்கே விட்டு செல்வதற்கும் நினைவுகளை தவிர என்ன இருக்கிறது நம்மிடம்?
மார்ஷல், உலகை போல் நாம் வாழ வேண்டுமா ? இல்லை நம்மைப் போல்.... ?
ப்ரியங்களுடன்,
ஜென்னி
நல்ல எழுதி இருக்கீங்க. ரொம்ப நன்றி ங்க
ReplyDelete