அப்பாச்சி 160இன் வைப்ரேஷன் முன்னெப்பொழுதும் இல்லாத எரிச்சலை தந்தது ஆதிக்கு. வாகன நெரிசல்களில் இருந்து விலகி அந்த புறவழிசாலையை அடைந்திருந்த ஆதியின் பைக் ஐந்தாவது கியருக்கு மாறி இருந்து. வழக்கமாக அப்படி ஓட்டுபவனில்லை தான், ஆனால் இப்பொழுது அவன் இருந்த நிலைமைக்கு வேறு வழி இல்லை.
தேவநேசம் மருத்துவமனை முன்னால் அவன் பைக்கை நிறுத்திய இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் தான் அதுல்யாவின் வீடு இருந்தது.
வண்டியை விட்டு அவசரமாக இறங்க எத்தனிக்கையில் பெரிய கரிய நிற துணி ஒன்றினால் அவன் முகம் பின்புறமிருந்து சுற்றி வளைக்கப்பட்டிருந்தது .
“அடிங்கடா .. ம்ம்ம் நல்ல போட்டு சாத்துங்கடா இந்த நாயை ”
“ஹேய் யாருடா… ம்ம் ஏய் விடுங்கடா !@#%^&”
மூச்சு திணற, முகத்தை மூடிய துணியை பலங்கொண்டமட்டும் இழுத்து உதறி வெளிக்காற்றை சுவாசித்தபொழுது சட்டென்று ஆதியால் நிதானிக்க இயலவில்லை.
அவன் முதுகில் ஐந்து பேரும் ஒன்றாக சேர்ந்து அடிகளை இறக்கிய நொடி யாரென்று புரிந்து, கிடைத்த ஒரு கையை ஆதி வளைத்து பிடித்து திருகினான்
“அடிங்க !@$%^ எருமைங்களா நீங்கதானா.. ஏன்டா இப்படி பண்றீங்க… உங்கள கொல்ல போறேன் பாருங்க”
ஐந்து பேரும் ஒன்றாக கைகொட்டி சிரித்தனர் , ஆதியின் முறைப்பை பார்த்து வாயைமூடிக்கொண்டு சிரித்துக்கொண்டனர்.
“சரி சரி விடு மச்சி!! பயந்துட்டியா?”
“பின்ன? அறிவே இல்ல டா உங்களுக்கு என்ன சொல்லி கூப்பிடுறதுன்னு விவஸ்தையே இல்ல, எவ்வளோ வேகமா வந்தேன் தெரியுமா? ச்சே !!”
“எல்லாம் ஒரு ஜாலிக்கு தான்”
“டேய் அதுக்காக ஆக்சிடென்ட்ன்னு சொல்லுவீங்களா.. நான் அவன் வீட்டுக்கு போன் பண்ணி இருந்தா என்ன ஆகுறது”
“காமெடி பண்ணாத டா உன்னோட மொபைல்ல என்னைக்கு டா பேலன்ஸ் இருந்திருக்கு”
“…” ஆதி மறுபடியும் முறைத்தான்
“டேய் நியாயமா பார்த்த நாங்க தான் உன்னை திட்டனும்… இன்னைக்கு என்ன நாள் மறந்துபோச்சா?”
“என்ன நாள் ?” மண்டையில் தட்டிக்கொண்டே யோசித்தபொழுது … இன்னைக்கு… டேய் ராகுலோட பர்த்டே தானே.. அட ச்சே எப்படி டா மறந்து போனேன் …”
“ஹ்ம்ம் அதுக்கு தான் நைட்டே கால் பண்ணினோம் , சார் தான் இப்போலாம் ரொம்ப பிஸி ஆச்சே”
“டேய் !@$%^ நைட் வந்ததே ரொம்ப லேட்டு டா… புரிஞ்சிகோங்கடா.. ச்சே எப்படி டா மறந்து போனேன்” நெற்றியை தேய்த்துக்கொண்டான் ஆதி.
“சரி விடு மச்சி வேலை டென்ஷன்ல மறந்திருப்ப.. ‘சமர்பனா’ போலாம்ல அங்க எல்லாம் ரெடி மச்சி
“ஹ்ம்ம்” தலையில் தட்டிக்கொண்டே பைக்கை கிளப்பினான்.. எப்படி மறந்தோம் என்பதையே நினைத்துக்கொண்டு.
ராகுல்.. ஆதியின் நெருங்கிய நட்பில் அவனும் சேர்த்தி.. , ஏழு பேரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் அவன் தலையை கொடுத்த துயர சம்பவம் அவர்களின் வாழ்வில் நீங்காத ரத்தக்கறையை ஏற்படுத்தி போயிருந்தது. ராகுலுக்கு குழந்தைகள் மீது எப்பொழுதும் பிரியம் அதனால் தான் இரண்டு வருடங்களாக அவனின் நினைவு தினத்திலும் பிறந்தநாளிலும் அவர்கள் சமர்பனா ஹோமில் குழந்தைகளுடன் கழிக்கின்றனர்.
பழைய நினைவுகளை வெளிர் பச்சை நிற அழகிய வீடு கலைத்தது..
“சூப்பர் வீடு டா…”
அந்த வீட்டை பார்த்ததும் வண்டியை கிரீச்சிட்டு வேகமா நிறுத்தினான் ஆதி.
“என்னடா ஆச்சு ?”
“இருங்கடா..” அவசரமாக போனை எடுத்து அதுல்யாவிற்கு டயல் செய்தான்.
“…. நீங்கள் அழைத்த தொலைபேசி எண் தற்பொழுது சுவிட்ச் ஆப் செய்ய பட்டுள்ளது தயவு செய்து சிறிது நேரம் கழித்து முயற்சி செய்யவும்”
நேரம் வரும், காத்திருப்போம்…..

No comments:
Post a Comment