Wednesday, 16 January 2013

வேர்களற்ற மரம்

தன்னியல்பை
மறந்து தொலைந்த
மரமொன்றை
அதன் வேர்கள்
தேடிக்கொண்டிருக்கிறது...

இறந்தகால விதைகளின்
வேர்க்குஞ்சுகள்
பற்றிப் பரவ
வேர்களற்ற மரத்தை
தேடிக்கொண்டிருக்கிறது...

நிறமிழந்த
பழுப்பு இலையொன்று
தன் முகாந்திரம் அறிய
வேர்களற்ற மரத்தை
தேடிக்கொண்டிருக்கிறது...

நசுக்கப்பட்ட
இளங்காயொன்று
தன்னை பறித்தெறிந்த
குரங்கின் லாவகம் காண
வேர்களற்ற மரத்தை
தேடிக்கொண்டிருக்கிறது...

பாலைவனமான
வனம் ஒன்று
தன் சரித்திர பக்கத்தை
புரட்டிப் பார்க்க
வேர்களற்ற மரத்தை
தேடிக்கொண்டிருக்கிறது...

பயம் சூல் கொள்கிற
இருட் போர்வையினுள்
நுழைகிற இக்கணம்
முழுதும் நிரப்பப்படாத
அந்த ‘தாளில்’
வேர்களற்ற மரத்தின்
இயலாமைகள்
வழிந்தோடி
நிரப்புகிறது......

No comments:

Post a Comment