Wednesday, 16 January 2013

இது காதல் செய்யும் நேரம் – 5



மறுபடியும் அழைத்து பார்த்தான் அதே சுவிட்ச் ஆப் செய்தி தான் வந்தது. அவன் நின்ற இடத்தின் எதிரே இருந்த அந்த வெளிர் பச்சை நிற வீடு சாட்சாத் அதுல்யாவின் வீடே தான். இன்னும் சிறிது நேரம் நின்று பார்க்கலாம் என்று தோன்றியபொழுது நண்பர்கள் ஆதியை நோக்கி “டேய் என்னடா ஆச்சு ? ஏன் இப்படி நிக்கிற ? டைம் ஆச்சு மச்சி வா டா போகலாம் ” அவன் கவனம் இவர்களின் பக்கம் திரும்ப சில வினாடிகள் பிடித்தன , பிறகு தலையை சிலுப்பி கொண்டே கிக்கரை உதைத்து வண்டியை விரட்டினான்.
“என்ன மச்சி ஆச்சு ஏன் டா அங்கன நின்ன ?”
“ஒன்னும் இல்ல டா..”
“டேய் அவன் கேட்டா மட்டும் அப்படியா சொல்லிடுவான் பாரு .. சரியான ஊமைக்குசும்பன் டா ..”
ஆதி சிரித்துக்கொண்டே மழுப்பி விட்டான்.
சமர்பனாவை அவர்கள் அடைந்த நேரம் உச்சி வெயில் தலையை சுட்டெரித்துக்கொண்டிருந்தது . நண்பர்களுடனும் குழந்தைகளுடனும் நேரம் கழித்துக்கொண்டிருந்த ஆதி அதுல்யாவிற்க்கு போன் செய்ய வேண்டும் என்பதையே மறந்து விட்டிருந்தான்.மதிய உணவை முடித்துக்கொண்டு ஐஸ்கிரீம் சாப்பிடும் நேரத்தில் சரியாக அதுல்யாவின் ஞாபகம் வந்தது. திடுக்கென்ற ஒரு அச்சம் தோன்ற போனை எடுக்க பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டவன் தேள் கொட்டினாற்போல அலறினான் “டேய் என் மொபைல் யார் கிட்ட டா இருக்கு..”
“தெரியலையே மச்சி நீ தானே வச்சிருந்த “
“ஆமாம் டா பேண்ட் பாக்கெட்ல தான் டா வச்சிருந்தேன்.. ஆனா காணோம் டா ..”
“நல்ல தேடி பாருடா.. இல்ல இங்க பசங்க யார்கிட்டயாவது விளையாட கொடுத்தியா ?”
“இல்லையே டா … ” வேதனையும் எரிச்சலும் கலந்த குரலில் ஆதி சோர்ந்து தரையில் அமர்ந்து விட்டான்.
எங்கே தேடியும் கிடைக்கவில்லை. சரி குழந்தைகள் என்றாவது ஒரு நாள் தானே சந்தோஷமாக இருக்கின்றனர் என்று அதை பற்றி பேசாமல் விட்டு விட்டான் ஆதி. வந்தபொழுது இருந்த உற்சாகம் குறைந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை ஆதி. இருந்தும் மனம் அதுல்யாவையே சுற்றி சுற்றி வந்தது. பொறுக்க இயலாமல் நண்பனிடம் போனை வாங்கி அதுல்யா எண்ணிற்கு டயல் செய்தான்.
“நீங்கள் அழைத்த தொலைபேசி எண் தற்பொழுது …” ச்சுசென்று எரிச்சல் கொட்டிய ஆதி தனக்குளே புலம்பிக்கொண்டான் “ஹ்ம்ம் ஆ ஊன்னா இந்த போன் சுவிட்ச் ஆப் பண்ணி வைக்கிற பழக்கத்த மொதல்ல இவகிட்ட மாத்தனும்”
அந்தி சாய்ந்த நேரத்தில் குழந்தைகளிடம் பிரியா விடை பெற்றுக்கொண்டு கிளம்பினர். இப்பொழுது ஆதிக்கு தன் மொபைல் பற்றிய எண்ணமே ஓடிக்கொண்டிருந்தது. ஆதி தன் வீட்டிற்க்கு பிரியும் சாலையில் திரும்பி நண்பர்களிடம் விடை பெற்றான்.
“மச்சி பாப்போம் டா..”
“எங்கடா போற..?”
“ஏன்டா வீட்டுக்குத்தான் … வேற எங்க ?” குழப்பத்துடன் ஆதி அவர்களை நோக்கினான்
“இல்லடா இத விட்டுட்டு போறியே..” நண்பர்களில் ஒருவன் அதனை அவனிடம் நீட்ட , இருளில் சரிவர தெரியாமல் கூர்ந்து நோக்கிய பின் அது தன்னுடைய மொபைல் தான் என்று ஆதிக்கு புரிந்து போயிற்று ..
“போங்கடா !@#$%^&* அறிவுக்கெட்டவனுகளா ..” முடிக்கும் முன்னரே
“சரி சரி மச்சி டென்ஷன் ஆகாத.. போய் பால் குடிச்சிட்டு தூங்கு….” நண்பர்களின் கூவல் காற்றை கிழித்துக்கொண்டு சென்று விட்டது
கடும் எரிச்சலுடன் , போனின் ஒளியை உயிர்ப்பித்து பார்த்தான் ஆதி .. 110 தவறவிட்ட அழைப்புகளை காட்டியது… அதில் அதுல்யாவினுடயது மட்டும் 106 காட்டியது
“போச்சுடா …ஹைய்யோ …” நடு ரோட்டில் வண்டியை நிறுத்தி விட்டு செய்வதறியாமல் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் ஆதி .
அதே நேரம்..
“ஆதி!!! உன்னை தான் இந்த உலகத்திலேயே அதிகமாக வெறுக்கிறேன்.. ” என்று எழுதி வைத்த முற்றுபுள்ளியை அதுல்யாவின் கண்ணீர் நனைத்திருந்தது..


நேரம் வரும், காத்திருப்போம்…..

No comments:

Post a Comment